பரியை நரியாக்கி வையை அழைத்த படலம்

பரியை நரியாக்கி வையை அழைத்த படலம் இறைவனான சொக்கநாதர் மாணிக்கவாசகருக்காக நரிகளை பரியாக்கி அழைத்துவந்து பின் பரிகளை நரிகளாக்கி மாணிக்கவாசகரை காப்பதற்காக வையை பொங்கி எழச்செய்ததைக் குறிப்பிடுகிறது.

இறைவனார் பரிகளை நரிகளாக்கியது, மாணிக்கவாசகரை அரிமர்த்தன பாண்டியன் ஆற்றின் சுடுமணலில் படுக்க வைத்து தண்டித்தது, இறைவனார் மாணிக்கவாசரைக் காப்பாற்ற வையை பொங்கி வரச்செய்தது ஆகியவற்றை இப்படலம் விளக்கிக் கூறுகிறது.

பரியை நரியாக்கி வையை அழைத்த படலம் திருவிளையாடல் புராணத்தின் ஆலவாய்க் காண்டத்தில் அறுபதாவது படலமாக அமைந்துள்ளது.

பரிகள் நரிகளாக மாறுதல்

அரிமர்த்தனின் அவையில் இருந்து திரும்பிய மாணிக்கவாசகர் இறைவனின் திருவருளை எண்ணி ஆர்ச்சயத்துடன் கூடிய மகிழ்ச்சியில் திளைத்தார். இறைவனை மனதார துதித்து வழிபட்டார்.

அன்று சூரியன் மறைந்ததால் பகல் முடிந்து இரவின் அடையாளமாக சந்திரன் தோன்றியது.

நடுஇரவில் இறைவனின் திருவருளால் குதிரைகளாக மாறிய நரிகள் எல்லாம் பழைய வடிவத்தை அடைந்தன.

குதிரைக் கொட்டகையில் அடைக்கப்பட்டிருந்ததால் அவைகள் எரிச்சல் அடைந்து ஊளையிட்டன. அரிமர்த்தனனின் குதிரை லாயத்தில் கட்டியிருந்த பழைய குதிரைகளை நரிகள் கடித்துக் குதறின.

குதிரைகள் வலி தாங்க முடியால் அலறிச் சாய்ந்தன. இதனால் பேரிரைச்சல் ஏற்பட்டது. குதிரை லாயத்திற்கான பணியாட்கள் பேரிரைச்சலால் கண்விழித்து நடந்தவைகளைப் பார்த்து திகைத்தனர்.

அரிமர்த்தனனிடம் நடந்தவைகளை கூறச் சென்றனர். அந்நேரம் நரிகள் ஆத்திரத்தில் ஊளையிட்ட வண்ணம் காட்டை நோக்கி ஓடின.

அரிமர்த்தனன் மாணிக்கவாசகரைத் தண்டித்தல்

நடந்தவைகளை கேள்வியுற்ற அரிமர்த்தன பாண்டியன் மாணிக்கவாசகரின் மாயச் செயலாலே குதிரைகள் அனைத்தும் நரிகளாக மாறிவிட்டதாகக் கருதினான்.

ஆத்திரத்தில் தண்டல்காரர்களிடம் “அக்கொடியவன் அரசபணத்தைக் கொள்ளை அடித்துவிட்டு அதனை மறைக்கவே, ஏதோ மாயங்கள் செய்து குதிரைகளைக் கொண்டுவந்து, அவற்றை நரிகளாக மாற்றி ஏற்கனவே இருந்த குதிரைகளையும் கொல்லச் செய்துவிட்டான்.

ஆதலால் அவனுக்கு சரியான தண்டனை அளித்து, அரசப்பணத்தை மீட்டெடுங்கள்” என்று கட்டளையிட்டான்.

அரசனின் ஆணையைக் கேட்டதும் தண்டல்காரர்கள் மாணிக்கவாசகரின் மாளிகைக்குச் சென்றனர். அவர் அங்கு தியானத்தில் இருந்தார்.

அவரை எழுப்பி நடந்தவைகளைக் கூறி அவரை அழைத்துச் சென்றனர். மாணிக்கவாசகரும் அவர்களுடன் ஏதும் கூறாமல் இறைவனை எண்ணியபடி நடந்து சென்றார்.

தண்டல்காரர்கள் அவருடைய கை மற்றும் கால்களில் பாங்கற்களை ஏற்றி வைத்து வெற்று உடம்புடன் நண்பகலில் வையை ஆற்று மண்ணில் படுக்கச் செய்தனர்.

மாணிக்கவாசகர் ஆற்றுமண்ணின் சூடு தாங்காமல் அலறித் துடித்தார். “இறைவா, இது என்ன சோதனை?. என்னைக் காப்பாற்றுங்கள்” என்று உருகினார்.

இறைவனார் வையை பொங்கச் செய்தல்

மாணிக்கவாசகரின் குரல் கேட்டு உருகிய இறைவனார் அவருக்கு அருள் செய்யும் நோக்கம் கொண்டார். இறைவனாரின் திருவருளால் வையையில் தண்ணீர் வரத் தொடங்கியது.

மழை ஏதும் பெய்யாமல் ஆற்றில் தண்ணீர் வருவதைக் கண்டதும் தண்டல்காரர்கள் திகைத்தனர். நேரம் செல்லச் செல்ல வையையில் தண்ணீர் வருவது அதிகரித்து வெள்ளமாக மாறியது.

மாணிக்கவாசகர் இருந்த இடத்தில் மட்டும் வெள்ளம் வராமல் தண்ணீராக மட்டும் வையை ஓடியது.

நடந்தவைகளைப் பார்த்துக் கொண்டிருந்த மாணிக்கவாசகர் இறைவனாரின் திருவிளையாடலை எண்ணியபடி இருந்தார். நேரம் ஆகஆக வையையின் வெள்ளம் கரையை உடைக்கத் தொடங்கியது.

இப்படலம் கூறும் கருத்து

அடியவர்களின் துன்பத்தினை இறைவனார் விரைந்து வந்து தீர்ப்பார் என்பதே இப்படலம் கூறும் கருத்தாகும்.

வ.முனீஸ்வரன்

 

முந்தைய படலம் நரியை பரியாக்கிய படலம்

அடுத்த படலம் மண் சுமந்த படலம்

 

One Reply to “பரியை நரியாக்கி வையை அழைத்த படலம்”

Comments are closed.