பழைய பேப்பர், புத்தகங்களை எடைக்குப் போட்டுக் கிடைத்த பணத்தை வாங்கிக் கொண்டு சாரங்கன் வீட்டுக்குள் நுழையும்போது “சாரங்கா எப்படியிருக்கே?” என்ற குரல் கேட்டுத் திரும்பினால், அவரது நண்பர் மாதவன்,
இருவரும் அரசாங்க உத்தியோகத்தில் ஒவ்வொன்றாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் நின்றிருந்தனர்.
“வாப்பா மாதவன், என்னவோ ஓடிக்கிட்டிருக்கு. நீ எப்படி இருக்கே? எங்கே இவ்வளவு தூரம்?”
“நல்லாயிருக்கேன் சாரங்கா, பெண் கல்யாண விஷயமாய் வந்தேன். அப்படியே உன்னையும் பார்த்துட்டும் போகலாமேன்னுதான். உன் பெண்ணுக்கு வரன் ஏதாவது அமைஞ்சுதா?”
“அதை ஏன் கேட்கிற? வேலைக்குப் போய் கொஞ்ச நாள் சம்பாதிக்கணுமாம். இப்போ கல்யாணம் வேண்டாம்னு சொல்லிக்கிட்டிருக்கா. பையன் ஒரு மல்டி நேஷனல் கம்பெனியில் செலக்ட் ஆகி டிரெயின்ங்ல இருக்கான்.”
“ரொம்ப சந்தோஷம் சாரங்கா, ரிடையர்மெண்ட் லைப் எப்படிப் போய்க்கிட்டிருக்கு. வேலைக்கு எங்காவது போறியா?”
“போகலாம்னு ஆசைதான். பையனும் இனிமேல் தான் சம்பாதிக்கப் போறான். பெண் கல்யாணத்துக்கு ஏதாவது கொஞ்சம் சேர்க்கலாமேன்னு ரெண்டு, மூன்று இடத்தில் வேலை கேட்டுப் பார்த்தேன். நாம் வாங்கிய சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்குகூட வராது போலிருக்கு.”
“எவ்வளவு தர்றதா சொல்றாங்க?”
“எட்டாயிரம்தான் கொடுப்பாங்களாம். விலைவாசி இருக்கிற இருப்பில் நாள் பூரா உழைச்சிட்டு இவ்வளவு குறைவான சம்பளத்துக்குப் போகனுமான்னு யோசனையா இருக்கு. பையன் சம்பளம் கொஞ்ச நாள்ல வந்துடும். பெண்ணும் வேலைக்குப் போக ஆசைப்படறா, அதனால் வேலை வேண்டாம்னு முடிவு பண்ணிட்டேன் மாதவா.”
“சாரங்கா இந்த காலத்துல பென்ஷன் வாங்கறவங்க காலத்தை ஓட்டுறது அவ்வளவு சுலபமில்லே. சொந்த வீடு இருந்தால், ஒரு மாதிரி இழுத்துப் பிடித்து வாழ்க்கையை ஓட்டலாம். நம்ம மாதிரி வாடகை வீட்ல இருக்கிறவங்க பாடு கொஞ்சம் கஷ்டம்தான். உனக்காவது எட்டாயிரம் கிடைக்கும்னு சொல்றே. ஆனா நானோ ஐயாயிரம் ரூபாய்க்கு வேலைக்குப் போறேன்” என்றார் மாதவன்.
மாதவன் இப்படிக் கூறியதற்கு சாரங்கன் பதிலேதும் கூறாமல் பேச்சை மாற்றி “என்ன சாப்பிடறே? காபியா? டீயா?” எனக் கேட்க…
“அதெல்லாம் எதுவும் வேண்டாம். இப்போ பழைய பேப்பர், புத்தகங்களை விலைக்குப் போட்டியே எவ்வளவு கிடைச்சுது?” என மாதவன் கேட்டார்.
“நூறு ரூபாய்கூட தேறலே மாதவா, பழசை அடிமாட்டு விலைக்குத்தான் எடுத்துக்கிறாங்க”
“இதுதான் நடைமுறை வாழ்க்கை சாரங்கா, ரிடையராவதற்கு முன் வாங்கிய முப்பதாயிரம் நாற்பதாயிரம் சம்பளத்தை ரிடையரான பிறகு எப்படி எதிர்பார்க்க முடியும்? இப்பப் போட்டியே பழைய பேப்பர் மாதிரி தான் நாமும்..”
மாதவன் இப்படி சொன்னதும், “என்ன சொல்றே” என சாரங்கன் கேட்டார்.
“வேலைக்குன்னு போனா, நம் தேக ஆரோக்கியம், வேலைத்திறன், சுறுசுறுப்பு ஆகியவைகளின் அடிப்படையில்தான் நம்மை எடை போடுவாங்க. அவங்க எதிர்பார்க்குற அம்சங்கள் அனைத்தும் இளைஞர்களிடம் இருக்கிறதுனால, அவங்களுக்கு மதிப்பும், மவுசும் நம்மைவிட அதிகம், சம்பளமும் அதிகம். சும்மா உட்கார்ந்துக்கிட்டு பொழுதை போக்காம ஏதோ கிடைச்ச வரை லாபம்ன்னு நினைக்கிறதுதான் சரி” என்றார் மாதவன்.
மாதவன் பேச்சில் இருந்த நியாயம் சாரங்கனுக்குப் புரிய ஆரம்பித்தது.
ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!