பேசும் ஓவியம் – திட்டச்சேரி மாஸ்டர் பாபு

அதிகாலை நேரம்.

“டீ, காபி! டீ, காபி! டீ, காபி!”

“வடை! வடை! வடை! வடை! சூடான வடை!”

குரலின் சர்ச்சைகளை கேட்டு கண் விழித்தாள் ரோகிணி.

ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்தாள். இரவு முழுதும் பொழிந்த பனிச்சாரலில் நனைந்த ரோஜாவை போல் அவளின் முகம் மலர்ந்திருந்தது.

மீனைப் போல் வளைந்த புருவமும், பார்ப்பவரை மறுபடியும் திரும்பி பார்க்க வைக்கும் காந்த விழிகளும் அவளுக்கென்று அழகாய் இருந்தது.

நெற்றியின் நடுவே ஸ்டிக்கர் பொட்டும், ஆரஞ்சு பழ உதட்டின் ஓரத்தில் சிறிய மச்சமும் வகிடு எடுக்கத் தோணாத மின்னல் கொடியைப் போன்று நெளிந்த கூந்தலும் அவள் முகத்திற்கு கூடுதல் அழகைச் சேர்த்திருந்தது.

அவள் அழகை வர்ணிக்க வார்த்தைகள் போதாது. பிரம்மன் படைக்க தவறிய சிற்பமாக விளைந்திருந்தாள் அவள் என்று தான் சொல்ல வேண்டும்.

இடையில் கண்டக்டரின் குரல் அவளின் மௌனத்தை கலைத்தது “ஏம்மா எல்லாரும் இறங்குங்க. இதுக்கு மேல வண்டி போகாது. வண்டி செட்டுக்கு போகுது.”

பேருந்து திருப்பூர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தது. சுதாரித்துக் கொண்ட ரோகிணி கையில் பேக்கை எடுத்துக் கொண்டு பஸ்ஸை விட்டு கீழே இறங்கி ஆட்டோ ஸ்டாண்டை நோக்கி நடந்தாள்.

சிறிது தூரத்தில் தென்பட்ட ஒரு ஆட்டோவில் ஏறி உட்கார்ந்து ஒரு துண்டு சீட்டில் எழுதி வைத்திருந்த விலாசத்தைக் காட்டினாள். ஆட்டோவின் இன்ஜின் சூடு பிடித்தது.

அரை மணி நேர ஓட்டத்திற்குப் பிறகு ஆட்டோ அப்பார்ட்மெண்ட் வாசலை வந்தடைந்தது. ரோகிணி ஆட்டோவைக் கட் செய்து விட்டு இறங்கி நடக்க, எதிர்பட்டாள் காவியா.

“ஏய் ரோகிணி! எப்பிடி இருக்க? வர்ற வழியில உனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே!”

‘இல்லை’ என்று ரோகிணி தலையை அசைத்தாள்.

காவியா ரோகிணியின் கையில் உள்ள பேக்கை வாங்கிக் கொள்ள, இருவரும் நடந்தனர்.

காவியாவின் வீட்டில் இருவரும் பேசிக்கொண்டு இருந்தனர்.

“அடியே ரோகிணி! என்னடி வந்ததுல இருந்து ஒண்ணுமே பேசாம உக்காந்துட்டு இருக்க? நேத்து நீ போன் செஞ்சி இங்கே வரேன்னு சொன்னதும் நான் பயந்துட்டேன் தெரியுமா! ஏன் வீட்டில ஏதும் பிரச்சனையா?”

“அதெல்லாம் ஒன்னும் இல்ல. வீட்டில இருந்து அம்மா, அப்பா போன் பண்ணினா எனக்குத் தெரியாது. அவள் இங்கே வரலைன்னு சொல்லிடு.

“அப்புறம் மனசுக்கு கொஞ்சம் சரியில்ல. அதான் உன்னைய பார்த்துட்டு கொஞ்ச நாள் இங்கே தங்கிட்டு போலாம்னு வந்தேன். நீ வேற என்னைய துருவி துருவி கேள்வி கேட்காத. என் மனசு அமைதியா ஆனதும் நானே உனக்கு சொல்லுறேன். என்ன சரியா? அடுத்ததா நீ வேலை பாக்குற பனியன் கம்பெனியிலேயே எனக்கும் ஒரு வேலை வாங்கி கொடு. என்னால சும்மா இருக்க முடியாது தெரிஞ்சுக்க.”

“சரிடியம்மா சரி. உன் இஷ்டம் போலயே இங்க தங்கிக்க. நான் ஒன்னும் கேக்கல. அப்புறம் இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை. கம்பெனி லீவு. நீ படுத்து ரெஸ்ட் எடு. நாளைக்கு காலையில 8 மணிக்கு நாம கிளம்பி வேலைக்கு போகலாம். நான் மேனேஜர்கிட்ட போன்ல சொல்லிடறேன் சரியா?” என்றாள் காவியா.

அதன் பிறகு காவியாவும் ரோகிணியிடம் அவள் திருப்பூர் வந்த காரணம் பற்றி கேட்க மறந்தே போனாள்.

ரோகிணியும் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்து இன்றோடு நான்கு மாதங்கள் ஆகிவிட்டன.

இதற்கிடையில் அதே கம்பெனியில் வேலை பார்க்கும் சரணுக்கும் ரோகிணிக்கும் பழக்கம் ஏற்பட்டது.

ரோகிணியின் காதல் சிறையில் அடைப்பட்டிருந்த சரண் தன் காதலை எப்படியாவது ரோகிணியிடம் தெரியப்படுத்தி விட வேண்டும் என்று துடியாய் துடித்துக் கொண்டிருந்தான்.

ஒரு நாள் அதற்கு வாய்ப்பும் கிடைத்தது. ரோகிணி கம்பெனியில் தனிமையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில், சரண் மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு வாங்கி வைத்திருந்த ரோஜாவை கையில் ஏந்தியவாறு ரோகிணி அருகே சென்று தன் மனதில் உள்ள காதலை வெளிப்படுத்தினான்.

ரோகிணி பூவை கையில் வாங்காமல் தட்டி விட்டாள். “என்னைப் பற்றி உனக்கு என்ன தெரியும்? நான் இதுவரைக்கும் உன்னை அப்படி நினைத்து கூட பார்த்தது இல்லை.”

“என்னை ஏத்துக்கோ ரோகிணி. நீ இந்த கம்பெனியில் சேர்ந்த முதல் நாளிலேயே உன்னைய எனக்கு பிடிச்சு போச்சு. எப்பவும் உன் நினைப்பாவே இருக்கு. உன்னைய ஒருநாள்கூட பார்க்காம இருந்ததே இல்ல தெரியுமா? நீ இல்லாம என்னால ஒருநாள்கூட வாழ முடியும்னு தோணல ரோகிணி. என்னையே நீ ஏத்துக்கோ” என்று மன்றாடினான்.

“அப்படி என்றால் உனக்கும் எனக்கும் ஒரு பெட்.”

சரண் பரவசமானான். “என்ன ரோகிணி சொல்லு! என்ன பெட்? எதுவா இருந்தாலும் சொல்லு! என்னால முடியும்.”

“இப்போ மணி அஞ்சு. இதிலிருந்து 24 மணி நேரம் என்னைய பாக்காம, பேசாம இருந்துட்டு, அப்புறம் இதே போல கையில ரோஜவோட வந்துடு. நான் தயாரா இருப்பேன்” என்று சொல்லிவிட்டு காவியா இருப்பிடத்திற்கு வந்தாள் ரோகிணி. இருவரும் கம்பெனியை விட்டு வெளியே இறங்கி நடந்தனர்.

மறுநாள் சாயந்திரம் 5 மணி. சரண் ரோகிணியை காணும் ஆவலோடும் நெஞ்சம் நிறைந்த காதலோடும் ரோஜாவை கையில் ஏந்தியபடி காவியாவிண் வீட்டிற்கு சென்றான்.

அங்கு அவன் கண்ட காட்சி அவனை உறைய வைத்தது.

ரோகிணி புடவையில் அலங்கரிக்கப்பட்டு, நெற்றியில் குங்குமம் இட்டு, தலையில் பூச்சூடி, முகத்திற்கு மஞ்சள் பூசி புதுமணப்பெண் போல் அலங்கரிக்கப்பட்டு, கால் கட்டை விரல் இரண்டையும் ஒன்றிணைத்து கட்டி மூச்செற்ற அவள் உடலை கட்டிலில் படுக்க வைத்திருந்தனர்.

காவியா சரணைக் கண்டதும் ஓடிவந்து கதறி அழ ஆரம்பித்தாள்.

“டேய் சரண்! ரோகிணி நம்பள விட்டுட்டு போயிட்டா டா! அவளுக்கு ஏற்கனவே ரத்த புற்றுநோய் இருந்திருக்கு. டாக்டர் பாத்துட்டு ஆறு மாசத்துக்கு மேல வாழ்வது சாத்தியம் இல்லைன்னு சொல்லி இருக்காங்க.

இது அவளுக்கு தெரிஞ்சதும் அம்மா அப்பாகிட்டகூட சொல்லாம வீட்டை விட்டு ஓடி வந்து இருக்கா. நான் கேட்டப்பகூட ‘இப்போ எதையும் கேட்காத. நான் அப்புறமா சொல்றேன்னு’ மறச்சுட்டா.

நேத்து நைட்டு உன்னைய பத்தி என்கிட்ட ரொம்ப நல்லா தான் பேசிக்கிட்டு இருந்தா. என்னன்னு தெரியல திடீர்னு ரத்த ரத்தமா வாந்தி எடுத்தா.

எனக்கு என்ன ஏதுன்னு தெரியல. அப்போ அவசரமா செய்கைய காமிச்சு அவளுடைய பேக்கை எடுத்துட்டு வர சொன்னா. நானும் எடுத்துட்டு வந்து கொடுத்தேன்.

அவசரமா பேக்கில் கையை விட்டு டாக்டர் ரிப்போர்ட்டை எடுத்து என்னிடம் கொடுத்துவிட்டு என் மடியில் அப்படியே சாய்ந்து அடங்கிட்டாடா” என்று சொல்லி கதறி அழுதாள்.

சரண் சாவி கொடுத்த பொம்மை போல் ரோகிணியின் உடல் அருகே சென்று அவள் காலை பற்றி அப்படியே மண்டியிட்டான். கண்களில் நீர் வழிந்து சொட்டத் தொடங்கியது.

அப்போது ரோகினியின் மருதாணி இட்டு சிவந்த அழகிய கையில் ஒரு கடிதம் இருப்பது அவன் கண்ணில் பட்டது. சரண் பிரித்து பார்த்தான்.

சரண் இன்னும் வாழ்கிறான் அவளுக்கு உறவாக அவள் புகைப்படத்திற்கு துணையாக. புகைப்படத்தின் அருகே இரண்டு கடிதங்கள் இருக்கின்றன. ஒன்று ரோகிணியுடையது. மற்றொன்று சரணுடையது.

அதில் இரண்டு வரிகள் இப்படி எழுதப்பட்டிருந்தண.

திட்டச்சேரி மாஸ்டர் பாபு