மரங்களும் சுயசார்பும் – அன்றைய கிராமங்கள்

மரங்களும் சுயசார்பும் எப்படி அன்றைய கிராம வாழ்வை செம்மைப் படுத்தின என்பதை இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டும் என்கிறார் இராமமூர்த்தி இராமாநுஜ‌தாசன்.

சுயசார்பு வாழ்க்கை என்பது பிறரை எதிர்பார்க்காமல் அவரவர் தேவையை அவரவரே நிறைவேற்றிக் கொள்ளுதல் ஆகும்.

அவ்வகையில் அன்றைய கிராமங்களில் மக்கள் பல்வேறு வகையான மரங்களை வளர்த்து தங்களின் அன்றாட‌ தேவைகளை நிறைவேற்றிக் கொண்டனர். அம்மரங்களைப் பற்றிய பார்வையே இக்கட்டுரை.

வேளாண்மை முக்கிய தொழிலாக விளங்கிய அக்காலகட்டத்தில் கலப்பைகள் செய்ய வேலமரம் தேவைப்பட்டது.

பரம்பு செய்ய வாகை மரம் தேவைப்பட்டது.

நுகத்தடி செய்ய நுணாமரம் தேவைப்பட்டது.

(நுகத்தடி என்பது இரு மாடுகளின் கழுத்தில் வைத்துக் கட்டப்படும் மரத்தாலான, நீளமான கட்டை. இதை ஏர் ஓட்டும் போதும் வண்டி இழுக்கும் போதும் மாடுகளின் கழுத்தில் வைத்துக் கட்டுவார்கள்.)

தாத்துக்கோல் செய்ய மூங்கில் தேவைப்பட்டது.

(தாத்துக்கோல் அல்லது தாற்றுக்கோல் என்பது அடம் பிடிக்கும் யானையை பயமுறுத்துவதற்காக முனையில் கூரிய கம்பி இருக்கும் ஒரு வகை மூங்கில்)

கயிறு திரிக்கவும் வீடு கட்ட ஓலைக்கும், பதநீர், வெல்லம், கற்கண்டு, விசிறி, மழைக்கு கூடை இவைகளுக்கும் பனைமரம் தேவைப்பட்டது.

நயமான கயிறு திரிக்க காசிலிச் செடிகள் தேவைப்பட்டன‌.

வைக்கோல் தாளைப் பயன்படுத்தி பிரமனை செய்தனர்.

சாயம் தோய்க்க அவுரி செடிகள் பயிரிட்டனர்.

விளக்கெரிக்க எண்ணெய்க்கு இலுப்பை மரங்களை தோப்பாக வைத்தனர். பல திருக்கோயில்களில் விளக்கேற்ற இலுப்பை மரங்கள் தோப்பாக வைத்து மானியமாக மன்னர்கள் கொடுத்துள்ளனர். இச்செய்திகளை பல சாசனங்கள் மூலமாக அறியலாம். அதாவது யாவற்றையும் சுயசார்பு நிலையில் வைத்தனர்.

நல்ல நிழலுக்கும், சிலவகைப் பயன்பாட்டிற்கும் புங்கமரம் வளர்த்தனர்.

வீட்டிற்கு தேவைப்படும் புளிக்கு புளிய மரம் வளர்த்தனர்.

இலை, காய், கனி, தண்டு, நார் இவைகளுக்கு வாழை பயிரிட்டனர்.

பழத்திற்கும் மரச்சாமான்களுக்கும் மாமரம் பயிரிட்டனர்.

நிழலுக்கும் சாப்பாட்டு இலைக்கும் பாதாம் மரம் வளர்த்தனர்.

வீட்டிற்கு தேவையான ஊறுகாய் செய்ய கிச்சிலி, எலுமிச்சை மற்றும் நார்த்தங்காய் மரங்கள் வளர்த்தனர்.

தேங்காய்க்கும் மற்றத் தேவைக்கும் தன்னுடைய பிள்ளையாக நினைத்து (தென்னம் பிள்ளை) தென்னை வளர்த்தனர்.

இன்று பெரும்பாலும் இவையாவற்றையும் எங்கு விற்கின்றார்கள் என்று இடம் தேடுகின்றோம்.

கிராமத்தில் நடக்கும் இறுதி சடங்கிற்கு அக்காலத்தில் மூங்கில் மற்றும் தென்னை ஓலையை விலைக்கு வாங்க மாட்டார்கள்.

தகனத்திற்குத் தேவையான மரம்கூட வெட்டிக் கொள்வார்கள். அன்றைக்கு தேவைக்கு மரங்கள் கிடைத்து வந்தன. எமக்குத் தெரிந்த வரையில் இந்நிலையே இருந்தது.

இன்றைக்கு இறந்தவர் ஈமச்சடங்கிற்கு பல்லாயிரம் பணம் தேவைப்படுகின்றது. இந்த நிலை வரக் காரணம் நாமே.

கிருமி நாசினிக்காக பராசக்தி என்று போற்றப்படும் வேப்பமரம் வளர்த்தனர்.

உணவிற்குத் தேவையான இலைக்கும், காய்களுக்கும் முருங்கை மரம் வளர்த்தனர்.

பூஜைக்குத் தேவையான மல்லிகை, முல்லை, கொடி சம்பங்கி மற்றும் துளசி போன்ற செடிகளை வளர்த்தனர்.

ஒரு வீடு கிராமத்தில் இருந்தபோது, சுயசார்பிற்காக இவ்வகை மரங்கள் வைத்திருந்ததால், சுற்றுச்சூழல் மாறாமல் இயற்கை சமநிலையோடு பருவ நிலைக்கு உகந்தது போல் இருந்தது.

அக்காலத்தில் சாலைகளில் பயணிப்போர்களுக்கு கால்கள் வெய்யிலில் சுடாதிருக்க சாலை ஓரங்களில் மரங்களை நட்டு வைத்தனர்.

மரங்களும் சுயசார்பும் இயற்கையோடு இயைந்த வாழ்வு வாழ உதவின. மரங்கள் வரங்கள் என்பதை இன்றைய தலைமுறையினர் உணர வேண்டும்.

இராமமூர்த்தி இராமாநுஜ‌தாசன்
திருநின்றவூர் 602024
கைபேசி: 9444410450

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.