முற்றுப்புள்ளி தொடர்புள்ளியானது …

முற்றுப்புள்ளி போலவே என்னை நினைத்தாய் – நான்
மூன்று முறை முட்டிடவே நீயும் வியந்தாய்
கற்பனையில் புல்லெனவே நீயும் நினைத்தாய் – நான்
கரும்பென நிமிர்ந்திட நீயும் வியந்தாய்

சிற்பமென்னைக் கண்டிடவே நீயும் மறுத்தாய் – உன்
சிந்தையிலிருந்து என்னைத் தூக்கி எறிந்தாய்
கற்களென என்னை எண்ணி நீயும் மிதித்தாய் – நான்
கற்சிலையாய் நின்றபின்னே கைகூப்பித் தொழுதாய்

அற்ற குளம் இவன்என என்னை நினைத்தாய் – இன்று
அல்லி மலர் கூட்டம் கண்டு நீயும் வியந்தாய்
ஒற்றை வரித் தமிழில் ச்சீய் என்றாய் – என்
உயர்வினைக் கண்டு இன்று வாயைப் பிளந்தாய்

முற்றுப்புள்ளி முயன்றால் தொடர்புள்ளியாம் – என்ற
முழு உண்மை வாழ்வின் வழித்துணையாம்
வெற்றி பெற நினைப்பவர் இதை உணர – பெறும்
வளர்ச்சிக்கு இங்கே தடையில்லையாம்

இராசபாளையம் முருகேசன்

கைபேசி: 9865802942

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.