றெக்கைகள் அற்ற போதும்…!

எங்கிலும் பறக்க வல்லதாய்
தகுதிச் சான்றுகளை சமர்ப்பிக்கிறது
றெக்கைகள் அற்றபோதும் மனம் …

நொடியினில் நிலவு கடந்து
நட்சத்திரங்களின் இடுக்குகளில் நுழைந்தெழுந்து
திரும்பி இங்கே வந்துவிடும்
வல்லமை பெற்றிருக்கிறது அது …

விழிகள் வியாபிக்கும் இடங்கள்
யாவையும் எல்லையாக்கிக் கொண்டு
கற்பனையிலும் கால் பதிக்கிறது
எப்போதும் அது …

உச்சிக்கிளை அமர்ந்து ஒய்யாரமாய்
ஆடியும் முறிதலின் முணுமுணுப்புகளில்
தன்னை விடிவித்துக் கொள்கிறது
இயல்பாய் அது …

விந்தையில் விந்தை என
வினோதங்களை உமிழ்ந்த போதும்
மந்தியென தாவுதலை மறந்தபாடில்லை
இப்போதும் அது …!!

கவிஞர் கவியரசன்
கடம்பத்தூர்
கைபேசி: 9894918250

கவிஞர் கவியரசன் அவர்களின் படைப்புகள்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.