வா மழையே! – கவிஞர் கவியரசன்

(மழையை வரவேற்கும் பூமியின் புலம்பல்)

வா மழையே ..!

நீண்ட இடைவெளிக்கு பிறகு
சந்தித்துக் கொள்கிறோம்
தூரமில்லா ஈரமாய்
நீயும் நானும் …

நீயும் நானும் நானும் நீயும்
சந்தித்துக் கொண்ட போதெல்லாம்
மனம் குளிர்ந்து செம்மலர் மணம் வீசினேன்
தழுவி நழுவிய சுகத்தில்…
இறுகி உருகி!

அலங்காரப் படுத்திக் கொண்ட அந்த
பச்சை ஆடையை கழட்டி எறிந்து
வறட்சி நிர்வாணத்தில் வதைபடுகிறேன்
பெருமரங்களின் இறப்பால்…

வெக்கையின் வேள்வியில்
வேதனை முற்றி வாய்ப்பிளந்து
வாடியதை அறிவாயா நீ …

நகரமயமாக்கலால்
விளைந்த நரகத்தில்…
அருவி வெற்று மலையாகவும்
ஆறு மணலாகவும் குளம் குட்டை ஏரி
இன்னும் இன்னுமாய் நிலை மாறி
விலை பேசும் நிர்பந்தத்தில் நிர்க்கதியாய் …

எத்திசையும் கருப்புமிழ்ந்து
சின்னதாய் தொடங்கி என்னில்
நீ ஒடுங்க வா
அடர்ந்து படர
வா பரவச மழையே ..!!

கவிஞர் கவியரசன்
கடம்பத்தூர்
கைபேசி: 9894918250

கவிஞர் கவியரசன் அவர்களின் படைப்புகள்

One Reply to “வா மழையே! – கவிஞர் கவியரசன்”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.