பாதை மாறிய பாதங்கள் – காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்

காலை மணி ஒன்பதரை.

ஹாலில் சுற்றும் சீலிங் ஃபேனின் சன்னமான ஒலியைத் தவிர‌ வேறு எந்த சப்தமுமின்றி வீடு ‘கல்’லென்று அமைதியாய் இருந்தது. ஆனால் ஆனந்தியின் மனதில் அமைதி இல்லை. அது பௌர்ணமி நாளின் கடலலைப் போல் பொங்குவதும் வடிவதுமாய் எண்ண அலைகளால் அலைக்கழிக்கபட்டு அமைதியின்றி தவித்தது.

செகன்ட் ஸ்டாண்டர்ட் படிக்கும் ஆறுவயது மகன் அன்பரசு பள்ளிக்கும், அரசுப் பணியிலிருக்கும் கணவன் சுதாகர் அலுவலகமும் சென்றாகி விட்டது.

பசித்தாலும் காலை டிபன் சாப்பிடப் பிடிக்கவில்லை. தலை வலிப்பதுபோல் தோன்றியது. நிஜமாகவே வலிக்கிறதா? குமையும் மனதின் வேதனையின் வெளிப்பாடா வலிப்பதுபோல் தோன்றுவது? புரியவில்லை அவளுக்கு.

காபியாவது குடிக்கலாம் என்று நினைத்தவளாய் கிச்சனுக்குள் நுழைந்தாள். தேவையான பாலை பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்துவிட்டு கப் ஒன்றை எடுத்து அளவாய் ஜீனியைப் போட்டு சமையல் மேடையில் வைத்தவளின் கண்கள் தாமாகவே சமையலறையிலேயே இருந்த சுவாமி படங்கள் வைத்திருந்த அலமாரிக்குச் சென்றன.

சுவாமி படங்களின் எதிரில் தாம்பாளத்தில் பூ, வெற்றிலை, பாக்கு, பழங்கள் இருந்தன.

நேற்று மதியம் கூடப்பிறந்த அக்காவும், அக்காவின் கணவர் சேகர் மாமாவும் தங்கள் பெண்ணின் கல்யாணத்திற்கு பத்திரிக்கை வைத்துக் கூப்பிட வந்தபோது அவர்கள் வாங்கி வந்தது.

‘உஸ்’ஸென்ற மிக மெலிதான சப்தத்துடன் பால் பொங்கிவரும் ஓசை. சட்டெனத் திரும்பி அடுப்பை அணைத்துவிட்டுப் பாலை கப்பில் ஊற்றி பாட்டிலிலிருந்து இன்ஸ்டன்ட் காபித் தூளை சின்ன ஸ்பூனால் எடுத்துப் பாலில் போட்டுக் கலக்கி விட்டு ஸ்பூனை சிங்க்கில் போட்டுவிட்டுக் காபிக் கப்பை எடுத்துக்கொண்டு ஹாலுக்கு வந்து சோஃபாவில் அமர்ந்தவளின் பார்வை மேஜைமேல் ஓரமாய்க் கிடந்த அக்கா மகள் சுதாமதியின் கல்யாணப் பத்திரிக்கை மீது சென்றது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை.

மதியம் அக்கா செல்வராணியும் மாமாவும் திண்டுக்கல்லிலிருந்து பத்திரிக்கை வைக்க வந்தார்கள். திடீரென்று சொல்லாமல் கொள்ளாமலெல்லாம் வந்து விடவில்லை. முதல் நாள் சனிக்கிழமையே ‘ஞாயிற்றுக்கிழமை ஒங்க வீட்டுக்காரருக்கு ஆபீஸ் லீவுதானே? நானும் மாமாவும் பத்திரிக்க வைக்க வரோம்னு’ அக்கா ஃபோனில் சொன்னபோது சந்தோஷமாய் சம்மதித்தாள் ஆனந்தி.

சனிக்கிழமை இரவு பத்து மணிக்குதான் வீட்டுக்கு வந்தான் ஆனந்தியின் கணவன் சுதாகர்.

சாப்பாடு போட்டுக் கொண்டே “என்னங்க நாளைக்கு மதியம் எங்க அக்காவும் மாமாவும் திண்டுக்கல்லுலேர்ந்து நம்ம சுதாமதி கல்யாணத்துக்கு பத்திரிக்க வெச்சு அழைக்க வரதா ஃபோன் பண்ணினாங்க. நாளை ஞாயித்துக் கெழம லீவுதானே! ஒங்க வீட்டுக்காரரு வீட்லதானே இருப்பாரு அவுர நேர்ல கூப்டனுமில்ல வர்றோம்னு சொன்னாங்க” என்று சொன்னாள்.

சுதாகர் பதிலேதும் சொல்லவில்லை.

“என்னங்க காதுல விழுந்துச்சா?”

“ம்..ம்..விழுந்திச்சி ஆனந்தி. ஸாரி, நாளைக்கு நான் கொஞ்சம் தஞ்சாவூர் வரைக்கும் போகணும்.”

பகீரென்றது ஆனந்திக்கு.

“என்ன சொல்றீங்க? பத்திரிக்க வெச்சு அழைக்க மாமாவும் அக்காவும் வராங்க. நீங்க தஞ்சாவூர் போகணும்கிறீங்க. அவுங்க வரும்போது நீங்க வீட்ல இல்லேன்னா அது மரியாதையா? ஏற்கனவே சொல்லிட்டுத்தா வராங்க. சொல்லாம தீடீர்னு வந்தாலும் வரப்போறது தெரியாதுன்னு சாக்கு சொல்லலாம். அப்டி என்ன மொட தங்கிப் போயிடும் தஞ்சாவூர் போகாட்டி. ஞாயித்துக்கெழம லீவுலகூட வெளியூரு போகணுமா? இது கொஞ்சங்கூட நல்லா இல்லீங்க. நாளைக்கு அவங்க வர்றச்சே நீங்க இல்லாட்டி அவங்க மொகத்த எப்டிப் பாப்பேன்? வேண்டாங்க நாளைக்கு வீட்டுலயே இருங்க. வர்றது என்னோட கூடப்பொறந்த அக்காவும், மாமாவுங்க. நெருங்கின ஒறவு. யாரோ இல்ல.”

“இல்ல ஆனந்தி. மறுபடி ஸாரி கேட்டுகறேன். ஒங்க அக்கா மாமாட்ட நா ஸாரி கேட்டதா சொல்லிடு. ஒன்னோட அக்கா பொண்ணு கல்யாணம் நீங்க சொல்வீங்களே சாஸ்த்ரம் சம்பிரதாயம்னு அதும்படிதா நடக்கும். அந்த கல்யாணத்துக்கு நா என்ன வரவா போறேன்” என்றபடி எழுந்து கை கழுவப் போனான் சுதாகர்.

செய்வதறியாது பிரமை பிடித்தவள்போல் அமர்ந்திருந்தாள் ஆனந்தி. இரவு முழுதும் கண்கள் நனைய நனைய அழுதபடி விழித்திருந்தாள்.

காலை ஏழு மணிக்கெல்லாம் சொன்னபடி தஞ்சாவூர் கிளம்பிப் போய்விட்டான் சுதாகர். இடிந்துபோய் அமர்ந்திருந்தாள் ஆனந்தி.

ஆழ்ந்த இறை நம்பிக்கை கொண்டது ஆனந்தியின் பிறந்த வீடு.

அப்பா அரசுக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியர். தமிழ்ப்பற்றும் இறைப்பற்றும் நிரம்பப் பெற்றவர். ஆனந்தியின் தாயும் ஆன்மிகத்தில் ஆழ்ந்த பற்று கொண்டவர்.அதுவே ஆனந்தியும் ஆனந்தியின் அக்கா செல்வராணியும் கடவுள் பக்தியில் ஊறித் திளைப்பதற்குக் காரணமாயிற்று.

ஆனந்தியின் அக்கா செல்வராணியின் புகுந்தவீடும் இறைநம்பிக்கை கொண்ட குடும்பமென்பதால் அக்காவுக்குப் பிரர்ச்சனை இல்லாமல் போயிற்று.

சுதாகரை தனது மகள் ஆனந்திக்கு மணம் முடிக்க நினைத்தபோது அவனைப் பற்றிய அனைத்தையும் ஆனந்தியின் அப்பா விசாரித்தபோது அவனைப்பற்றி நல்ல விதமாகவே கேள்விப்பட்டாரே தவிற அவன் கடவுள் மறுப்புக் கொள்கையைத் தீவிரமாகப் பின்பற்றுபவன் என்பது தெரியாமல் போனது ஆனந்தியின் கொடுப்பினை.

‘ஆண்டவன் போட்ட முடிச்சு’ என்பதைத் தவிற வேறென்னவென்று நினைப்பது. சுதாகர் தங்கள் திருமணத்தை சுயமரியாதைத் திருமணமாக நடத்தவே விரும்புவதாகவும், அய்யர் வந்து மந்திரம் சொல்லி நடத்தும் திருமணத்தை தான் ஆதரிக்கவில்லை என்றும் சொன்னபோது ஆனந்தியின் தந்தை தவித்துதான் போனார்.

கடைசி நேரத்தில் திருமணத்தை நிறுத்தினால் பெண்ணின் வாழ்க்கை கேள்விக் குறியாகி விடுமோ என பயந்து போனார்.

சுதாகர் நல்ல பையன். என்ன! கடவுள் நம்பிக்கை இல்லாதவன். அது அவன் கொள்கை. அதைத் தவறென்று சொல்ல முடியாது. கடவுளை நம்பித்தான் ஆகவேண்டுமா என்ன?. நம்பாதவரெல்லாம் வாழத் தகுதியற்றவரா என்ன? அவரவர் கொள்கை அவரவர்க்கு.

யாரும் யாரின் நம்பிக்கையிலும் கொள்கையிலும் தாலையிடவோ தவறென்று கூறவோ முடியாது. கடவுள் இருக்கிறார் என்ற சித்தாந்தத்தை நம்பித்தான் ஆகவேண்டும் என்று வற்புறுத்தவும் முடியாது என்று சமாதானம் செய்துகொண்டார்.

திருமணம் ஆன அன்றே சுதாகர் ஆனந்தியிடம் “ஆனந்தி எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. மந்திரம் ஓதி தாலிகட்டும் திருமணத்தையும் நான் விரும்பாதவன். ஆனால் இவற்றிலெல்லாம் உனக்கு நம்பிக்கையும் ஈடுபாடும் இருந்தால் அதில் நான் தலையிடமாட்டேன். கடவுள், மதம் இவற்றோடு தொடர்புடைய எந்த விசேஷத்தையும் வீட்டில் நீ நடத்தலாம். ஆனால் அவை எதிலும் என்னைக் கலந்துகொள்ளும் படி வற்புறுத்தக்கூடாது.

முடிவாய் என்ன சொல்ல வருகிறேனென்றால் உன் கொள்கையிலும் நம்பிக்கையிலும் நான் தலையிட மாட்டேன். அதுபோல் என் கொள்கையிலும் நீ தலையிடாமல் இருப்பதையே நான் விரும்புகிறேன்” என்றான் அழுத்தமாக.

அதிர்ச்சியாகத்தான் இருந்தது ஆனந்திக்கு. ‘ஆனாலும் இது கடவுள் போட்ட முடிச்சு. முடிச்சை அவிழ்க்கவோ, பிரிக்கவோ யாராலும் முடியாது. இப்படித்தான் நமது வாழ்க்கையென ஆண்டவன் தீர்மானித்துவிட்டால் அதை யார்தான் மாற்ற முடியும்’ எனத் தன்னைத் தேற்றிக் கொண்டாள்.

சுதாகர் ஆனந்தியிடம் மிக அன்பாகவே இருந்தான்.

ஆடிவெள்ளி, தைவெள்ளி, நவராத்திரி, சிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி, சனிப்பிரதோஷம் இந்த நாட்களிலெல்லாம் அம்மாவோடோ, தோழிகளோடோ ஆனந்தி கோவிலுக்குச்செல்வது வழக்கம்.

திருமணமான பின்பு தனியாகவே போக வேண்டியிருந்தது. அதுவும் பிறந்தநாள், கல்யாணநாளிலும்கூட  தனியாகவே கோவிலுக்குச் செல்வது ஆனந்திக்கு மிகுந்த ஏமாற்றத்தையும் வேதனையையும் கொடுத்தது. கோயிலில் ஜோடி ஜோடியாகக் கணவனும் மனைவியுமாய் இளம் வயது முதல் வயதானவர்கள் வரை வருவதைப் பார்க்கும் போதெல்லாம் ஏக்கமாக இருக்கும்.

மகன் அன்பரசு பிறந்த பிறகு மகனைத் தூக்கிக் கொண்டு கோவிலுக்குப் போக ஆரம்பித்தபோது, கோயிலில் கணவனோடும் குழந்தையோடும் வரும் பெண்கள். கணவன் குழந்தையைத் தூக்கிக் கொள்ள, அர்ச்சனைக் கூடையை கையில்பிடித்தபடி  கணவனோடு முகத்தில் மகிழ்ச்சி பிரதிபலிக்க நடந்து செல்வதைப் பார்க்கும் போதெல்லாம் அந்த ஜோடிகளைப் பார்த்து ஏக்கம் இருமடங்கு ஆகும் ஆனந்திக்கு. கண்களில் கண்ணீர் அணை கட்டும்.

திருமணமான பிறகு நிறைய கல்யாணங்களுக்குப் போக வேண்டியிருந்தது. பெரும்பாலும் எல்லாமே அய்யர் வந்து மந்திரம் ஓத நடக்கும் திருமணங்களே. கணவன் சுதாகர் அவ்வகையான எந்த திருமணத்திலும் கலந்து கொள்ள மாட்டான். தனியாகத்தான் போவாள் ஆனந்தி.

இவள் தனியாகவே வருவதைப் பார்க்கும் சொந்தங்களில் சிலர் இவளைக் கேலியாய்ப் பார்ப்பதும், சிலர் கிண்டல் செய்வதும், சிலர் இவளை முன்னால் விட்டுப் பின்னால் பழிப்பதும், அவமானத்தால் தவித்துப் போவாள் ஆனந்தி.

ஒருமுறை வயதான உறவுக்காரப் பெண்மணி நேரிடையாகவே சொல்லி விட்டாள்.

“இதோ பாரு ஆனந்தி சொல்றேனேன்னு தப்பா நெனைக்காத. கட்டுக் கழுத்தி இப்பிடி பிறர் வீட்டு விசேஷங்களுக்கெல்லாம் எப்பவுமே தனியாளா அதாவது கணவனோடு வராம ஒண்டியா வரக்கூடாதும்மா. தவிர்க முடியாத காரணம்னா மட்டும்தான் ஒண்டியா வரலாம். ஆனா, நீ நான் பாத்தவரைக்கும் எப்பவுமே தனியாதான் வர. சாஸ்திரப்படி இப்பிடி புருஷனோடு வராம தனியா வர்றது அவ்வளவு நல்லதில்லம்மா. இத நாஞ் சொல்லல. சாஸ்த்திரம் சொல்லுது ஆனந்தி” என்றார். மனதளவில் நைந்து போனாள் ஆனந்தி.

இப்போது தனது சொந்த அக்காவின் மகள் திருமணத்திற்குக்கூட கணவன் வர மறுப்பது ஆனந்தியின் மனதை அறுத்தது. கலங்கிப் போய் அமர்ந்திருந்தாள் அவள்.

மாலை மணி நாலே முக்கால். வாசலில் பள்ளி ஆட்டோ வந்து நிற்கும் சப்தம். எழுந்து போய்க் கதவைத் திறந்தாள். மிகவும் சோர்வாய் உள்ளே நுழைந்த மகன் அன்பரசு ‘தொப்’பென சோபாவில் அமர்ந்து அப்படியே படுத்துக் கொண்டான்.முனக ஆரம்பித்தான்.

“அன்பு, என்ன கண்ணு. மொனங்கற பதைபதைப்போடு மகனைத் தொட்டுப் பார்த்தாள் ஆனந்தி. உடல் நெருப்பாய்க் கொதித்தது. சளிப் பிடித்தவன் போல் இருமினான் அன்பரசு.

“அம்மா, அம்மா ஒடம்பெல்லாம் வலிக்குதும்மா. தலை ரொம்ப வலிக்குதும்மா. கண்நுல தண்ணி தண்ணியா வருது. ஒதடும் நாக்கும் வரண்டு போவுதும்மா. முடீல” என்று அழ ஆரம்பித்தவனின் தலையை மடிமீது வைத்து சோபாவில் அமர்ந்தாள் ஆனந்தி.

மகனின் தலையை வருடி முகத்தை அன்போடு தடவியவளின் கையில் கொப்புளம்போல் ஏதோ நெருட குனிந்து பார்த்தவளுக்கு தூக்கி வாரிப் போட்டது. ஏதோ சந்தேகம் எழவே எதிர்வீட்டுப் பெரியம்மாவை ஃபோன் போட்டு அழைக்க, அவள் சந்தேகம் ஊர்ஜிதமானது.

“ஆனந்தி கொழந்தைக்கு அம்மை போட்ருக்கு.”

“பெரியம்மா, பயமாருக்கு பெரியம்மா”

“ம்கூம், பயமாருக்குன்னு சொல்லாத. அவ ஒலகத்துக்கே தாய். அவ இல்லாத எடம் ஏது? ஒரு பயமும் இல்ல. ஆனா ஒன்னு ஆனந்தி” என்று ஆரம்பித்து, வீட்டில் யாருக்காவது அம்மை போட்டிருந்தால் வீட்டில் இருக்கும் மற்றவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும், அம்மை கண்டிருப்பவர்க்கு என்ன ஆகாரம் கொடுக்க வேண்டும் என்பது போன்ற நீண்ட அறிவுரைகளை பெரியம்மா சொன்னபோது பக்தி சிரத்தையோடு கேட்டுக் கொண்டாள் ஆனந்தி.

வீட்டு வாசல் கேட்டில் வேப்பிலை செருகப்பட்டது. குழந்தை அன்பரசு வேப்பிலை படுக்கையில் படுக்க வைக்கப்பட்டான்.

இரவு சுதாகர் வீட்டுக்கு வந்தபோது வாசலில் வேப்பிலை செருகியிருப்பதும் வீடு வெகு சுத்தமாய் இருக்க அம்மனின் பாடல் மிக மெலிதாய் ஒலித்துக் கொண்டிருப்பதையும் கேட்டான்.

“என்னங்க, சட்டுனுபோய் தலைக்கு குளிச்சிட்டு வந்துடுங்களேன். அன்பரசுக்கு அம்மை போட்ருக்குங்க. நாம சுத்தபத்தமா இருக்கனுமாம். குளிக்காம புள்ளைகிட்ட போகக் கூடாதாம். எதித்த வீட்டுப் பெரியம்மா சொன்னாங்க”

“ம், என்னது அம்ம போட்ருக்கா வாட் நான்சென்ஸ்” என்று சொல்லியபடி,
“அன்பரசு, அன்பு” என்று அழைத்தபடி மகன் படுத்திருக்கும் அறைக்குள் செல்ல முயன்றான்.

“வேண்டாங்க வேண்டாங்க. கால் கை கழுவாமகூட போறீங்களே ஆகாதுங்க” தடுத்தாள் ஆனந்தி.

“என்ன ஆயிடும்? ஒன்னும் ஆகாது. நான் போய்ப் பாத்தா மாரியாத்தாக்கு கோவம் வந்துடுமோ? என்னதான் நடக்குது பாக்குறேனே” என்றபடி மேலும் அறை நோக்கி நடந்தவனை இருகைகளை விரித்துத் தடுத்தாள் ஆனந்தி.

“ச்சே, முட்டாள் ஜனங்க, மூட நம்பிக்கைங்க அந்த பெரியம்மாதான் அம்மகிம்மன்னு பேத்துனா நீயும் நம்புவியா? ஏதாவது அலர்ஜியா இருக்கும் இல்லாட்டி தொற்றா இருக்கும். அதப்போய் அம்ம, மாரியாத்தா, காளியாத்தானுகிட்டு என்றபடி சோபாவில் அமர்ந்து சிகரெட் ஒன்றை எடுத்து உதட்டில் வைத்தான்.

“ஐயோ! வேண்டாங்க, வேண்டாங்க. ஆத்தா புள்ள ஒடம்புல எறங்கிருக்கா. அம்ம போட்ருக்குற வீட்டுல சிகரெட்டுலாம் புடிக்கிறது கூடாதுங்க. ஆகாதுங்க. நானே நல்லபடியா புள்ள ஒடம்புலேந்து ஆத்தா எறங்கிட்டா அவன அழச்சுக்கிட்டு சமயபுரம் வரேன். புள்ளக்கி ஆத்தா கோயில்ல மொட்ட போடுறேன்னு வேண்டிக்கிட்டு மஞ்ச துணில ஒத்த ரூவா காசு முடிஞ்சி வச்சிருக்கேன். ஒங்களுக்கு கடவுள் நம்பிக்க இல்லாம இருக்கலாம். அதுக்காக ஆத்தாவ அப்பிடி இப்பிடீன்னுல்லாம் பேசாதிங்க.”

“மூடு வாய, யாரக் கேட்டு எம்புள்ளைக்கு மொட்ட போடுறதா வேண்டிக்கிட்ட. அவன் எம்புள. ஒன்னோட பைத்தியக்காரத்தனத்தெல்லாம் ஒன்னோட வெச்சுக்க. ஆத்தாவாம் ஆத்தா, யாருகிட்ட இதெல்லாம். புள்ளைக்கு மொட்ட போடுறாளாம் மொட்ட. சுத்த முட்டாள்தனம். இந்த பைத்தியக்கார வேலைக்கெல்லாம் நான் சம்மதிக்க மாட்டேன். தெரிஞ்சிக்க” என்று கோபமாய் கத்தினான் சுதாகர்.

இதுவரை கணவனை எதிர்த்தே பேசியறியாத ஆனந்தி, கணவன் மாரியாத்தாவை நிந்தித்துப் பேசியதோடு மகன் அன்பரசு சமயபுரம் கோயிலில் முடி காணிக்கைத் தருவதையும் கூடாது என எதிர்த்ததால் மனம் தாங்காது தானும் குரலை உயர்த்திப் பேசிவிட்டாள்.

அதனால் சுதாகர் மிகுந்த கோபத்தோடு “அம்மை கிம்மை சாமி கீமீன்னு சொல்லிக்கிட்டு வீட்டுல அதச் செய்யாத இதச் செய்யாதன்னு சொல்லுற அடக்குமுறைக்கு நான் ஆளாகமாட்டேன். நான் பத்துநாட்கள் ஹோட்டலில் அறையெடுத்துத் தங்கிக்கிறேன். நீயாச்சு உம் புள்ளையாச்சு” என்று கத்திவிட்டு பேக்கில் தேவையானவற்றை எடுத்துக்கொண்டு கிளம்பிப் போய்விட, வாய்விட்டு அழுதாள் ஆனந்தி.

ஹோட்டல் அறை.

கட்டிலில் படுத்திருந்த சுதாகருக்கு மனைவிமேல் கோபம் கோபமாக வந்தது.

‘முட்டாள்கள் கூட்டத்துல இவுளும் ஒருத்தி. இவ, இல்லாத ஒன்ன இருக்குறதா கடவுள் கடவுள்னு சொல்லிட்டுப் போகட்டும். எம்புள்ளையைக்கூட கெடுத்துடுவா போலிருக்கு. ச்சே! அடிமுட்டா ஜனங்க’ என்று நினைத்தவாறே புரண்டு படுத்தவனுக்கு தலை வகிட்டருகே அரித்தது.

சொரிந்து கொண்டான். கையை எடுப்பதற்குள் பின்தலை, பக்கவாட்டில், முன் தலையில், காதுக்குமேல், நடுத்தலையில் என்று அரிக்க ஆரம்பித்தது. சொரிய ஆரம்பித்த கைகளை எடுக்க முடியாமல் தலை முழுதும் ஓரிடம் விடாமல் அரிக்க ஆரம்பிக்க பயந்து போனான் சுதாகர். சந்தேகத்தின் பேரில் புதிதாக படுக்கை விரிப்பும் தலையணை உறையையும் மாற்றச் சொன்னான்.

இரவு முழுதும் அரிப்பு நிற்கவே இல்லை. அடுத்து வந்த எட்டு நாட்களும் மூன்று தோல்நோய் நிபுணரைப் பார்த்தாயிற்று. மாற்றி மாற்றி ப்ளட் டெஸ்ட்டுகளும், மருந்து மாத்திரைகளும், இன்ஜெக்ஷனும், மெடிகல் ஷாம்பூ வகையறாக்களும் பயன்படுத்தியும் எந்த பலனும் ஏற்படாமல் போயிற்று.

இதில் ஒரு மருத்துவர் வேறு, “சார், இதுக்கு மேலயும் எழுதிக் கொடுக்க மருந்து வேற இருக்குறதா தெரியல. புதுசா கண்டு புடிச்சாதான் உண்டு. நீங்க ஒங்க குல தெய்வத்தன்னா வேண்டிக்கிங்களேன். மாரியம்மன வேண்டிக்கிட்டு உப்பும் மிளகும் கோவிலுக்கு வாங்கி போடுறேன். முடி காணிக்க செலுத்துறேன்னு வேணா வேண்டிக்கிங்களேன். இறை பிரார்த்தனை என்னிக்கும் வீண்போகாது சார்” என்று இலவச ஆலோசனை கூறிணார்.

“டாக்டர் நீங்க பாக்குற மருத்துவத் தொழில மட்டும் பாருங்க. கோயில் பூசாரி வேலயெல்லாம் பாக்க வேண்டாம்” எனக் கத்தி சத்தம் போட்டு அவரை உண்டு இல்லை என ஆக்கிவிட்டு வந்தான் சுதாகர்.

பத்து நாட்கள் லீவும் முடிந்து போக மேலும் ஒருவாரம் அலுவலத்திற்கு ஃபோன் செய்து லீவு சொல்ல, அலுவலக நண்பர்கள் இவனை வற்புறுத்தி விஷயத்தைத் தெரிந்து கொண்டு இவன் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வந்தனர்.

“சுதாகர்! என்ன இது சீக்கு வந்த சேவக்கோழி மாதிரி தலைமுழுதும் இப்பிடி” என்று நண்பர் ஒருவர் ஆரம்பிக்க உடன் வந்த மற்ற நண்பர்களும் அதை ஆமோதிக்க, என்ன பதில் சொல்வது என்று புரியாமல் தவித்தான் சுதாகர்.

“ஏம்ப்பா சுதாகரா, இத்தன மருந்து மாத்திரைக்கும் கொஞ்சங்கூட அரிப்பு நிக்கிலங்கற தல முழுதும் புண்ணாகிக் கெடக்கு. முடி எல்லாம் கொட்டிப்போய், ஒருவித பேட் ஸ்மெல்கூட அடிக்குது. மனைவியோட கோச்சிக்கிட்டு இங்கயே எத்தன நாள் இருப்ப? அம்ம போட்ருக்குற புள்ளையோட ஒம்மனைவி என்னபாடு படுறாங்களோ? அவங்களோட கடவுள் நம்பிக்கேல ஒன்னும் தப்பு இருக்கறதா எனக்குத் தெரியல. இங்க ஒன்னப் பாக்க வந்துருக்குற எங்க எல்லாருக்குமே கடவுள் நம்பிக்க இருக்கு.

எல்லாருடைய சார்பாகவும் நான் சொல்றது என்னன்னா ஒன்னோட கடவுள் மறுப்புக் கொள்கைய சில நிமிடம் தள்ளி வெச்சுட்டு சமயபுரத்தாள்ட்ட, ‘அம்மா, இதோ எனக்கு வந்திருக்குற தலை அரிப்பும் புண்ணும் விரைவில சரியாகணும். மேற்கொண்டு எந்த பிரச்சனையும் இல்லாம பழையபடி ஆரோக்கியமான ஒடம்பத் தாம்மா. ஒங்கோயிலுக்கு வந்து முடிகாணிக்க செலுத்துறேன்னு’ வேண்டிக்க. அப்பறம் பாரு நடக்குற அதிசயத்த,

ஒன் தலைக்கு வந்துருக்குற பிரச்சனையெல்லாம் யாருக்கு வந்துதோன்னு ஓடியே போயிடும். ஒன்னவிட பல வயசு மூத்தவன்கிற உரிமையில சொல்றேன். கோவப்பட்டுப் பிரயோஜனம் இல்ல. நல்லத சொன்னேன். எடுத்துக்கறதும் விடுறதும் ஒன் விருப்பம். நாங்க கெளம்புறோம்” என்று சொல்லிவிட்டு அந்த ரிடயராகும் வயதிலிருந்த சுதாகரின் அலுவலக நண்பர் கிளம்பினார்.

அவர் சொல்வதை ஆமோதிப்பதுபோல், “ஆமா சுதாகர் சார், மனோகர் சார் சொல்றது சரிதான். பாத்துக்குங்க” என்று சொல்லிவிட்டுக்கு மற்றவர்களும் கிளம்பிப் போக, கடவுள் மறுப்புக் கொள்கையில் ஊறிப்போன மனம் சட்டென கண்ணிமைைக்கும் நேரம், தனது வீரியத்தை இழந்து பளீரென்று கொடி மின்னலென சிந்தனையொன்று எழும்பிச் சட்டென அடங்கியது. சிலையாய் அமர்ந்து விட்டான் சுதாகர்.

சிணுங்கிய செல்ஃபோனின் சத்தம் அவனை நிகழ்வுக்குக் கொண்டுவர, செல்லை எடுத்துப் பார்க்க மனைவி ஆனந்தி.

‘பத்து நாட்களாய் எத்தனைமுறை ஃபோன் செய்திருப்பாள். ஒருமுறைகூட போனை எடுத்துப் பேசாமல் வீம்பாய் மௌனம் காத்தவன், தான் இருக்குமிடத்தைக்கூடத் தெரிவிக்காதவன், சட்டெனத் தவிப்போடு ஃபோனை எடுத்துக் காதில் வைத்தாண்.

“என்னங்க” என்று ஆரம்பித்த ஆனந்தி அழவே ஆரம்பித்து விட்டாள். “ஏங்க நீங்க எப்டி இருக்கீங்க?”

“அழாத ஆனந்தி. அன்பு எப்பிடி இருக்கான்”

“அவுனுக்கு ரெண்டு மொற தலைக்கு தண்ணி விட்டாச்சுங்க. அம்மா நல்லபடியா முழுசுமா எறங்கிட்டா. இதுபத்திப் பேசுனா ஒங்குளுக்குப் புடிக்காது. ஆனாலும் வர்ற ஞாயித்துக் கெழம சமயபுரம் போயி அம்மாட்ட வேண்டிக்கிட்டாப்ல அன்பரசுக்கு முடி இறக்கலாம்னு இருக்கேங்க. எதித்த வீட்டுப் பெரியம்மா தொணைக்கு வரதா சொல்லீருக்காங்க. ஒங்ககிட்ட சொல்லாம போகக் கூடாதில்ல. நீங்க எப்பதாங்க வீட்டுக்குத் திரும்புவீங்க?”

“ஆனந்தி, நானும் வரேன் ஆனந்தி”

“எங்கங்க?”

“சமயபுரம் ஆத்தா கோயிலுக்கு”

“என்னங்க, என்னங்க! என்ன சொன்னீங்க, என்ன சொன்னீங்க? நீங்க கோவிலுக்கு வரீங்களா?” காதுகளை நம்ப முடியாமல் கத்தி விட்டாள் ஆனந்தி.

“ஆமா ஆனந்தி, நானும் சமயபுரம் ஆத்தாக்கு முடி காணிக்க செலுத்தப் போறேன். மொட்ட போட்டுக்கப் போறேன் ஆனந்தி” அவன் குரல் உறுதியோடு வெளிப்பட்டது.

‘என்னது என்னது என்னாச்சு இவருக்கு’ புரியாமல் தவித்தாள் ஆனந்தி. ‘திடீர்னு கோயிலுக்கு வரதா முடி காணிக்க செலுத்தப் போறதா சொல்றாரு. கடவுள்னு ஒன்னு இல்லவே இல்லங்கறல கொள்கையில விடாப்பிடியான பற்றோட இருந்த இவரு திடீர்னு மாறிப்போக காரணம் புரியலயே. இது ஆத்தா செஞ்ச மாயமோ. அவ நெனச்சா அரைநொடியில எல்லாம் மாறிப் போகாதா? அப்பிடி இவர் திடீர்னு மாறிப்போகக் காரணம்? புரியலயே, எனக்குப் புரியலயே என்ன காரணம்னாலும் எல்லாத்துக்கும் அவதான் காரணம். அவளேதான் காரணம்.’

“ஆத்தா, சமயபுரத்தாளே” ஆனந்தியின் வாயிலிருந்து பரவசத்தோடு வெளி வந்தது ஆத்தாவின் நாமம். கண்களில் ஆனந்தக் கண்ணீர் திரண்டது.

சுதாகர் துணிமணிகளைப் பையிலடைத்துக் கொண்டு ஹோட்டலைக் காலி செய்துவிட்டுக் கிளம்பி வீட்டுக்குள் காலடி வைப்பதற்குள் தலை அரிப்பு முற்றிலும் நின்று போயிருந்தது.

இறை சக்தி மகாசக்தி.

காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்
காஞ்சிபுரம்
கைபேசி: 9629313255

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.