விடுமுறையை எப்படி கழிக்கப் போகிறீர்கள்?

+2 வகுப்பு பொது தேர்வு 22.03.2024 அன்றோடு நிறைவு பெற்று இருக்கிறது. அதற்கு அடுத்த உயர் கல்வி தேர்ந்தெடுப்பிற்கான காலம் இரண்டு மாதங்கள்.

பன்னிரண்டாம் வகுப்பு ரிசல்ட் வந்து விட்டால் பரபரப்பாகி விடுவீர்கள். உங்களுக்கு கிடைத்த உங்கள் விடுமுறையை இவ்வளவு காலமும் சிறப்பாகத்தான் பயன்படுத்தி இருப்பீர்கள் என்று நம்புகிறேன். இன்னும் சிறப்பாக்க சில வழிகாட்டுதல்கள்.

முதல் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிப்பை நிறைவு செய்திருக்கிறீர்கள்.

கடந்த 12 ஆண்டுகளில் காலை அவசர விழிப்பு; காக்கை குளியல்; அரைகுறையாக அவசர காலை உணவு; பள்ளி முடித்து வந்தவுடன் டியூஷன்; இரவு உணவு; தூக்கம்.

ஒன்பதாம் வகுப்பு முதல் சனி ஞாயிறுகளிலும் படிப்பு. ஏதேனும் விசேஷங்களுக்கு உங்கள் பெற்றோர்கள் செல்லும் போது ‘அவர்களுடன் போகலாம்’ என்று நீங்கள் யோசிக்கும் போதே, “நாளை திங்கள் கிழமை உனக்கு டெஸ்ட் இருக்கிறது. நல்லா படி! வீட்டையும் பார்த்துக்கோ.. நாங்க போய் விட்டு வருகிறோம்” என்ற பதில் உங்களை தடுமாற வைத்திருக்கும்.

இது போன்ற பல சிக்கல்களை சவால்களை எதிர்கொண்டு வெற்றிகரமாக 12 ஆம் வகுப்பையும் நிறைவும் செய்து விட்டீர்கள். கடந்த 12 ஆண்டுகளில் நீங்கள் தொலைத்த சில விஷயங்களை இங்கே பட்டியலிடுகிறேன். அது உங்கள் விடுமுறையை பயனுள்ளதாக மாற்றும்.

உறவுகளிடம் பழகுங்கள்

நகரமயமாதல் எனும் கொள்கை சித்தாந்தத்திற்கு பிறகு நாம் நமது வாழ்க்கையை, நமது உணர்வுகளை, உறவுகளிடம் இருந்து தூரப்படுத்தி இருக்கிறோம். கூட்டுக் குடும்பமாக வாழ்ந்த காலம் மாறித் தனிக் குடித்தனமாக நகரமயமாதலில் நமது வாழ்க்கையையும் தொலைத்து இருக்கிறோம்.

பல குடும்பங்கள் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் பக்கத்து வீட்டுக்காரர் யார்? எப்படிப்பட்டவர்? என்று கூட நமக்குத் தெரியாது.

ஒரு பேச்சு வார்த்தை கூட இல்லாமல் கலைகின்ற நகரமய வாழ்க்கை உறவுகளிடம் மட்டுமல்ல அண்டை வீட்டுக்காரரிடம் பேசுவதையும் குறைத்திருக்கிறது.

இதற்கு மத்தியில் நமது கைகளில் செல்போன்; கண்களில் தொலைக்காட்சி. பற்றாக்குறைக்கு ஐபிஎல் கிரிக்கெட் மேட்ச்.

இதுபோன்ற இந்த கால சூழலில் நீங்கள் மீட்டெடுக்க வேண்டியது உங்கள் உறவுகளை.

உங்கள் அம்மா வழி உறவு;

அப்பா வழி உறவு;

அவர்கள் குடும்பத்தில் உள்ள உறவுகளின் சொந்த பந்தங்கள்.

உங்கள் குடும்ப உறவுகள்; அவர்களின் வாரிசுகளை நீங்கள் யோசித்துப் பார்த்தால் நீங்களே பிரமித்து போய்விடுவீர்கள்.

உங்கள் தந்தை பெயர் என்ன என்று கேட்டால் உடனே சொல்லி விடுவீர்கள். தந்தையின் தந்தை பெயர் கேட்டாலும் சொல்லி விடுவீர்கள். அவரின் தந்தையின் பெயர் யோசித்து சொல்லி விடுவீர்கள். நான்கு தலைமுறைகளுக்கு முன்னர் உள்ள உங்கள் தந்தையின் தாத்தாவின் பெயர் யோசித்தாலும் வராது.

சமூகத்தின் தேசத்தின் வரலாறுகளை தெரிந்து கொள்ள முற்படுகின்ற ஆசைப்படுகின்ற நீங்கள் உங்கள் குடும்ப பாரம்பரிய வரலாறுகளை தெரிந்து கொள்ள வேண்டாமா?

நிச்சயம் தெரிந்தே ஆக வேண்டும் என்று உறுதி எடுங்கள்.

இன்றைய பிரச்சனைகளுக்கான தீர்வு

எங்கள் குடும்ப பாரம்பரியத்தை தெரிந்து நான் என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்காதீர்கள்.

இப்போது உங்களுக்கு சிறு வயது தான்.

உங்கள் இல்லங்களில், சமூகத்தில், தெருக்களில் ஏராளமான பிரச்சனைகளை நீங்கள் பார்ப்பதுண்டு; சில நேரங்களில் அனுபவிப்பதும் உண்டு. நீங்கள் சிறு வயது என்பதால் அந்த பிரச்சனை உங்களை விட்டு அப்படியே கடந்து போய்விடும்.

இன்று சமகாலத்தில் பிரச்சனையை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கின்ற தவிப்பையும் நீங்கள் பலரிடமிருந்து பார்த்திருப்பீர்கள். இன்னும் கொஞ்ச காலத்தில் அது உங்களையும் ஆட்கொண்டு விடும்.

இதிலிருந்து நீங்கள் எப்படி விடுபட முடியும்?

பிரச்சனை என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மனிதருக்கும் வித்தியாசப்பட்டு இருக்கும். நீங்கள் சந்திக்கின்ற பொருளாதார பிரச்சினை எனக்கு வேறு வகையில் அது தெரியும்.

உங்களுக்கு பெரிய பிரச்சனையாக தோன்றும் நிகழ்வுகள் எனக்கு ஒரு பொருட்டாகவே தெரியாது.

இது போன்ற பிரச்சினைகளுக்கான தீர்வுகளை நாம் எங்கிருந்து பெற வேண்டும் தெரியுமா?

உங்கள் குடும்பத்தில் முன்னால் வாழ்ந்த முன்னோர்களிடமிருந்து தான் நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

உங்கள் வீடுகளில் தாத்தாக்கள் பாட்டிகள் இருந்தால் அவர்களிடம் அமர்ந்து கொஞ்சம் பேச்சு கொடுத்துப் பாருங்கள்.

உங்களுக்கு எது குறித்து தெரிய வேண்டுமோ அனைத்தையும் கேட்டுப் பாருங்கள். நிறைய பேசுவார்கள். அனைத்தையும் குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்.

பெரியவர்களிடம் மனம் விட்டு பேசுவதற்கு, ஆளில்லாத சூழலில் நீங்கள் பேசுகின்ற பொழுது அவர்களின் மனமும் சாந்தி அடையும். அவர்கள் வாழ்க்கையை எதிர்கொண்ட விதம் இன்று நமக்கு புதிதாக தெரியும்.

அந்த புதுமையில் இருந்து தான் இன்று நீங்கள் களம் காணும் பிரச்சனைகளுக்கான தீர்வுகளை எடுக்க முடியும் என்று உணர்வீர்கள்.

அனுபவத்தின் வழியாக பெறப்படும் அறிவிலிருந்து, ஆற்றல்மிகு குடும்ப சமூக கட்டமைப்பை உருவாக்க முடியும் என்பது தான் வரலாறு.

எனவே உங்கள் குடும்ப வரலாறை உங்கள் தாத்தா பாட்டிகளின் உள்ளங்களில் இருந்து வெளிவரும் எதார்த்தமான வாழ்க்கை அனுபவங்களை நீங்கள் உணர்ந்து எழுத முற்படுங்கள். உறவுகளிடம் இருந்து உணர்வுகளை மீட்டெடுங்கள்.

விடுமுறை மட்டுமல்ல.. வாழ்க்கையும் வளமாகும்.

முனைவர் மு. பக்கீர் இஸ்மாயில்
இணை பேராசிரியர், பொருளாதார துறை
புதுக்கல்லூரி, சென்னை – 600 014
கைபேசி: +91 96000 94408

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.