வெஜ் ரோல் சப்பாத்தி என்பது அருமையான சிற்றுண்டி வகையாகும்.
இதனை தயார் செய்து குழந்தைகளுக்கு பள்ளிக்கும் கொடுத்து அனுப்பலாம்.
இனி எளிய வகையில் வெஜ் ரோல் சப்பாத்தி செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
சப்பாத்தி தயார் செய்ய
கோதுமை மாவு – 400 கிராம்
தேங்காய் எண்ணெய் – 5 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
ஸ்டப்பிங் செய்ய
முருங்கை பீன்ஸ் – 10 எண்ணம்
கேரட் – 2 எண்ணம் (நடுத்தர அளவு)
பெரிய வெங்காயம் – 1 எண்ணம் (நடுத்தர அளவு)
டர்னிப் – 1 எண்ணம் (சிறியது)
முட்டைக்கோஸ் – 50 கிராம்
குடை மிளகாய் – 1 எண்ணம் (நடுத்தர அளவு)
மசாலா பொடி – 1 1/2 ஸ்பூன்
கரம் மசாலா பொடி – 3/4 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
இஞ்சி – 3/4 சுண்டு விரல் அளவு
வெள்ளைப் பூண்டு – 2 பற்கள் (நடுத்த அளவு)
மல்லி இலை – ஒரு கொத்து
தாளிக்க
நல்ல எண்ணெய் – 4 ஸ்பூன்
கடுகு – 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை – 1 கீற்று
செய்முறை
கோதுமை மாவினை வாகன்ற பாத்திரத்தில் போட்டு, அதில் தேவையான உப்பு மற்றும் தேங்காய் எண்ணெயைச் சேர்த்து ஒருசேரக் கலக்கவும்.
தேவையான அளவு தண்ணீரை எடுத்து சுட வைத்து, மாவில் சேர்த்து சப்பாத்தி மாவாகத் திரட்டி 1/2 மணி நேரம் ஊறவிடவும்.
முருங்கை பீன்ஸ், பெரிய வெங்காயம், கேரட், டர்னிப், குடைமிளகாய், முட்டை கோஸ் ஆகியவற்றை சிறுதுண்டுகளாக வெட்டவும்.
இஞ்சி, வெள்ளைப் பூண்டினை தோல் நீக்கி மிக்ஸியில் போட்டு விழுதாக்கிக் கொள்ளவும்.
மல்லி இலை, கறிவேப்பிலை ஆகியவற்றை கழுவி ஆய்ந்து கொள்ளவும்.
வாணலியில் நல்ல எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிதம் செய்யவும்.
பின்னர் அதனுடன் நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதனுடன் நறுக்கிய முருங்கை பீன்ஸ் சேர்த்து வதக்கவும்.
ஓரளவு வதங்கியதும் அதனுடன் கேரட் சேர்த்து வதக்கவும்.
கேரட் ஓரளவு வெந்ததும் அதனுடன் முட்டை கோஸ் சேர்த்து வதக்கி அதனுடன் நறுக்கிய குடை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
பின்னர் அதனுடன் தேவையான உப்பு, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
பின்னர் அதனுடன் மசாலா பொடி, கரம் மசாலா பொடி, உப்பு சேர்த்து கிளறி 3/4 டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
கலவை கெட்டியானதும் அடுப்பில் இருந்து இறக்கி கொத்தமல்லி இலையை சேர்த்து கிளறி விடவும்.
திரட்டிய சப்பாத்தி மாவினை சிறுஉருண்டைகளாக்கி அதனை சப்பாத்தியாகச் சுடவும்.
சுட்ட சப்பாத்தில் படத்தில் காட்டியபடி காய்கறி ஸ்டப்பிங் கலவையை சிறிதளவு எடுத்து பரப்பவும்.
பின்னர் இதனை உருளையாகச் சுருட்டவும்.
உருளைச் சப்பாத்தியை இரண்டு சமதுண்டுகளாக குறுக்குவாக்கில் வெட்டவும். சூடாகப் பரிமாறவும்.
சுவையான வெஜ் ரோல் சப்பாத்தி தயார்.
குறிப்பு
விருப்பமுள்ளவர்கள் பச்சை பட்டாணியைச் சேர்த்து ஸ்டப்பிங் தயார் செய்யலாம்.
விருப்பமுள்ளவர்கள் மசாலாப் பொடிக்குப் பதில் மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, தனியா பொடி, சீரகப் பொடி சேர்த்து ஸ்டப்பிங் தயார் செய்யலாம்.