‘வையத்து வாழ்வீர்காள் நாமும் நம்பாவைக்குச்’ என்ற பாடல் சூடிக்கொடுத்த சுடர்க் கொடி ஆண்டாள் அருளிய கோதைத் தமிழ் என போற்றப்படும் திருப்பாவையின் இரண்டாவது பாடலாகும்.
இப்பாடல் பாவை நோன்பின் போது எவற்றைச் செய்ய வேண்டும், எவற்றை விலக்க வேண்டும், பாவை நோன்பில் எவ்வாறு ஈடுபட வேண்டும் ஆகியவற்றை விளக்குகிறது.
திருப்பாவை பாடல் 2
வையத்து வாழ்வீர்காள் நாமும் நம்பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத்துயின்ற பரமன் அடிபாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றுஓதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமாறு எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்
விளக்கம்
இந்த உலகில் வாழும் பேறு பெற்றவர்களே, பரந்தாமனின் திருவடியை அடைய நாங்கள் நோற்கும் பாவை நோன்பிற்கான முறைகளைக் கேளுங்கள்.
திருபாற்கடலுள் பாம்பணை மீது யோக நித்திரை கொள்ளும் திருமாலின் திருவடிகளைப் புகழ்ந்து பாடுவோம்.
நெய், பால் என நாவிற்கு ருசியை வழங்கும் பொருட்களை உண்ண மாட்டோம்.
விடியற்காலையில் நீராடுவோம்.
கண்ணுக்கு மையிடுதல், கூந்தலை மலரால் அலங்கரித்தல் ஆகிய உடலுக்கு அழகு தரும் செயல்களைச் செய்ய மாட்டோம்.
ஒருவர் இல்லாத இடத்து அவரைப் பற்றிப் புறங்கூறலைச் (கோள் சொல்லுதல்) செய்யோம்.
தீய செயல்களை மனத்தாலும் எண்ண மாட்டோம்.
முடிந்தளவுக்கு தானமும், தருமமும் செய்வோம்.
உலகில் மேம்பாடு அடையும் வழியை நினைத்து மகிழ்வுடன் இந்நோன்பினை நோற்போம்.
கட்டுப்பாடுடன் கூடிய எச்செயலும் வெற்றியை தரும் என்பதை நாம் இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
பாவை நோன்பின் போது கடைப்பிடிக்க வேண்டிய முறைகளை இப்பாசுரம் விளக்குகிறது.
நோன்பு செய்யும் காலத்தை முதல் பாசுரம் சொல்ல, நோன்பு இயற்றும் முறைகளை “வையத்து வாழ்வீர்காள்” என்ற இரண்டாம் பாசுரம் சொல்கிறது.
– கோதை என்ற ஆண்டாள்
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!