இற்றைத் தமிழ்ச் சங்கங்கள்!

தமிழே அமுதே தாயே உயிரே
தலையுங் கடையும் நீயென்பார் – இமை
சிமிழ்க்கும் நொடியுஞ் சிந்தை இன்றி
வாயும் வயிறும் வேறென்பார்

தின்று கொழுத்த தினவைத் தீர்க்கத்
தீந்தமிழ் மொழிக்குக் குடைபிடிப்பார் – நமைக்
கொன்றுக் குவிக்கும் கோடைப் பொழுதில்
குளிர்ந்த மதுவில் திளைத்திருப்பார்

ஆளூங் காலை அலசிக் குடிக்க
அழகுத் தமிழால் அணியமைப்பார் – அதில்
தேளும் அரவும் தெரியா வண்ணம்
தெற்கும் வடக்கும் தலையமைப்பார்

பட்டம் பதவி பகட்டு வாழ்வின்
பாதை தன்னில் நடைபயில்வார் – இவர்
திட்டம் போட்டுத் திருடும் தொழிலைத்
தென்மொழி சேவை எனவுரைப்பார்

வட்டிக் கடையில் வாடுங் கடனாய்
வண்டமிழ் மொழியாள் நசிந்திருக்க – இவர்
குட்டி புட்டி குளிரும் அறைக்கண்
குடலூண் உணவைப் புசித்திருப்பார்

கூட்டங் கூடிக் குரைப்ப தன்றிக்
கொள்கை எதுவு மிருக்காது – வெறி
ஆட்டம் பாட்டம் ஆடை அவிழ்த்தல்
அதுதான் இவரின் பண்பாடு

கிள்ளை மொழிபோல் கிறுக்குக் கவிதை
கிளர்ச்சி கொண்டு வனைந்திடுவார் – சிறு
பிள்ளை யறிவைப் பெரிதாய் மாற்றிப்
பீடாய் நடக்க மறுத்திடுவார்

சாதிப் பெருமை சாதிச் சிறுமை
சந்தைப் பொந்தைப் பாடிவைப்பார் – நாம்
ஆதித் தமிழர் அன்பால் இணைவோம்
என்றால் மேல்கீழ் குதிகுதிப்பார்

சந்தம் பிடித்துச் சாற்றுங்‌ கவியில்
சத்தாய் எதுவும் இருக்காது – சிறு
உந்தம் முடுக்கம் இல்லா மொழியால்
உலகை வெளுக்க முடியாது

படித்த பயனே ஏது மின்றிப்
பல்லைக் காட்டிப் பயனடைவார் – இவர்
நடித்த நடிப்பில் நழுவி விழுந்தோர்
நாயின் கடையாய் இழிவடைவார்

உள்ளத் துணர்வின் உய்வ தகன்ற
உலுத்தர் படையா மொழிகாக்கும் – கேள்
வெள்ளத் தனைய மலரின் நீட்டம்
வெறும்வாய் பேச்சுப் புகழழிக்கும்

தமிழர் நாமே வெடிமருந் தாகித்
தமிழ்ப்பகைக் கிடங்கைத் தகர்த்தெறிவோம் – இங்கே
தமிழ்தமிழ் என்று தாய்மொழி கொல்லும்
கயவரைக் கருவிலே எரித்தழிப்போம்

பேரினப் பாவலன்
ஆவடி, திருவள்ளூர்
கைபேசி: 8667043574

பேரினப் பாவலன் படைப்புகள்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.