அங்கண்மா ஞாலத்து அரசர் அபிமான

அங்கண்மா ஞாலத்து அரசர் அபிமான என்ற இப்பாடல் பெண் ஆழ்வாரும், பெரியாழ்வாரின் செல்வப் புதல்வியும் ஆகிய‌ ஆண்டாள் அருளிய,  கோதைத் தமிழ் என போற்றப்படும் திருப்பாவையின் இருபத்தி இரண்டாவது பாசுரம் ஆகும்.

இறைவனே, உன்னுடைய கடைக்கண் பார்வையால், எங்களுடைய பாவங்களை எல்லாம் போக்குவாய்! எனத் திருமாலை மனமுருகி வழிபாடு செய்யும் பாடல் இது.

திருப்பாவை பாடல் 22

அங்கண்மா ஞாலத்து அரசர் அபிமான

பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட்டிற் கீழே

சங்க மிருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்

கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப் பூப்போல

செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ?

திங்களும் ஆதித்யனும் எழுந்தாற்போல்

அங்கணிரண்டும் கொண்டும் எங்கள்மேல் நோக்குதியேல்

எங்கள்மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்

 

விளக்கம்

பரந்து அகன்ற இவ்வுலகத்திலுள்ள அரசர்கள் எல்லாம் தங்களுடைய செல்வம் மற்றும் அதிகார செருக்குகள் அனைத்தையும் நீக்கிவிட்டு, உன்னிடம் நம்பிக்கை கொண்டு, நீ பள்ளி கொண்டிருக்கும் கட்டிலின் அருகில் கூட்டம் கூட்டமாகக் காத்திருக்கிறார்கள்!

அவர்களைப் போலவே நாங்களும் உன்னைச் சரணடைய வந்திருக்கிறோம்!

கிண்கிணி என ஒலிக்கும் சிறுமணியின் வாய் போலவும், மொட்டாக உள்ள தாமரைப்பூவானது மெதுவாக மலர்வது போலவும் அழகிய சிவந்த கண்களை சிறுகச் சிறுக திறந்து எங்களைப் பார்ப்பாயாக!

சந்திரனும், சூரியனும் உதித்தாற் போல, கண்கள் இரண்டினையும் திறந்து எங்களை அருட்பார்வையால் நோக்க வேண்டும்!

உன்னுடைய அருட்பார்வையால் எங்களின் பாவங்களும், சாபங்களும் நீங்கும்!

இறைவனின் அருட்பார்வை நம்முடைய பாவவினைகளை எல்லாம் போக்கிவிடும். ஆதலால் இறைவனை சரணடையுங்கள் என்று இப்பாசுரம் கூறுகிறது.

கோதை என்ற ஆண்டாள்

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.