அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி என்ற இப்பாடல், பன்னிரு ஆழ்வார்களில் பெண் ஆழ்வாரான ஆண்டாள் அருளிய, திருப்பாவையின் இருபத்து நான்காவது பாசுரம் ஆகும்.
திருப்பாவை பாடல் 24
அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி
சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல் போற்றி
என்றுஎன்றுஉன் சேவகமே ஏத்திப் பறை கொள்வாய்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்
விளக்கம்
முன்னொரு காலத்தில் மாபலிச் சக்கரவர்த்தியின் கர்வத்தினை அடைக்க வாமனனாக குள்ளவடிவம் கொண்டு, மூன்று அடிநிலத்தை தானமாகப் பெற்று, பின் திரிவிக்கிரமனாக இவ்வுலங்களை அளந்த திருவடிகளைப் போற்றுகிறேன்!
உலக நல்வழி மார்க்கத்திற்காக இராமனாக அவதாரம் கொண்டு, சீதையை கவர்ந்து சென்ற தென்திசையில் உள்ள இலங்கை வேந்தனான இராவணனை, வெற்றி கொண்ட உன் வீரத்தைப் போற்றுகிறேன்!
கிருஷ்ண அவதாரத்தில் சின்னஞ்சிறுவனான உன்னை சக்ர வடிவில் அழிக்க வந்த சகடாசுரன் என்னும் அசுரனை, உன்னுடை பிஞ்சுக்கால்களால் உதைத்து அழித்தாய். அத்திருவடியின் புகழினைப் போற்றுகிறேன்!
கண்ணன் என்னும் சிறுவனான உன்னை அழிக்க வத்ஸாசரனன் கன்றுக்குட்டி வடிவமாகவும், கபித்தாசுரன் விளாமரமாகவும் வடிவம் கொண்டனர்.
வத்ஸாசரனனான அக்கன்றுக்குட்டியை விளாமரமாக நின்ற கபித்தாசுரன் மீது எறிதடியாக (குணிலா) உபயோகித்து இருவரையும் அழித்தாய். உன் கால்களில் அணிந்த வீரக்கழல்களைப் போற்றுகிறேன்!
கோபம் கொண்டு இந்திரன் பொழிந்த மழையிலிருந்து ஆயர்பாடி உயிரினங்களைக் காக்க கோவர்த்தனகிரியை குடையாய் உன் ஒற்றை விரலில் ஏந்தி நின்றாய். உயிர்களின்பால் நீ கொண்ட உன்னுடைய அருள்குணத்தைப் போற்றுகிறேன்!
எத்தகைய பகைவர்களையும் வெல்லும் வண்ணம் நீ கையில் கொண்டுள்ள வேலினைப் போற்றுகிறேன்!
இவ்வாறு எல்லாம் நீ புரிந்த வீரச்செயல்களை மகிழ்ந்து போற்றிப் பாடி மார்கழி நோன்பினை நோற்று உன்னைக் காண வந்துள்ளோம்!
எங்களிடம் இரக்கம் காட்டி அருள்புரிந்து, நீ எங்களுக்கு நோன்பின் பலனைத் தருவாயாக!
இது போற்றிப் பாசுரம் என்று அழைக்கப்படுகிறது. இதனை தினமும் பாடினால் மனதில் தைரியம் வளரும்.