ஆந்தை – விவசாயிகளின் நண்பன் – ஜானகி எஸ்.ராஜ்

ஆந்தையை நீங்கள் எல்லோருமே பார்த்திருப்பீர்கள்! இரவு நேரங்களில், மாலைப் பொழுதுகளில் மரக்கிளைகளில் அமர்ந்து கொண்டு அலறுவதைக் கேட்டிருப்பீர்கள்.

ஆந்தையின் அலறல் ஒருவித பயத்தை ஏற்படுத்தும். அதற்காக ‘ஆந்தை’ என்றதும் பயந்து போய் ஓடிவிடாதீர்கள்!

ஆந்தையால் நன்மைதான் ஏற்படுகிறதே தவிர, வேறு எவ்வித தீங்கும் ஏற்படுவதில்லை. ஆகவே, பயமின்றி மேலே படியுங்கள். ஆந்தையைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.

ஆந்தைகள் பெரும்பாலும் அந்திப் பொழுதுகளிலும், இரவிலும்தான் வேட்டையைத் துவக்குகின்றன. அபூர்வமாகத்தான் பகலில் வேட்டையாடும்.

ஆந்தைகளின் பிரதான இரை எலிகளே. சில ஆந்தைகள் சிறிய பறவைகள், பெரிய அளவிலான பூச்சிகள், மண்புழுக்கள் போன்றவைகளை ஆகாரமாக உட்கொள்ளும்.

ஆந்தைகளின் கால்களில் கூர்மையான, வலிமை மிக்க வளைந்த அமைப்புடன் (கொக்கி போன்று) கூடிய நகங்கள் காணப்படும். இரைகளைப் பிடிக்க இவை உதவுகின்றன.

இரைகளை இவைகள் பிடித்துக் கொன்று அப்படியே விழுங்கி விடும். சிறிய பறவைகளின் குஞ்சுகளை மட்டும் அலகினால் இழுத்துக் கொத்திச் சாப்பிடும்.

சப்தமின்றி பறக்கும் திறமை, நல்ல கண்பார்வை, கூர்ந்து கேட்கும் சக்தி இந்த மூன்றும் ஆந்தைகளுக்கு இரவில் வேட்டையாடப் பெரிதும் துணை புரிகின்றன.

ஆந்தைகளின் கண்கள் வட்டவடிவமாக பெரிய அளவில் காணப்படும். இரவில் கண்பார்வை தெளிவாக இருக்கும்.

எந்த ஒரு பறவை இனத்திற்கும் இல்லாத வகையில், ஆந்தைகளின் கண்கள் மட்டும் மனிதர்களுக்கு அமைந்திருப்பது போல், முகத்தில் நேராகப் பார்க்கும் விதத்தில் அமைந்திருக்கும்.

இப்படி அமைந்திருப்பதால் தொலைவான இடங்களைக்கூட ஆந்தையால் நன்கு பார்க்க முடியும். ஆந்தையின் காதுகள் வெளிப்படையாகத் தெரிவதில்லை. அதன் தலையின் இருபுறங்களிலும் அடர்த்தியாக காணப்படும் இறகுகளுக்குள் மறைந்திருக்கும்.

இரைகளை அவைகளின் ஒலியைக் கேட்டறிந்தே நெருங்கிப் போய் பிடிக்கும் ஆற்றல் கொண்டது.

சில ஆந்தைகளுக்கு அதன் தலைமீது கொத்தாகக் குடுமி போன்று ஓர் கொண்டை இருக்கும். இதைச் சிலர் ஆந்தையின் காது என நினைப்பதுண்டு. இந்த அமைப்பு இயற்கையாகவே ஒரு தோற்றத்தை ஏற்படுக்கூடிய வகையில் இருப்பதே தவிர, காது இல்லை.

வயல்களில் பயிர்களை அழித்து நாசப்படுத்தி விவசாயிகளுக்குப் பெருத்த நஷ்டத்தையும், தொல்லைகளையும் தரும் எலிகளை ஆந்தைகள் வேட்டையாடி உண்பதால் ஆந்தையை ‘விவசாயிகளின் நண்பன்’ என்றே கூற வேண்டும்.

ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998

Comments are closed.