பப்பாளியின் பிறப்பிடம் மத்திய அமெரிக்கா ஆகும். பதினாறாம் நூற்றாண்டின் வாக்கில் டச்சு வியாபாரிகளால் இந்தியாவில் பப்பாளி அறிமுகமானது. பிறகு தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் பப்பாளி பயிரிட ஆரம்பித்தனர்.
இப்போது உலகின் பல்வேறு நாடுகளிலும் குறிப்பாக இந்தியா, ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ், தென்அமெரிக்கா போன்ற நாடுகளில் பயிரிடப்படுகிறது.
இந்தியாவில் மட்டும் சுமார் 70,000 ஹெக்டேரில் பப்பாளி பயிர் செய்யப்படுகிறது. ‘பொப்பாயி’ என்ற பெயரும் பப்பாளிக்கு உண்டு. பப்பாளி மரமானது மிக வேகமாக வளரும் தன்மையுடையது. சுலபமாகப் பயிரிடக்கூடிய ஒன்றும்கூட.
வீட்டுத்தோட்டத்தின் மூலையில் பப்பாளிப்பழ விதையை விதைத்தால் மிக வேகமாக வளர்ந்து விரைவில் உயர்ந்த மரமாகிவிடும்.
ஒரே வருடத்தில் பழங்களை நாம் பெறலாம். வருடம் முழுவதும் பழங்களைத் தரக்கூடியது.குறைந்தது ஐந்து வருடங்கள் வரை இப்படிப்பட்ட நல்ல விளைச்சலைப் பெறலாம். ஒரு கிலோ எடையுள்ள பழமாக சுமார் 100 பழங்கள் ஒரே சமயத்தில் தரக்கூடியது.
பப்பாளிப் பயிருக்கு அதிக மழையோ, தண்ணீரோ தேவையில்லை. உஷ்ணப் பிரதேசங்களில்கூட சிறந்த முறையில் விளைகிறது.
மற்ற பழங்களைவிட பப்பாளியில் வைட்டமின் ‘ஏ’ அதிக அளவில் உள்ளது. உணவில் காணப்படும் கரோடீன் என்னும் பொருளானது வைட்டமின் ‘ஏ’யாக நம் உடலில் மாறுகிறது. காரட், பீட்ரூட், முருங்கைக்காய், கறிவேப்பிலை ஆகியவற்றில் காணப்படும் கரோடீன் மஞ்சள் நிறம் கொண்ட பப்பாளிப்பழத்திலும் அதிகம் காணப்படுகிறது.
தொடர்ந்து பப்பாளிப்பழத்தைச் சாப்பிட்டுக் கொண்டு வருவதின் மூலம் நல்ல உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான வைட்டமின் ‘ஏ’யும் வைட்டமின் ‘சி’யும் நமக்குக் கிடைக்கிறது.
வைட்டமின் ‘ஏ’ குறைவால் ஏற்படும் கண்பார்வைக் குறைவை பப்பாளிப்பழத்தைத் தொடர்ந்து சாப்பிடுவதின் மூலம் சரி செய்யலாம். சீதாப்பழம், வாழைப்பழம் போன்றவற்றில் இருக்கும் கரோட்டீனைவிட பப்பாளிப்பழத்தில் அதிக அளவு கரோடீன் உள்ளது.
பப்பாளிப் பழத்திலும் அதன் மரத்தின் அனைத்துப் பகுதிகளிலும் ‘பாப்பின்’ என்று சொல்லப்படுகிற ஒருவித என்சைம் இருப்பதால் ஜீரண விஷயத்திலும் பப்பாளிப்பழம் நன்கு செயல்படுகிறது.
‘பாப்பின்’ எனப்படுகிற இந்த என்சைம் நாம் உண்ணும் உணவிலுள்ள புரதச்சத்தை நன்கு ஜீரணமடையச் செய்வதால் பப்பாளிப்பழமானது பல்வேறு மருந்துகள் தயாரிப்பில் இடம் பெறுகிறது.
இந்தியாவில் பலவகையான பப்பாளிப் பழங்கள் பயிரிடப்படுகின்றன. ‘வாஷீங்டன்’ ‘ஹனிடியூ’ வகை பப்பாளியானது விதைகளற்றதால் மிகவும் பிரசித்தம்.
பப்பாளியிலிருந்து ஜாம் மற்றும் குளிர்பானங்கள் தயாரிக்கப்படுகின்றன. ‘ஃப்ரூட் சாலட்’ என்று சொல்லப்படுகிற பல்வேறு பழக்கலவையிலும் ஐஸ்கிரீமிலும் பப்பாளிப்பழம் சேர்க்கப்படுகிறது.
ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998
மறுமொழி இடவும்