உயிரினங்களில் தாய்மை

உயிரினங்களில் தாய்மை நம்மை ஆச்சர்யம் அடையச் செய்கிறது.

தன்னுடைய குழந்தைகளை எல்லா உயிரினங்களும் பேணிப் பாதுகாக்கின்றன. ஒவ்வொரு உயிரினமும் தன்னுடைய சந்ததியினரைப் பாதுகாக்க பல வழிமுறைகளைக் கையாளுகின்றன.

உயிரினங்களில் சில எவ்வாறு தங்களுடைய பிள்ளைகளைப் பேணுகின்றன என்பதை உயிரினங்களில் தாய்மை என்ற இக்கட்டுரையில் காணலாம்.

ஒராங்குட்டான்

மனிதக் குரங்களில் புத்திசாலியான ஒராங்குட்டான் குரங்கு, குட்டிகளை சுமார் எட்டு ஆண்டுகள் வரை தன்னுடைய பராமரிப்பில் வைத்திருக்கும்.

 

ஒராங்குட்டான்
ஒராங்குட்டான்

 

ஒராங்குட்டானே, விலங்குகளில் அதிக நாட்கள் குட்டிகளை பராமரிக்கும் தன்மை கொண்டது. முதல் நான்கு மாதங்களுக்கு தாய் ஒராங்குட்டான் தன்னுடைய குட்டியை தன்னுடனே வைத்திருக்கும். எக்காரணம் கொண்டும் குட்டியை கீழே இறக்கி விடாது.

ஐந்து அல்லது ஆறாவது மாதத்தில் வாழ்வியல் முறைகளை தன்னுடைய குட்டிக்கு தாய் கற்பிக்க ஆரம்பிக்கும்.

வாழ்க்கை முறைக்குத் தேவையான தகுதிகளை குட்டி கற்றுக் கொள்ளும் வரை தாய் ஒராங்குட்டான் குட்டியை தன்னுடைய பாதுகாப்பில் வைத்திருக்கும்.

 

அமெரிக்க பூநாரை

தன்னுடைய குஞ்சுகளை வளர்ப்பதில் அமெரிக்க பூநாரை ஆண் மற்றும் பெண் பறவைகள் ஒற்றுமையுடன் இணைந்தே செயல்படுகின்றன.

 

அமெரிக்க பூநாரை
அமெரிக்க பூநாரை

 

அமெரிக்க பூநாரை பெற்றோர்கள் தங்களுடைய குஞ்சுகளுக்கு புரதச்சத்து, கொழுப்புச்சத்து மற்றும் தேவையான ஊட்டச்சத்துகள் நிறைந்த சிவப்புநிற பால் போன்ற திரவத்தை ஊட்டுகின்றன.

இந்த சிவப்புநிறத் திரவத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் குஞ்சுகளுக்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கின்றன. இத்தகைய உணவே இக்குஞ்சுகள் வளர்ந்ததும் தனித்துவமான நிறத்தினை கொடுத்து அவைகளை உலகிற்கு அடையாளத்தைக் காட்டுகின்றன.

 

சிவப்புக் கொம்பு ஹார்ன்பில்

பெண் சிவப்புக் கொம்பு ஹார்ன்பிலானது மரத்தில் உள்ள பொந்துகளை தங்களுடைய கூடுகளாகப் பயன்படுத்துகின்றன.

சிவப்புக் கொம்பு ஹார்ன்பில்லின் முட்டையானது உடும்பிற்கு மிகவும் பிடித்த உணவாகும்.

 

சிவப்புக் கொம்பு ஹார்ன்பில்
சிவப்புக் கொம்பு ஹார்ன்பில்

 

எனவே வேட்டையாடும் பிராணிகளிடமிருந்து தங்களுடைய முட்டைகளைப் பாதுகாக்கும் பொருட்டு பெண் சிவப்புக்கொம்பு ஹார்ன்பிலானது முட்டையிடும் பருவத்தில் பொந்திற்குள் அமர்ந்து கொண்டு தன்னுடைய மலத்தை வைத்து பொந்தினை அடைத்துவிடும்.

இப்பெண்பறவையின் அலகு மட்டும் வெளியே தெரியும். ஆண்பறவையானது பெண் பறவைக்கு தேவையான உணவினை ஊட்டிவிடுகிறது.

பெண்பறவையானது குஞ்சு பொரிக்கும் காலமான இரண்டு மாதங்கள் வரையிலும் பொந்திற்குள்ளே தங்கி இருக்கிறது.

 

பேரரச பென்குயின்

அன்டார்டிக்காவில் வசிக்கும் பேரரச பென்குயின் பறவைகளில், ஆண் பறவையானது பெண் பறவை இடும் முட்டைகளை நான்கு மாதங்களுக்கு அன்டார்டிக்காவின் கடுமையான குளிரிலிருந்து பாதுகாக்கிறது.

 

பேரரச பென்குயின்கள்
பேரரச பென்குயின்கள்

 

அன்டார்டிக்காவின் வெளிப்புற வெப்பநிலை -35 டிகிரி ஆக இருக்கும்போதும் ஆண் பேரரச பென்குயின்கள் முட்டைகளை தங்களின் பாதங்களில் 38 செல்சியஸ் வெப்பத்தில் பாதுகாப்பாக வைக்கின்றன.

 

துருவக்கரடி

பெண் துருவக்கரடி கருவுற்ற காலத்தில் தங்களின் உடல் எடையை இரண்டு மடங்கிற்கு பெருகச் செய்கிறது. அதாவது சுமார் 400 பவுண்ட் அளவிற்கு உடல் எடையை அதிகரிக்கச் செய்கிறது.

ஏனெனில் துருவப்பகுதிகளில் நிலவும் -40 செல்சியஸ் கடும்குளிரில் இளம்குட்டிகளால் போதுமான உணவினைப் பெற்றுக் கொள்ள இயலாது.

 

துருவக்கரடி
துருவக்கரடி

 

அதற்காக தொடர்ந்து எட்டு மாதங்களுக்கு தாய் கரடி குட்டிகளுக்கு பாலினைத் தருகிறது. குட்டி வளர்ந்து, பின் அதற்கு வேட்டையாடக் கற்றுக் கொடுக்கும் பருவத்தில் தாய் துருவக்கரடி தன்னுடைய உடலின் எடையில் பாதியை இழக்கிறது.

 

கோவாலா கரடி

கோவாலா கரடிகளின் முக்கிய உணவான யூக்கலிப்டஸ் இலைகள் நச்சுத் தன்மை வாய்ந்தவை. அம்மா கோவாலாக் கரடியானது தன்னுடைய குட்டிகளுக்கு யூக்கலிப்டஸ் இலைகளை நேரடியாக கொடுப்பதில்லை.

 

கோவாலா கரடி
கோவாலா கரடி

 

தாய் கோவாலாக் கரடியானது பாதி செரிக்கப்பட்ட யூக்கலிப்டஸ் இலைகளை எச்சமாக வெளியே தள்ளுகிறது. குட்டிகள் யூக்கலிப்டஸ் இலைகளை செரிமானம் செய்யும் வரை தாயின் எச்சங்களை உண்ணுகின்றன.

 

ஆப்பிரிக்க யானை

ஆப்பிரிக்க யானைக் கூட்டத்தில் புதிய குட்டி பிறந்ததும் அக்கூட்டத்தின் தலைவி யானையோடு மொத்த கூட்டமும் குட்டியை வளர்ப்பதில் கவனம் செலுத்துகின்றன.

 

ஆப்பிரிக்க யானைக் கூட்டம்
ஆப்பிரிக்க யானைக் கூட்டம்

 

எதிரிகளால் ஆபத்து ஏற்படும் போது வயதில் மூத்த யானைகள் குட்டிகளைச் சுற்றிலும் வட்டமாக நின்று கொண்டு அவற்றைப் பாதுகாக்கின்றன.

வெடெல் சீல்

வெடெல் சீலானது உறையும் பனிக்கட்டிகளைக் கொண்ட சுற்றுசூழலிலும் தன்னை வருத்திக் கொண்டு தனது குட்டிகளை வளர்க்கிறது.

 

வெடெல் சீல்
வெடெல் சீல்

 

அது 48 சதவீதம் கொழுப்புச்சத்து நிறைந்த தன்னுடைய பாலினை தொடர்ந்து 12 நாட்களுக்கு குட்டிகளுக்கு உணவினை உட்கொள்ளாமல் கொடுக்கிறது.

இதனால் குட்டிகளின் எடையானது நாள் ஒன்றுக்கு ஐந்து பவுண்டுகள் உயர்கின்றன. தாயானது ஒருநாளைக்கு சராசரியாக ஏழு பவுண்டுகள் எடையை இழக்கின்றது.

சிவிங்கிப்புலி (வேங்கை)

வேங்கையின் குட்டிகள் பிறந்தவுடன் வாழ்வியலுக்கான உள்ளுணர்வுகள் ஏதும் இல்லாமல் இருக்கின்றன. எனவே அவைகளைப் பாதுகாப்பாக வைப்பது என்பது தாய் வேங்கைக்கு பெரும் வேலையாகவே இருக்கிறது.

 

வேங்கை மற்றும் குட்டிகள்
வேங்கை மற்றும் குட்டிகள்

 

குட்டிகளை பாதுகாக்கும் வேலையை செய்வதன் மூலம் வேங்கையின் தாயானது மாபெரும் வீரனாகவே திகழ்கிறது. தாய் வேங்கையானது எதிரி வேட்டை விலங்குகளிடமிருந்து தன்னுடைய குட்டிகளைப் பாதுகாக்க மிகவும் தந்திரசாலியாக செயல்படுகிறது.

எதிரி வேட்டை விலங்குகளைப் பார்த்ததும் விநோதமான ஒலியை எழுப்பி எதிரி விலங்கிடம் குழப்பத்தை உண்டாக்கி குட்டிகளை மறைவிடத்திற்கு செல்லச் செய்து பாதுகாக்கிறது.

 

இராட்சத பசிபிக் ஆக்டோபஸ்

இராட்ச பசிபிக் ஆக்டோபஸ் தனது குட்டிகளுக்காக தனது உயிரினையே தியாகம் செய்கிறது.

சுமார் ஆறு மாதங்களுக்கு தன்னுடைய 50,000 முதல் 2,00,000 வரையிலான முட்டைகளை உணவு ஏதும் உண்ணாமல் எதிரிகளிடமிருந்து பாதுகாக்கிறது.

 

இராட்சத பசிபிக் ஆக்டோபஸ்
இராட்சத பசிபிக் ஆக்டோபஸ்

 

இந்த ஆறு மாதங்களில் தன்னுடைய முழுசக்தியையும் பயன்படுத்தி எல்லா முட்டைகளுக்கும் போதிய ஆக்ஸிஜன் மற்றும் தண்ணீர் கிடைக்கும்படி செய்து முட்டைகளைப் பாதுகாக்கிறது.

நீண்ட நாட்கள் பட்டினி கிடந்ததால் தாய் ஆக்டோபஸானது குட்டிகள் வெளிவந்ததும் இறந்து விடுகிறது.

 

கடற்குதிரை

விலங்கு உலகத்தில் கடற்குதிரையான வித்தியாசமான உயிரினமாகும். ஏனெனில் ஆண் கடற்குதிரைகளே குட்டிகளை ஈனுகின்றன.

 

கடற்குதிரை
கடற்குதிரை

 

பெண் கடற்குதிரைகள் ஆண் கடற்குதிரைகளில் காணப்படும் பை போன்ற அமைப்பில் தங்களுடைய முட்டைகளை இடுக்கின்றன. ஆண் கடற்குதிரைகள் அம்முட்டைகளை 9 முதல் 25 நாட்களுக்கு பாதுகாப்பாக வைத்திருக்கிறது.

முட்டைகள் பொரிந்தபின், தந்தை கடற்குதிரை குட்டிகள் உள்ள பையில் கடற்தண்ணீரை சீராக உள்ளே அனுப்பி கடல்தண்ணீரில் குட்டிகள் வாழ்வதற்கு வழிவகை செய்கிறது.

விஷ ஸ்ட்ராபெரி டார்ட் தவளை

தாய் ஸ்ட்ராபெரி தவளையானது தன்னுடைய ஒவ்வொரு குஞ்சினையும் முதுகில் ஏற்றிக் கொண்டு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்று அவைகளைப் பாதுகாக்கிறது.

 

உயிரினங்களில் தாய்மை விஷ ஸ்ட்ராபெரி டார்ட் தவளை
விஷ ஸ்ட்ராபெரி டார்ட் தவளை

 

சுமார் 50 நாட்களுக்கு ஒவ்வொரு குஞ்சினையும் தினந்தோறும் சென்று பார்த்து தன்னுடைய வளமில்லாத முட்டைகளை குஞ்சுகளுக்கு ஊட்டிப் பாதுகாக்கிறது.

உயிரினங்கள் தங்களின் இனத்தை இப்புவியில் இருக்கச் செய்ய இயற்கை கொடுத்த நன்கொடை போற்றுதலுக்குரியது. உயிரினங்களில் தாய்மை என்றுமே வணக்கத்திற்கு உரியது.

வ.முனீஸ்வரன்

 

உயிரினங்களின் வண்ண பார்வை பற்றி அறிவோம்

விலங்குகளுக்கு பற்கள் விழுமா?

டாப் 10 நீண்ட காலம் வாழும் உயிரினங்கள்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.