இஞ்சி ஒரு லவங்கப் பொருள் மட்டுமின்றி, வேருடன் கூடிய காய்கறி வகையைச் சேர்ந்தது என்றும் கூறலாம். இஞ்சி பூமிக்கு அடியில் விளையக் கூடியது.
முதன்முதலாக இந்தியாவிலும், பிறகு சீனாவிலும் இஞ்சி பயிரிடப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இஞ்சியைப் பற்றிய மருத்துவக் குறிப்புகள் சமஸ்கிருத இலக்கியத்திலும் சீன மருத்துவக் கட்டுரைகளிலும் நிறையவே இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு நூறு கிராம் இஞ்சியிலும் புரதம் 80.9 சதவிகிதம், ஈரப்பதம் 23 சதவிகிதம், 0.9 சதவிகிதம் கொழுப்பு, 12 சதவிகிதம் தாதுச்சத்து, 2.4 சதவிகிதம் நார்ச்சத்து, 12.3 சதவிகிதம் கார்போஹைட்ரேட் அடங்கியுள்ளன.
மேலும் 20 மில்லிகிராம் சதவிகிம் கால்சியம், பாஸ்பரஸ் 60 மில்லிகிராம் சதவிகிதமும், இரும்புச்சத்து 2.6 மில்லிகிராம் சதவிகிதம், கரோட்டீன் 40 மில்லிகிராம் சதவிகிதமும், தையாமின் 0.06 மில்லிகிராம் சதவிகிதம், ரிபோபிளாவின் 0.03 மில்லிகிராம் சதவிகிதம், நியாசின் 0.6 மில்லிகிராம் சதவிகிதம், வைட்டமின் சி 6 மில்லிகிராம் சதவிகிதம் ஆகியவைகளும் அடங்கியுள்ளன.
வேதகாலத்திலிருந்தே இஞ்சி, மருத்துவப் பொருளாக உபயோகிக்கப்பட்டு வந்திருக்கிறது. இஞ்சியை உபயோகிப்பதால் வயிற்றுப்பகுதி பலப்படுத்தப்பட்டு நன்கு செயல்படுகிறது.
இஞ்சியை அரைத்துப் பூசுவதின் மூலம் வீக்கமும் அதனால் அதைச் சுற்றி தோலில் ஏற்படுகிற சிவப்பு நிறமும் குறைகின்றன.
சாப்பிட்ட பிறகு, ஒரு சிறிய துண்டு இஞ்சியை வாயில்; போட்டு குதப்புவதின் மூலம் உடம்புவலி, வாந்தி போன்றவைகளைப் போக்கும் தன்மையுடையது.
அரை மேஜைக்கரண்டி இஞ்சி சாற்றுடன் ஒரு மேஜைக் கரண்டி எலுமிச்சைச் சாற்றையும் தேனையும் கலந்து பருகினால் அஜீரணம், மஞ்சள் காமாலை, மூலநோய் போன்றவைகள் தோன்றாது.
இஞ்சி சாற்றுடன் சிறிது தேன் கலந்து தினமும் மூன்று அல்லது நான்கு தடவைகள் சாப்பிட, நாட்பட்ட இருமல் நிற்கும்.
இஞ்சித் துண்டுகளை ஒரு கோப்பை நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்நீருடன் சிறிது தேன் கலந்து சூடாக அருந்தினால் கடுமையான ஜலதோஷம்கூட பறந்தோடி விடும்.
மூச்சுக்குழாய் வீக்கம், ஆஸ்துமா, கக்குவான் இருமல், காசநோய் போன்றவைகளுக்கு இஞ்சி அருமருந்தாகத் திகழ்கிறது.
இஞ்சி ஒரு சிறந்த வலிநிவாரணியும் கூட. இஞ்சியை தண்ணீர் சேர்த்து அம்மிக்கல்லில் உரசி, கிடைக்கும் விழுதை நெற்றியில் தேய்த்தால் தலைவலி மறையும்.
கன்னங்களிலும் முகத்திலும் தடவிக் கொண்டால் பல்வலி குணமாகும். காதுவலிக்கு, இஞ்சிச் சாற்றின் துளிகள் காதிற்குள் விட்டுக் கொண்டால் நிவாரணம் கிடைக்கும்.
இவ்வளவு மருத்துவ குணங்கள் கொண்ட இஞ்சியை நாம் அவ்வப்போது உணவில் சேர்த்து உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்வோமாக.
ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!