திருப்பாவை பாசுரங்களின் அமைப்பு

திருப்பாவை பாசுரங்களின் அமைப்பு

திருப்பாவை என்பது சூடிக்கொடுத்த சுடர்க்கொடி எனப் போற்றப்படும் ஆண்டாள் நாச்சியாரால் பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பாகும்.

இப்பாடல்கள் இன்றைக்கும் மார்கழி மாதத்தின் முப்பது நாட்களிலும் பாவை நோன்பு நோற்கும் பெண்களால் விரும்பிப் பாடப்படுகின்றன.

பாசுரம் என்றால் பாட்டு என்று அர்த்தம். திருப்பாவையில் உள்ள முப்பது பாட்டுக்களும் எவ்விதம் அமைக்கப்பட்டுள்ளன என்பதை திருப்பாவை பாசுரங்களின் அமைப்பு என்ற கட்டுரை விளக்குகின்றது.

திருமாலின் அருளையும், அன்பையும் பெற்றுத் தரும் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் முதல் ஆயிரத்தில் திருப்பாவையின் முப்பது பாடல்களும் இடம் பெற்றுள்ளன.

ஆண்டாள் பாடிய திருப்பாவையில் உள்ள முப்பது பாசுரங்களும் இறைவனின் திருவடியை அடைய நமக்கு வழிகாட்டுகின்றன.

திருப்பாவை பாசுரங்களின் அமைப்பு

1வது பாசுரம்

இப்பாசுரம் மார்கழியில் நீராடி பாவைநோன்பு நோற்று நாராயணனை போற்றி வழிபட்டால் நமக்கு நாராயணனின் அருள் கிடைப்பது நிச்சயம், அது நமக்கு கிடைத்தே தீரும் என்று உறுதியுடன் பாடப்பட்டுள்ளது.

2வது பாசுரம்

இப்பாசுரம் மார்கழியில் பாவை நோன்பின் போது கடைப்பிடிக்க வேண்டியவை மற்றும் நோன்பு இயற்றும் முறைகளைப் பற்றி இப்பாசுரம் கூறுகிறது.

3வது பாசுரம்

இப்பாசுரம் மார்கழி நோன்பினை கடைப்பிடிப்பதால் இவ்வுலகில் வாழத் தேவையான நீர்வளம், நிலவளம் மற்றும் பால்வளம் போன்றவை பெருகும். அதனால் மக்கள் நீடுழி வாழ்வார்கள் என்பதையும் நமக்குத் தெரிவிக்கிறது.

4வது பாசுரம்

மழை பெய்யும் நிகழ்வினையும், அது எவ்வாறு பொழிய வேண்டும் என்பதையும் விளக்கும் பாசுரம்.

உலகத்தார் உய்யும் பொருட்டு மார்கழி நீராடுவதற்கும், தேவையான நீர்நிலைகளை நிரப்பும் பொருட்டு மழை பொழிய இறைவனின் அருளை வேண்டி பாடப்படுவது.

மழை பெய்வதில் நிகழும் நிகழ்வுகளை ஆண்டாள் அறிவியல் சிந்தனையோடு இப்பாசுரத்தினைப் பாடியுள்ளார்.

5வது பாசுரம்

வடமதுரையில் பிறந்த கண்ணனை மார்கழி நோன்பு நோற்று வழிபாடு மேற்கொள்வதால் கிடைக்கும் அகப்பயன்களை விளக்கிக் கூறுகிறது.

6வது பாசுரம் முதல் 15வது பாசுரம் வரை

இது திருப்பாவையின் இரண்டாம் பகுதியாகும். இவை ஆயர்பாடியில் குடிகொண்டுள்ள நங்கையர்களை மார்கழி நோன்பை கடைப்பிடிக்க வலியுறுத்தி அந்த நோன்பை தெய்வீகத் தன்மையுடன் நிறைவேற்ற வேண்டி இயற்றப்பட்ட பாசுரங்கள் ஆகும்.

16வது பாசுரம்

மார்கழி நோன்பு நோற்கும் நங்கையர்கள் அரண்மனையின் உள்ளே சென்று கண்ணனை எழும்ப ஆயர்பாடியின் தலைவனாக விளங்குகின்ற நந்தகோபனின் அனுமதியை பெற பாடப்பட்ட பாசுரம்.

17வது பாசுரம்

நந்தகோபரையும், யசோதையையும், கண்ணனையும் அவன் அண்ணன் பலராமனையும் எழுப்பும் பாசுரம்.

18வது பாசுரம்

துயில் கொண்டிருக்கும் நப்பினை பிராட்டியை, கண்ணன் துயில் கொண்டிருக்கும் மாளிகைக் கதவை திறக்க வேண்டி, வேண்டுதல் செய்யும் பாசுரம் ஆகும்.

19வது முதல் 24வது பாசுரம் வரை

நப்பினையையும் கண்ணபிரானையும் சேர்த்தியில் கண்டு அவளது பரிந்துரையுடன் கண்ணனைக் கண்டு, அவனை அடியெடுத்து நடந்து வந்து திருவோலக்கம் வரசெய்து நடையழக்குப் பல்லாண்டு பாடிய பாசுரங்கள்.

25வது பாசுரம்

கண்ணன் பிறந்து வளர்ந்த வரலாற்றை உணர்ச்சியுடன் தெரிவிக்கும் பாசுரம்.

26வது பாசுரம்

மார்கழி நோன்புக்குத் தேவையானவற்றைப் பட்டியலிட்டு காட்டும் பாசுரம்.

27வது பாசுரம்

கண்ணனை தொழுததினால் பெறும் சன்மானத்தால் நோன்பின் நிறைவைக் கூறி மகிழ்ச்சியைத் தெரிவிக்கும் பாசுரம்.

28வது பாசுரம்

ஆயர்குலத்து மக்கள் தங்களது குறைகளையும் கண்ணனின் நிறைவையும் கூறி அவனுடைய அருளை வேண்டி பாடப்படும் பாசுரம்.

28 பாசுரங்களுடன் நிறைவு பெறுவதாகவும், 29, 30 பாசுரங்கள் சாற்றுப் பாசுரங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

29வது பாசுரம்

தாங்கள் பறை என்று குறிப்பிடப்படுவது இறைவனுக்குச் செய்யும் தொண்டுதான் என்றும், கடவுளுக்கும் உயிருக்கும் உள்ள தொடர்பு என்றும் நின்று நிலவுவது என்றும் இப்பாசுரம் கூறுகிறது.

இறைவனை விட்டுப் பிரிக்கும் காமங்களை நெஞ்சினின்றும் நீக்கி வழிபடுத்த அந்த இறைவனே அருள வேண்டும் என்று வேண்டி நிறைவு செய்தார்கள்.

30வது பாசுரம்

பலச்சுருதி பலன் கூறும் பாசுரம் ஆகும். பாசுரங்களை ஓதுவதால், பாராயணத்தால் பெறும் பயனைக் கூறி நிறைவுறுகிறது திருப்பாவை.

ஆயர்பெண்கள் தங்கள் நோன்பை முறைப்படி கடைப்பிடித்து நிறைவு செய்யவும் அதன் மூலம் பலன் பெற்ற வரலாற்றையும் திருப்பாவை குறிப்பிடுகிறது.

 

நாலாயிர திவ்ய பிரபந்தம் என்னும் திராவிட வேதம்

ஆழ்வார்கள் பற்றி அறிந்து கொள்வோம்

திருமணப்பேற்றினை அருளும் வாரணம் ஆயிரம் பதிகம்


Comments

“திருப்பாவை பாசுரங்களின் அமைப்பு” மீது ஒரு மறுமொழி

  1. […] திருப்பாவை பாசுரங்களின் அமைப்பு […]

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.