நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? – அத்தியாயம் 16

நாற்காலியொன்றில் அமர்ந்துகொண்டு கால்கள் இரண்டையும் எதிரிலிருந்த மேஜைமீது போட்டுக் கொண்டு உதடுகளில் சிகரெட்டொன்றைப் பற்ற வைத்து வளையம் வளையமாக புகையை வெளியேற்றிக் கொண்டும் சமயத்தில் புகையை விழுங்கி மூக்கால் வெளியேற்றிக் கொண்டும் படுஜாலியாக அமர்ந்திருந்த தனசேகரன் தோற்றத்தில் முற்றிலும் மாறிப் போயிருந்தான்.

திருத்தமாய் சீராக வெட்டப்பட்ட தலைமுடி, சின்னதாய் ஜெமினிகணேசன் ஸ்டைலில் மெல்லிய மீசை, ஷேவ் செய்யப்பட்ட கன்னங்கள், பெல்பாட்டம் பேண்ட், டக்கின் செய்யப்பட்ட ஃபுல் ஹேண்ட் ஷர்ட், இடது கைமணிக்கட்டில் ரேடியம் வாட்ச், வலது கையில் ப்ரேஸ்லெட், விரலில் மோதிரம், கழுத்தில் செயின், கரன்ஸி நோட்டுக்கள் திமிரத் திமிர திணிக்கப்பட்டிருக்கும் பர்ஸ் என்று பந்தாவாய் ஆளே பளபளப்பாய் மாறித்தான் போயிருந்தான்.

மேஜைமீது இரண்டு சீமைச் சரக்கு பாட்டில்கள், நீண்ட கழுத்தோடு இரண்டு கண்ணாடி கப்புகள் அனைத்துமே நாகராஜுவால் கொடுக்கப்பட்ட உபயம்.

முக்கால்வாசி தீர்ந்து போயிருந்த சிகரெட்டை ஆஷ் ட்ரேயில் போட்டுவிட்டு சரக்கு பாட்டிலைத் திறந்து கப்பில் ஊற்றி ‘ராவாகவே’ வாயில் சரித்துக் கொள்ள வாயருகே கொண்டு சென்றவனை “சேகரு! இரு, இரு..” என்ற நாகராஜுவின் குரல் தடுத்தது.

உள்ளே நுழைந்த நாகராஜு “என்ன சேகரு! எல்லா தேவையும் கெடைக்குதா? வேற எதுனாச்சும் தேவையா? கூச்சப்படாம கெளுங்க சேகரு” என்றான்.

இளித்தான் தனசேகர்.

“குப்பேல கெடந்தவன கோபுரத்துல தூக்கில்ல வெச்சுருக்கீங்க” என்றான்.

“நான் சொல்றபடி நடந்து நாஞ்சொல்ற காரியத்த நடத்திட்டீங்கன்னா, கோபுரத்துல என்ன இமய மலேலயே ஒங்கள ஏத்தி வெச்சுட மாட்டேனா?” கபடமாய் சிரித்தான் நாகராஜ்.

“சொல்லுங்க தெய்வமே! என்னிக்கு நா வேலைய ஆரம்பிக்கனும்”

“ஆரம்பிச்சுட வேண்டியதுதான். நா போட்டுக் குடுத்த ப்ளான்படி சொன்னதயெல்லாம் கச்சிதமா முடிச்சிடுவீங்கள்ள?” கேட்டான் நாகராஜ்.

“நிச்சயமா தெய்வமே! நான் சிவாஜி மாதிரி நடிப்புல பின்னிடுவேன். நம்பியார் மாதிரி வில்லத்தனம் பண்ணுவேன். பாக்கதானே போறீங்க என் நடிப்பையும் வில்லத்தனத்தையும்!” கொக்கரித்தான் தனசேகரன்.

“சபாஷ்!” கைதட்டிச் சிரித்தான் நாகராஜு.

மேலும் நான்கு சரக்கு பாட்டிலை பைக்குள்லிருந்து எடுத்து மேஜை மீது வைத்தான்.

மாமிசத்தைப் பார்த்த வேட்டை நாய்போல் பாட்டில்களை ஆசையோடு வெறிக்கப் பார்த்தான் தனசேகர்.

——-

தனது அரிஸ்டோகிரேட் பெட்டியில் பதினைந்து நாட்களுக்குத் தேவையான டிரஸ்களையும் மற்ற பொருட்களையும் எடுத்து வைத்தபடி கோவைக்குச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்த ராகவின் மனது ஒரு நிலையிலில்லாமல் தவித்துக் கொண்டிருந்தது.

திங்கள், செவ்வாய் இரண்டு நாளாயிற்று, இந்துவைப் பார்த்து. வழக்கமாய்ச் சந்திக்கும் இடத்தில் காத்திருந்ததுதான் மிச்சம். இந்து வரவேயில்லை.

‘ஒருவேளை கல்லூரி மதியம் வரை தானோ! அதனால் மதியமே வீட்டுக்குப் போய் விடுகிறாளோ?’ என்று நினைத்து இன்று காலைகூட பஸ் ஸ்டாப்பில் போய் நின்ற போது இந்து பஸ்ஸேர வரவில்லை.

‘ஆச்சு தோ கோவைக்கு கெளம்பியாச்சு. இன்னும் பதினைந்துநாள் இந்துவை சந்திக்க முடியாது. நான் கோவை செல்வது பற்றி தெரியாத இந்து தீடீரென சந்திக்குமிடத்துக்கு என்னைத் தேடி வந்தால், பதினைந்து நாள் என்னைக் காணவில்லை என்றால் எப்படித் தவித்துப் போவாள். என்ன நினைப்பாள்?’ நினைக்கும்போதே நெஞ்சு கனத்துப் போனது
ராகவ்க்கு.

“ராகவ் கண்ணா! மொத மொதலா அம்மாவ விட்டுட்டு பதினஞ்சுநாள் தனியா இருக்கப் போற. நீ இல்லாம நா எப்டி இருக்கப் போறேனோ தெரீல. நல்லா சாப்டு கண்ணு, அரவயிறும், கால் வயிறுமா பட்னி கெடக்காத” அம்மா அருகில் நின்றபடி சொல்லிக் கொண்டிருந்த எதுவும் அவன் மனதில் ஏறவில்லை.

“நா கெளம்பறேன்” பெட்டியைத் தூக்கிக் கொண்டு கிளம்பியவனிடம், “ராகவ், மாமா சொல்லிட்டுப் போன கெடுல நாலுநாள் போயிடுத்து. இன்னும் ஆறு நாள்ல அங்கேயும் ஓய்வு நேரத்துல நல்லா யோசி. மாமாக்கு பதில் சொல்லனுமோனோ” என்ற போது பதில் சொல்லாமல் பல்லைக் கடித்துக் கொண்டான் ராகவ்.

கும்பகோணத்திலிருந்து கோவை செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்தான் ராகவ். அவன் திரும்பி வர ஆகப் போகும் பதினைந்து நாட்களில் என்னென்ன மாற்றங்களையெல்லாம் செய்யக் காத்திருக்கிறது காலம் என்பதை அறிந்திராதவன் சீட்டில் சாய்ந்து கண்களை மூடி இந்துவின் நினைப்பில் மூழ்கிப் போனான்.

(நேசம் வளரும்)

காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்
காஞ்சிபுரம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.