முதுமை – சிறுகதை

முதுமை - சிறுகதை

பனங்குடி கிராமத்திற்கு வெளியே இருந்த சாலையோரத்தில் ஒரு தற்காலிக பந்தல்.

பந்தலில் மண்பானை ஒன்று வைத்து அதன் மேல் ஒரு டம்ளர் கவிழ்க்கப்பட்டு இருந்தது.

காலை பத்து மணிக்கு வயதான பாட்டி தண்ணீர் குடத்துடன் அப்பந்தலுக்கு வந்தார். பானையைக் கழுவி அதில் தண்ணீரை ஊற்றிவிட்டுக் கிளம்பினார்.

அப்போது எதிரே வந்த ஒரு பெண் ஒருத்தி “ஏன் பாட்டி இந்த தள்ளாத வயசுல இது உனக்கு தேவையா? எவ்வளவு தொலைவில் இருந்து தண்ணியை கொண்டு வந்து ஊத்தி வச்சிட்டு போற. தண்ணிய ஊத்தி வைக்கிறது நல்லது தான்
அதுக்காக உன் உடம்பையும் பாத்துக்கணும்ல …” என்றார்.

“என்னம்மா பண்றது? அடிக்கிற வெயிலு நம்மளுக்கு தாங்கல. இந்த ரோட்டுல எவ்வளவு பேரு நடந்து போறாங்க வராங்க. பாவம்மா… ஏதோ நம்மளால முடிஞ்சது. இந்த மாதிரி ஏதாச்சும் செஞ்சா போறப்ப புண்ணியமா போகும்.”

“ஆமாம் பாட்டி தாத்தா என்ன செய்யுது? அத தூக்கிட்டு வர சொல்லலாமுல்ல …”

“பாவம் அவர் என்ன செய்வாரு? ஒத்த நாடி மனுஷன். காலையில எழுந்து பதனி விக்க போயிட்டாரு. வித்துட்டு வரப்போ அரிசி பருப்பு வாங்கிட்டு வருவாரு.
அவருக்கும் வயசாயிடுச்சுல. வயசான காலத்துல நாங்க ரெண்டு பேரும் அல்லாடுறோம்”

“உங்க மகனும் மகளும் வந்துட்டு போறாங்களா பாட்டி?”

“அவங்க படிச்சவங்க பட்டணத்தோட போய் செட்டில் ஆயிட்டாங்க. எங்களையும் கூப்பிட்டாங்க தான். நாங்க தான் இந்த கிராமத்தை விட்டுட்டு போகல. இருக்கிறது இன்னும் கொஞ்ச நாளு. எங்க காலத்தை ஓட்டிட்டு போயிடுவோம்.

இப்போ வெயில் காலம் ஆரம்பிச்சிடுச்சு. பள்ளிக்கூடம் எல்லாம் லீவு விட்டுடுவாங்க. இந்த லீவுல என் பேரனும் பேத்திகளும் வர்றதா சொல்லி இருக்காங்க. அதுக்காகத்தான் நாங்க ரெண்டு பேரும் காத்துக்கிட்டு கிடக்கிறோம். எப்ப வராங்களோ” என்று சொல்லிக்கொண்டு பாட்டி சென்றார்.

கோடை காலத்தில் சாலையோரத்தில் தாத்தா தற்காலிக பந்தல் அமைப்பார். அப்பந்தலில் இருக்கும் மண்பானையில் தண்ணீரை நிரப்பி செல்வார் பாட்டி.

சாலையில் வருவோரும் போவோரும் அப்பந்தலில் தண்ணீர் குடித்து தாகத்தைத் தணித்து விட்டு செல்வார்கள்.

பாட்டி, வீட்டின் அருகே செல்லும் போது கார் ஒன்று வந்து நின்றது.

பாட்டி ‘யாராக இருக்கும்?’ என்று நடையை அதிகரிக்க கதவைத் திறந்து கொண்டு சிறுவன் ஒருவனும், சிறுமி ஒருத்தியும் ஓடி வந்தனர்.

“அடடடே! வாங்க வாங்க வாங்க செல்லங்களா” என்று கூறி பாட்டி அணைத்துக் கொண்டார்.

“ஆமாம் பாட்டி எங்க போயிட்டு வரீங்க? நாங்க வருவோம்னு தெரியுமில்ல… வீட்டுக்கு வந்தா தாத்தாவையும் காணல” என்று கேட்டாள் சிறுமி அமுதா கேட்டாள்.

“நாங்க எங்கடா செல்லம் போயிட போறோம். தாத்தா கடைக்கு போய் இருக்காரு. நான் தண்ணி பந்தலுக்கு போய் தண்ணி அள்ளி ஊத்திட்டு வர்றேன்.”

“அம்மா வாம்மா சீக்கிரம் கதவ தொற. நாங்க எவ்வளவு நேரம் கார்லேயே உட்கார்ந்து வந்தோம் தெரியுமா?” என்று கேட்டாள் பாட்டியின் மகள் புஷ்பா.

“ஆமா எங்க உன் வீட்டுக்காரரு?”

“அவருக்கு ஆபீஸ்ல வேலை இருக்குதாம். நீங்க போங்க நான் அப்புறமா வரேன் என்று சொல்லி எங்கள அனுப்பி விட்டார்.”

காரை திருப்பி அனுப்பி விட்டு எல்லாரும் உள்ளே சென்றனர்.

அப்போது அருண் ஓடிப்போய் “ஐயா கொய்யாப்பழம்” என்றவாறு கொய்யா மரத்தில் ஏறினான் .

“டேய் டேய் நானும் வரேன்டா எனக்கும் பறிச்சு தறியா?” என்றவாறே அமுதாவும் ஓடினாள்.

“டேய் டேய் பாத்துடா. இங்கே வந்தும் ஆரம்பிச்சிட்டீங்களா உங்க வால்தனத்தை?” என்று ஆதங்கப்பட்டாள் புஷ்பா.

“அத விடுமா குழந்தைங்க தானே!” என்றார் பாட்டி.

அப்போது சைக்கிளை தள்ளி கொண்டு ரங்கசாமி வந்தார்.

அருணும் அமுதாவும் “ஐ! தாத்தா வந்தாச்சு” என்று சொல்லிக் கொண்டு ஓடி வந்தனர்.

ரங்கசாமி சைக்கிளை நிறுத்திவிட்டு “அடடே! வாங்க வாங்க! வாங்க! எப்ப வந்தீங்க?” என்றார்.

பின்னர் அருணை பார்த்து “வாடா பெரிய மனுஷா. இப்போதான் தெரிஞ்சிச்சா இந்த தாத்தாவ… சரி சரி வாங்க உட்காருங்க” என்று வரிசையா உட்கார வைத்து பனை ஓலையில் ஆளுக்கு ஒரு தொன்னை மடித்து பதநீரை அதில் ஊற்றி கொடுத்தார்.

“அப்பா நல்லா இருக்குப்பா. இப்பவும் நான் சின்ன புள்ளையில குடிச்ச மாதிரி இருக்குது.” என்று சிரித்தாள் புஷ்பா.

“..ம் இதெல்லாம் உங்க பட்டணத்துல கிடைக்குமா?” என்று கேட்டார் ரங்கசாமி.

“அதெல்லாம் அங்க எங்க? என்ன இருந்தாலும் நம்ம கிராமம் நம்ம கிராமம் தான். எங்க பார்த்தாலும் பச்சை பசேர்னு பசுமை. இயற்கையான காற்று. வீட்டை சுற்றிலும் மாமரம், தென்னை மரம், பனைமரம், கொய்யா மரம். பக்கத்திலேயே ஆறு ஓடுது. கொடுத்து வச்சவங்க ரெண்டு பேரும் அமைதியா வாழ்றீங்க. ஆமா அண்ணனும் அண்ணியும் குழந்தைகளோட வர்றாங்கன்னு சொன்னாங்களே, என்ன ஆச்சு?”

“அவங்களுக்கும் ஸ்கூல் லீவு விட்டுட்டாங்க. நாளைக்கு நாளான்னிக்கு வந்துருவாங்க.” என்று பதிலளித்தார் பாட்டி.

பதநீரை குடித்து முடித்தனர்.

“என்னங்க, குழந்தைகளுக்கு நொங்கு வெட்டி கொடுங்க. மேல் எல்லாம் வேர்க்குரு புரிஞ்சு கிடக்குது.”

“இரு இரு அவங்களுக்கு தான் எல்லாம்” என்றபடி ரங்கசாமி அரிவாளை எடுத்துக்கொண்டு பனைமரம் நோக்கி நடந்தார்.

புஷ்பா மாமரத்தில் ஊஞ்சல் கட்டி குழந்தைகளை ஆடவிட்டுக் கொண்டிருந்தாள்.

சிறிது நேரத்தில் ரங்கசாமி மாமரத்தடியில் கயிறு கட்டிலில் உட்கார்ந்து
எல்லோருக்கும் நொங்கை சீவி கொடுத்து கொண்டு இருந்தார்.

அன்று சாயங்காலம் புஷ்பாவின் அண்ணனும் அண்ணியும் குழந்தைகளுடன் வந்தனர்.

புஷ்பாவின் அண்ணி, “எங்களுக்கு முன்னாடியே வந்துட்டீங்களா நீங்க? நாங்க தான் முன்னாடி வந்தோம்னு நினைச்சோம்”

அன்றிலிருந்து பாட்டியின் வீட்டில் திருவிழா கோலம் தான்.

நாட்கள் சென்று விட்டன. லீவும் முடிந்தது.

ஒருவர் பின் ஒருவராக சென்று விட, பாட்டியும் தாத்தாவும் மறுபடியும் எப்போது அவர்கள் வருவார்கள் என்று காத்திருந்தனர்.

திட்டச்சேரி மாஸ்டர் பாபு

Visited 1 times, 1 visit(s) today

Comments

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.