வாரணம் ஆயிரம்

திருமணப்பேற்றினை அருளும் வாரணம் ஆயிரம் பதிகம்

வாரணம் ஆயிரம் பதிகம் நல்ல திருமணப் பேற்றினை அளிக்கிறது. இப்பாடல் சூடிக்கொடுத்த சுடர் கொடி என்னும் ஆண்டாள் நாச்சியாரால் பாடப் பெற்றது.

திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் நூல்கள் ஆண்டாளால் இயற்றப்பட்டு இன்றும் அவரது புகழைப் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.

கன்னிப் பெண்கள் மார்கழி மாதத்தில் வாரணம் ஆயிரம் பதிகம் பாடி நல்வாழ்க்கையோடு நன்மக்கட்பேறையும் பெறலாம்.

இப்பதிகத்தின் முதல் பாடல் மாப்பிளை அழைப்பு பற்றியும்

இரண்டாவது பாடல் நிச்சயதார்த்தம் பற்றியும்

மூன்றாம் பாடல் பெரியோர்களின் அனுமதி பற்றியும்

நான்காம் பாடல் காப்பு கட்டுதல் பற்றியும்

ஐந்தாம் பாடல் மணம் முடிக்க மணமகனாக‌ பெருமாள் வந்த நிலை பற்றியும்

ஆறாம் பாடல் திருமணம் முடித்து கைபிடித்தல் பற்றியும்

ஏழாம் பாடல் அக்னியை வலம் வருதல் பற்றியும்

எட்டாம் பாடல் அம்மி மிதித்தல் பற்றியும்

ஒன்பதாம் பாடல் பொரியிடுதல் பற்றியும்

பத்தாம் பாடல் மணமக்கள் ஊர்வலம் பற்றியும்

பதினொன்றாம் பாடல் இப்பதிகத்தினைப் பாடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் கூறுகிறது.

வாரணம் ஆயிரம் பதிகம்

வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து

நாரண நம்பி நடக்கின்றான் என்று எதிர்

பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்

தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீ நான்                        (1)

 

நாளை வதுவை மணம் என்று நாள் இட்டு

பாளைக் கமுகு பரிசு உடைப் பந்தற் கீழ்

கோளரி மாதவன் கோவிந்தன் என்பான் ஓர்

காளை புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான்                                  (2)

 

இந்திரன் உள்ளிட்ட தேவர்-குழாம் எல்லாம்

வந்திருந்த என்னை மகட் பேசி மந்திரித்து

மந்திரக்கோடி உடுத்தி மணமாலை

அந்தரி சூட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்                                 (3)

 

நால்-திசைத் தீர்த்தம் கொணர்ந்து நனிநல்கி

பார்ப்பன சிட்டர்கள் பல்லார் எடுத்துஏத்தி

பூப்புனை கண்ணிப் புனிதனோடு என்தன்னைக்

காப்பு-நாண் கட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்                      (4)

 

கதிர்-ஒளித் தீபம் கலசம் உடன் ஏந்திச்

சதிர்இள மங்கையர் தாம்வந்து எதிர்கொள்ள

மதுரையார் மன்னன் அடிநிலை தொட்டு எங்கும்

அதிரப் புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான்                                  (5)

 

மத்தளம் கொட்ட வரி-சங்கம் நின்று ஊத

முத்து உடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தல்கீழ்

மைத்துனன் நம்பி மதுசூதன் வந்துஎன்னைக்

கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழீ நான்                       (6)

 

வாய்நல்லார் நல்ல மறை ஓதி மந்திரத்தால்

பாசிலை நாணல் படுத்துப் பரிதி வைத்து

காய் சின மா களிறு அன்னான் என் கைபற்றி

நீ வலஞ் செய்யக் கனாக் கண்டேன் தோழீ நான்                        (7)

 

இம்மைக்கும் ஏழ்ஏழ் பிறவிக்கும் பற்று ஆவான்

நம்மை உடையவன் நாராயணன் நம்பி

செம்மை உடைய திருக்கையால் தாள் பற்றி

அம்மி மிதிக்கக் கனாக் கணண்டேன் தோழீ நான்                     (8)

 

வரிசிலை வாள் முகத்து என்னைமார் தாம் வந்திட்டு

எரிமுகம் பாரித்து என்னை முன்னே நிறுத்தி

அரிமுகன் அச்சுதன் கைமேல் என்கை வைத்துப்

பொரிமுகந்து அட்டக்கனாக் கண்டேன் தோழீ நான்                (9)

 

குங்குமம் அப்பிக் குளிர்சாந்தம் மட்டித்து

மங்கல வீதி வலஞ் செய்து மா மண நீர்

அங்கு அவனோடும் உடன் சென்று அங்கு ஆனைமேல்

மஞ்சனம் ஆட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்                      (10)

 

ஆயனுக்காகத் தான் கண்ட கனாவினை

வேயர் புகழி வில்லிபுத்தூர்க் கோன் கோதை சொல்

தூய தமிழ்மாலை ஈரைந்தும் வல்லவர்

வாயும் நன் மக்களைப் பெற்று மகிழ்வீரே                                      (11)

 

பொருள் விளக்கம்

வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து

நாரண நம்பி நடக்கின்றான் என்று எதிர்

பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்

தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீ நான்

என்னைப்பெண் கேட்டு ஆயிரம் யானைகள் சூழ என் தலைவனான நாராயணன் வருகின்றான் என்ற செய்தியால் அவனை எதிர் கொண்டு வரவேற்க ஊர் மக்கள் எல்லாம் வழி எங்கும் தோரணங்கள் கட்டியும், பொன்னால் செய்த குடங்களைக் கொண்டு அலங்கரித்தும் இருந்ததை நான் கனவில் கண்டேன் தோழீ.

 

நாளை வதுவை மணம் என்று நாள் இட்டு

பாளைக் கமுகு பரிசு உடைப் பந்தற் கீழ்

கோளரி மாதவன் கோவிந்தன் என்பான் ஓர்

காளை புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான்

தென்னை மற்றும் பாக்கு மரத்தால் வேயப்பட்ட பந்தலின் கீழ் நரசிம்மனும் மாதவனும் ஆகிய கோவிந்தன் நாளை திருமணம் என்று நாள் குறித்த அறிவிப்பால் காளை போல வீற்றிருந்ததை நான் கனவில் கண்டேன் தோழீ

 

இந்திரன் உள்ளிட்ட தேவர்-குழாம் எல்லாம்

வந்திருந்த என்னை மகட் பேசி மந்திரித்து

மந்திரக்கோடி உடுத்தி மணமாலை

அந்தரி சூட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்

தேவர்களின் தலைவனான இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் எல்லாம் வருகை புரிந்து என்னை மணப்பெண்ணாய் மணம் பேசி மந்திரங்கள் சொல்லி எனக்கு புதிய ஆடைகளைக் கொடுத்து அவற்றை அணிந்து வந்தபின் மைத்துனியாகிய பார்வதி தேவி எனக்கு மணமாலையை அணிவிக்க நான் கனவு கண்டேன் தோழீ

 

நால்-திசைத் தீர்த்தம் கொணர்ந்து நனிநல்கி

பார்ப்பன சிட்டர்கள் பல்லார் எடுத்துஏத்தி

பூப்புனை கண்ணிப் புனிதனோடு என்தன்னைக்

காப்பு-நாண் கட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்

நான்கு திசைகளிலிருந்தும் புனிதநீரினைக் கொண்டுவந்து அந்தணர்களில் சிறந்தோர் பலபேர்கள் மந்திரங்களால் ஓதி அப்புனிதநீரினைத் தெளித்து தாமரை மலர்களை அணிந்துள்ள புனிதமான கண்ணனுக்கும் எனக்கும் கையில் காப்புக் கயிறு கட்ட நான் கனவு கண்டேன் தோழீ

 

கதிர்-ஒளித் தீபம் கலசம் உடன் ஏந்திச்

சதிர்இள மங்கையர் தாம்வந்து எதிர்கொள்ள

மதுரையார் மன்னன் அடிநிலை தொட்டு எங்கும்

அதிரப் புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான்

கதிரவனைப் போல ஒளியுடைய தீபங்களையும், கலசங்களையும் ஏந்தி அழகிய இளம் பெண்கள் வரவேற்கும் போது வடமதுரை மன்னான கண்ணன் மணப்பந்தலின் நிலைப்படியினைத் தொட்டு வாத்தியங்கள் முழங்க உள்ள புகுந்து வர நான் கனவு கண்டேன் தோழீ

 

மத்தளம் கொட்ட வரி-சங்கம் நின்று ஊத

முத்துஉடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தல்கீழ்

மைத்துனன் நம்பி மதுசூதன் வந்துஎன்னைக்

கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழீ நான்

மங்கல வாத்தியங்களான கெட்டி மேளமும், வரிகளையுடைய சங்கும் ஒலிக்க சிறந்த முத்துக்களால் அலங்காரலம் செய்யப்பட்ட பந்தலின் கீழ் மதுசூதனாகிய கண்ணபிரான் என் கையினைப் பற்றி என்னை மணம் புரிந்து கொண்டான் என நான் கனவு கண்டேன் தோழீ

 

வாய்நல்லார் நல்ல மறை ஓதி மந்திரத்தால்

பாசிலை நாணல் படுத்துப் பரிதி வைத்து

காய் சின மா களிறு அன்னான் என் கைபற்றி

நீ வலஞ் செய்யக் கனாக் கண்டேன் தோழீ நான்

நல்ல சொற்களைப் பேசுபவர்கள் தங்களின் வாயால் மறைச் சொற்களைக் கூற சூரியன் ஒளியில் பதப்படுத்திய பச்சை இலைகளுடன் கூடிய நாணலைக் கொண்டு வளர்க்கபப்ட்ட அக்னியை யானையைப் போன்றவனாகிய கண்ணபிரான் என் கையினையைப் பிடித்து வலம் வர நான் கனவு கண்டேன் தோழீ

 

இம்மைக்கும் ஏழ்ஏழ் பிறவிக்கும் பற்று ஆவான்

நம்மை உடையவன் நாராயணன் நம்பி

செம்மை உடைய திருக்கையால் தாள் பற்றி

அம்மி மிதிக்கக் கனாக் கணண்டேன் தோழீ நான்

இந்தப் பிறவிக்கு மட்டுமில்லாமல் ஏழேழ் பிறவிக்கும் நம்முடைய நற்கதிக்கு காரணமானவனும், நம்மை செல்வமாக உடையவனுமாகிய நாராயணன் தம்முடைய சிவந்த கைகளினால் என்னுடைய பிடித்து அம்மி மிதிக்கச் செய்தவாறு நான் கனவு கண்டேன் தோழீ

 

வரிசிலை வாள் முகத்து என்னைமார் தாம் வந்திட்டு

எரிமுகம் பாரித்து என்னை முன்னே நிறுத்தி

அரிமுகன் அச்சுதன் கைமேல் என்கை வைத்துப்

பொரிமுகந்து அட்டக்கனாக் கண்டேன் தோழீ நான்

அழகிய புருவங்களை உடைய என் உடன்பிறந்தோர் அக்னி வளர்த்து அதன் முன்னர் என்னை நிறுத்தி நரசிங்கமாகிய அச்சுதனின் கைமேல் என்னுடைய கைகளை வைத்து நெற்பொரியை அக்னியில் இட நான் கனவு கண்டேன் தோழீ

 

குங்குமம் அப்பிக் குளிர்சாந்தம் மட்டித்து

மங்கல வீதி வலஞ் செய்து மா மண நீர்

அங்கு அவனோடும் உடன் சென்று அங்கு ஆனைமேல்

மஞ்சனம் ஆட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்

குளிர்ச்சியான சந்தனத்தையும் குங்குமத்தையும் திருமேனியில் பூசிக் கொண்டு யானையின் மீது கண்ணபிரானும் நானும் ஏறி ஊர்வலம் வந்தோம். எங்கள் இருவரையும் மஞ்சள் நீராட்டியதை நான் கனவில் கண்டேன் தோழீ

 

ஆயனுக்காகத் தான் கண்ட கனாவினை

வேயர் புகழ் வில்லிபுத்தூர்க் கோன் கோதை சொல்

தூய தமிழ்மாலை ஈரைந்தும் வல்லவர்

வாயும் நன் மக்களைப் பெற்று மகிழ்வீரே

கண்ணபிரானை அடையவதற்காக பெரியாழ்வாரின் புதல்வியான ஆண்டாள் கண்ட கனவினைப் பற்றிய மேற்கூறிய தூய பத்து தமிழ் பாடல்களைப் போற்றிப் பாடுவோர் சகல சௌபாக்யங்களுடன் கூடிய திருமண வாழ்வினையும், நல்ல மக்கள் செல்வங்களையும் பெற்று பெருவாழ்வு வாழ்வர்.

கோதை என்ற ஆண்டாள்


Comments

“திருமணப்பேற்றினை அருளும் வாரணம் ஆயிரம் பதிகம்” அதற்கு 2 மறுமொழிகள்

  1. bommuraj rajaram

    தமிழ் மொழி பரப்பும் பணி சிறக்கட்டும் உங்கள் அணி

  2. தங்களுக்கு நன்றி