அம்மான்னா சும்மா இல்லடா!

கேஸ் அடுப்பின் பெரிய பர்னர் பக்கம் சாதம் ‘தளதள’ வென்று கொதித்துக் கொண்டிருக்க, சிறிய பர்னர் பக்கம் முட்டைகோஸ் பொரியல் வெந்து கொண்டிருந்தது.

சிங்க்கில் காபி குடித்த டம்ளரைக் கழுவிக் கொண்டிருந்த ஜானகி மாமி கொதித்துக் கொண்டிருக்கும் சாதத்திலிருந்து கஞ்சி ‘சரசர’வென்று பொங்கி மேலெழும்பி வரும் சப்தம் கேட்டு, சட்டென ஈரக்கைகளை உதறிவிட்டு அடுப்பை சிம்மில் வைத்துவிட்டுக் கரண்டியால் சாதத்தைக் கிளறி ‘வெந்துவிட்டதா?’ என்று ஒற்றைப் பருக்கையை எடுத்து நசுக்கிப் பார்த்தார்.

‘ம்கூம்.. இன்னும் நன்னா வேகணும்..வெந்துடுத்துன்னு நம்பி கஞ்சி வடிச்சா சாப்டும்போது வெரவெரயா முழுங்கவே முடீல.. பழவரிசியோனோ ..லேட்டாதா வேகும். கொஞ்சம் குழையட்டும்’ என்று நினைத்தவாறு மேலும் ஒரு டம்ளர் தண்ணீரை சாதத்தில் ஊற்றிவிட்டார்.

பக்கத்தில் வெந்து கொண்டிருக்கும் கோஸ் பொரியல் மீது மூடி வைத்திருந்த தட்டை கிடுக்கியால் பிடித்துத் தூக்கி மேடைமீது வைத்துவிட்டு பொரியலைக் கரண்டியால் மேலும் கீழுமாய் சுற்றிச்சுற்றிக் கிளறி விட்டார். கொஞ்சமாய் தண்ணீரைக் கையால் தெளித்துவிட்டு மீண்டும் தட்டை எடுத்துமூடியபோது..

“அம்மா!” மகன் மூர்த்தியின் குரல் சமையலறை வாசலிலிருந்து.

மகன் அழைப்பது காதில் விழுந்தும், விழாதமாதிரி திரும்பிப் பார்க்கவில்லை மாமி.

“அம்மா!” மீண்டும் மூர்த்தியின் குரல்.

கைப்பிடித்துணியால் சமையல் மேடையைத் துடைத்துத் துடைத்து சுத்தம் செய்வது போல் பாவனை செய்தபடி மூர்த்தியின் அழைப்பை செவிசாய்க்காமல் புறக்கணித்தார் மாமி.

தான் அழைப்பது காதில் விழுந்தும், விழாதமாதிரி என்னவென்று கேட்கவோ, திரும்பிப் பார்க்கவோ செய்யாமல் மேடையைத் துடைப்பதுபோல் பாவனை செய்யும் தாயை பின்னந்தலையில் உருட்டுக் கட்டையால் அடிக்க வேண்டும்போல் ஆத்திரம் பற்றியது மூர்த்திக்கு.

ஆனாலும் குரலில் போலியான பவ்யத்தை வரவழைத்துக் கொண்டு “அம்மா! ஒடம்புக்கு முடியாம நீ ஏம்மா சமைக்கிற. நா ஸ்விக்கீல ஆர்டர் பண்ணீருப்பேன்ல..”

அடிவயிற்றிலிருந்து கிளம்பிய ஆத்திரம் நெஞ்சுவரை வந்து வார்த்தைகளாய் வெடிக்காமல் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டார் மாமி.

இப்போதும் பதில் சொல்லாமல் கரண்டியால் பொரியலைக் கிளறிவிட்டுக் கரண்டியை ‘நங் நங்’ என்று பொரியல் வேகும் வாணலியின் விளிம்பில் தட்டித் தட்டித் தன்னுடைய வெறுப்பையும் ஆத்திரத்தையும் வெளிக்காட்டினார்.

அம்மாவின் ஆத்திரமும் தன்னை அலட்சியப்படுத்துவதும் மூர்த்திக்குப் புரியாமலில்லை. பொறுத்துக்கொண்டுதான் ஆக வேண்டும். காரியம் ஆக வேண்டுமே? வெட்கம் மானம் இதெல்லாம் பார்த்தால் முடியுமா?

“அம்மா! ராத்திரி ஒடம்புக்கு முடியல ஜொரமா இருக்குன்னு சாஸ்திரிகள் மாமாண்ட ஃபோன்ல பேசும்போது சொன்னியே இப்ப எப்டிருக்கு? நான்னா மெடிகல் ஷாப்ல சொல்லி மாத்ர வாங்கிண்டுன்னா வரட்டுமா?

பொழச்சு கெடந்தா நாளைக்கு அப்பா ஸ்ராத்தமாச்சே. ஒத்தாசைக்கும் யாரையும் கூப்டுக்க மாட்ட. ஸ்ராத்தம்னா சும்மாவா இருக்கு.

வீடு தொடச்சு, காய்கறி நறுக்கி, ஹோமத்துக்குத் தேவையானதெல்லாம் எடுத்து வெச்சு விதவிதமா சமச்சு, பட்சணம் பண்ணி பிராமணாளுக்கு குனிஞ்சு, நிமிந்து சாப்பாடு போட்டு, ஹோம எடந்தொடச்சு, பத்துபாத்ரம் தேச்சு ஐயோடி எத்தன வேல! எத்தன வேல!

பாவம்மா நீ! இந்த வயசுல ஷுகரோடையும் பிபி யோடவும் போரோடிண்டு, ஒண்டியாளா எத்தன செய்யிற..

பிள்ளையின் பொய் வேஷமும் போலிப்பாசமும் உருட்டும் வார்த்தைகளும் மாமிக்கு ஒன்றும் புதிதல்ல என்பதால், அவனின் எந்த உருட்டலும் தன்னை எந்தவிதத்திலும் ஈர்க்கப் போவதில்லை என்று தெரிவிக்க மௌனத்தையே பதிலாகத் தந்து, ஸிங்க்கில் போட்டு வைத்திருந்த மறுநாள் கணவரின் ஸ்ராத்தத்திற்கு பயன்படுத்தும் பித்தளைப் பாத்திரங்களைக் கிண்ண மொன்றில் உப்போடு சேர்த்து ஊறப் போட்டிருந்த புளியை எடுத்துத் தடவிப் பாத்திரம் தேய்க்கும் கம்பிச்சுருளை எக்ஸோ சோப்பில் தொட்டுத் தேய்க்க ஆரம்பித்தார்.

தேய்த்த பாத்திரங்களை குழாயைத் திறந்துவிட்டுத் தண்ணீரில் அலம்ப, பாத்திரங்கள் தங்கம்போல் ‘பளீரெ’ன்று மின்னின.

தேய்த்த பாத்திரங்களைத் தண்ணீர் வடியப் போட்டு வைக்கும் ப்ளாஸ்டிக் கூடையில் குப்புறப் போட்டுவிட்டு, புடவைத் தலைப்பில் கைகளைத் துடைத்தபடி சமையலறையிலிருந்து வெளியேற யத்தனித்தபோது வாசற் படியருகே நின்றிருந்த மூர்த்தி இருகைகளையும் விரித்து தாயை வெளியேற முடியாதபடி தடுத்தான்.

சட்டெனத் திரும்பி மீண்டும் சமையல் மேடைக்கருகே சென்ற மாமி பெரியபர்னரை ஆஃப் பண்ணிவிட்டுச் சாதம் வேகும் பாத்திரத்தைக் கிடுக்கியால் பிடித்து அடுப்பின் பக்கத்தில் தயாராய் வைத்திருந்த கஞ்சி வடிக்கும் பாத்திரத்தில் கொட்ட சாதக்கஞ்சி அதன் அடியில் வைக்கப்பட்டிருந்த பாத்திரத்தில் ‘சடசட’வென்ற சப்தத்தோடு வடிய ஆரம்பித்தது.

கோஸ் பொரியல் வேகும் சின்னபர்னரையும் அணைத்துவிட்டுத் திரும்பியபோது மூர்த்தி வெகுஅருகாமையில் வந்து நின்றான்.

“அம்மா என்னப் பாத்தா ஒனக்கு மனுஷனாத் தெரியலயா? அப்பேபுடிச்சு நாம் பாட்டுக்குப் பேசிண்டேருக்கேன் பதிலே சொல்லாம இருந்தா எப்பிடி?”

“என்ன சொல்னும்னு எதிர்பாக்குற?” முதல் முறையாய் வாயைத் திறந்தார் மாமி.

“நேராவே விஷயத்துக்கு வரேன். நா சொன்னத பத்தி யோசிச்சியா?”

“எதப் பத்தி?”

“என்ன மறந்து போனாப்ல கேக்குற. நானும் ஆறுமாசமா கேட்டுண்ருக்கேன்”

“நீ ஆயிரங் கேப்ப, நீ கேக்கறத்துக்கெல்லாம் ஞாபகம் வெச்சுண்டு பதில் சொல்லிண்ருக்க முடியுமா?”

“என்ன யார்ட்டயோ பேசர மாதிரி விட்டேத்தியா பேசற. நா ஒம் புள்ளங்கிறதாவது ஞாபகம் இருக்கா ஒனக்கு”

“அட அப்டியா! நீ எம்புள்ளயா?” கேட்டபடி ஹாலுக்கு வந்தார் மாமி.

“என்ன ரொம்ப நக்கலும் கிண்டலுமா பேசற?”அம்மாவின் கேள்விக்கு பதில் கேள்வி கேட்டபடி தானும் ஹாலுக்கு வந்தான் மூர்த்தி.

“பின்ன எப்பிடி பேசறது? என் செல்வமே! என்மகனேன்னு மனோகரா படத்துல அந்த காலத்து கண்ணாம்பா பேசறா மாரி பேசணுமா?”

தாடையை இறுக்கிப் பல்லைக் கடித்தான் மூர்த்தி.

“த பாரு! ரொம்ப ஆடாத. இந்த வீட்ட வித்து பணம் குடுக்கப் போறியா இல்லியா?” நேரடியாய் மேட்டருக்கு வந்தான்.

“ரொம்ப ஆடாத!” என்ற மகனின் வார்த்தை மனதைக் கிழித்து சூடேற்றியது மாமியை

“டேய் போய்டு, போய்டு. இந்த வீட்டுப் பக்கம் இனிமே வராத”

“வீட்ட வித்து பணத்த குடு. அப்றம் நா ஏன் வரப்போறேன்? பிஸினஸ் பண்ணத்தானே பணங்கேக்கறேன்.குடுத்தா கொறஞ்சா போய்டுவ”

“ச்சீ! வாய மூடு. ஏன் பீரோவுல வெச்சிருந்த பதினஞ்சு பவுன் நகையையும் எட்டாயிரம் பணத்தையும் சுருட்டிண்டு ஓடினியே அதக் கொண்டு என்ன பண்ணின? பிசினஸா பண்ணின? குடியுங் குட்டியுமா கொட்ட மடிச்சி, சேக்காளிங்ககூடச் சேந்து தண்ணியடிச்சுட்டு சூதாட்டம் ஆடி அடிதடில எறங்கி கம்பி எண்ணல?

நீ கெட்டுச் சீரழியரது போறாதுன்னு ஒன்னப்பெத்த பாவத்துக்கு வேத வித்தான எம்புருஷன போலீஸ் ஸ்டேஷன் ஏற வெச்சு நாறடிச்சியேடா பாவி.

எப்பேர்ப்பட்ட உத்தம புருஷர எனக்குக் கணவரா குடுத்த ஆண்டவன், ஒம்போல கேவலம் புடிச்சவன புள்ளையா குடுத்ததுக்கு நா மட்டுமே செஞ்ச பாவமாதா இருக்க முடியுமே தவிற வேறெதுவும் இருக்க முடியாது.

வேதமும் சாஸ்திரமும் மந்ரங்களும் மட்டுமே வெளிப்படும் என்புருஷன் வாயால வேண்டாத வார்த்தைகள் வந்ததே இல்ல. ஒன்னோட தகாத செயல்களும் நடவடிக்கைகளும் வார்த்தைகளும் அவர் மனச
ரணமாக்கும் போதெல்லாம்கூட அவர் ஒன்ன குத்தாஞ் சொன்னதில்ல.

நாசெஞ்ச பாவம்.. நாசெஞ்ச பாவம்.. எந்த ஜென்மத்துல செய்யக் கூடாத என்ன பாவத்த செஞ்சேனோ, இந்த ஜென்மதுல இப்பிடியொரு புள்ளயப் பெத்து அனுபவிக்கனும்னு ஆண்டவன் என் தலேல எழுதிவெச்சுட்டான்னு தன்னத் தானே வருத்திப்பார்டா பாவி.

வேதனையும் வலியுமா தவிக்கிறபோதுகூட ‘சிவ சிவா, நாராயணா, காமாக்ஷீ’ன்னுதான் சொல்லிச் சொல்லி தன் வேதனய வெளிப்படுத்துவார்.

பல்லிடுக்கால ஒன்ன ஒத்தவார்த்தகூட சொல்லமாட்டார். அவர் ஒரு ஞானிடா ஞானி. இந்த வீட்ட, பணத்த மடீல கட்டீண்டு கட்டலடா. பலவருஷம் பல பேராத்துக்கு கல்யாணம் பூணூல்னு போய் கல்யாணம் பண்ணி வெக்கிற வாத்தியாராவும் பூணூல் நடத்தி வெக்கிற சாஸ்திரியாகவும் சாவு வீடுகள்ள ஈமக்கிரியை செஞ்சு வெக்கிற புரோகிதராவும் தெவசந்திக்களுக்குப்போற ப்ராமணராவும் போய்ப் போய் தொண்ட கிழிய மந்திரங்கள ஓதி ஓதி, அவா குடுக்கற காசுல குடும்பத்தயும் நடத்தி இந்த வீட்டையும் கட்டினது ஒனக்கென்னடா தெரியும்? இந்த வீட்டக் கட்டிமுடிக்கிறதுக்குள்ள அவர் என்ன பாடு பட்ருப்பார்னு.

ரொம்ப சுளுவாத்தான் சொல்ற, வீட்டவித்துப் பணத்தக் குடுன்னு”

மூச்சு வாங்கியது மாமிக்கு.

“இந்த பல்லவிய இன்னும் எத்தன நாளைக்குப் பாடிண்ருப்ப? முடிவா என்ன சொல்ற? வீட்ட வித்து பணம் தருவியா மாட்டியா?”

“தமிழ்ல தானே சொல்றேன். புரியல! வீட்ட விக்க மாட்டேன். மாட்டேன். மாட்டேன்.”

“அப்ப நாளைக்கு அப்பாக்கு திவசம் பண்ண மாட்டேன்”

“ஏய்! என்ன பயங்காட்றியா? நீ எம் புருஷனுக்கு தெவசம் பண்ணவே வேண்டாம். அவர் செத்த அன்னிக்கு அவரோட பொணம் கெடக்கற அப்பவே பத்தாயிரம் பணம் குடுத்தாதான் ஈமச்சடங்கு செய்வேன். கொள்ளி வைப் பேனு பேரம் பேசின வந்தானே நீ.

பாவி ஊரும் ஒறவும் சிரிச்சுடுமோன்னு பயந்து நீ கேட்ட தொகைய குடுத்துன்னா அன்னிக்கு எம்புருஷனோட சாவு காரியத்த முடிச்சேன்.

அவர் காலமாகி நாலு வருஷமாச்சு. நீயா வருஷா வருஷம் அவருக்கு தெவச காரியம் பண்ற? நீ செஞ்சாகூட அவர் ஆன்மா சந்தோஷப்படாது. அவர் பொண்டாட்டியா நானே அவருக்கு எள்ளுந் தண்ணியும் எறைப்பேன். நீ போய்டு. உன் உருட்டலுக்கும் மிரட்டலுக்கும் நான் பயப்பட மாட்டேன்” தீர்மானமாய்ப் பதில் சொன்னார் மாமி.

“த பாரு! நீ செத்தேன்னு வெச்சுக்கோ ஒனக்கு கொள்ளி போட நா வரமாட்டேன். நீ அனாதப் பொணமாதான் ஆவ. கோவிந்தா கொள்ளிதான் ஒனக்குக் கெடைக்கும்.”

“டேய்! ஒங்கையால நெருப்பு வாங்கறதவிட கோவிந்தா கொள்ளி எவ்வளவோ மேல். தோள்ல பூணல் கெடையாது. ஒரு ப்ராமணனுக்கான எந்த கடைமையும் சாஸ்திர சம்ப்ரதாயமும் கெடையாது. ஒங்கை கொள்ளியா? யாருக்குடா வேணும்… போய்டு… போய்டு…

என் வாயால சாபம் வாங்கிடாத. எந்த சாபத்து- லேந்தும் மீண்டுடலாம். பெத்தவ சாபத்துக்கு ப்ராயசித்தமே கெடையாது. இந்த ஜென்மத்துலயே கெட்டுச் சீரழியற நீ பெத்தவ சாபத்த வாங்கினா இன்னும் எத்தன ஜென்மமெடுத்தாலும் நாறித்தாம் போவ.. போய்டு.. நா எதாவது சொல்லிடப்போறேன்”

மூர்த்தி மூர்க்கமாகிப் போனான்.

பெற்றவளின் வார்த்தைத் தாக்குதலின் கூர்மை அவனை வெகுண்டெழச் செய்தது. உண்மை சுட்டது. ஹாலின் சுவர் மூலையில் மடித்துச் சாத்தி வைத்திருந்த குடையை எடுத்து ஆவேசத்தோடு கத்திக் கொண்டே தாயை அடிக்கப் பாய்ந்தான்.

ஓங்கி தாயின் முதுகில் ஓர் அடி வைத்தான். தலையில் இடி இறங்கியதுபோல் அப்படியே கலங்கி நின்று விட்டார் மாமி.

‘பத்து மாதம் சுமந்து பெற்ற பிள்ளை.பெற்ற பிள்ளையின் கையால் அடி வாங்குவது.. ஐயோ என்ன கொடுமை இது?’ அப்படியே மடங்கித் தரையில் அமர்ந்து விட்டார் மாமி.

அழக்கூடத் தெம்பற்றவராய் பிரமை பிடித்தவர்போல் உணர்வற்று வெகுநேரம் அமர்ந்திருந்தவர் சுயநினைவுக்கு வந்து எழுந்தபோது மூர்த்தி போய் விட்டிருந்தான். வாசல் கதவு விரியத் திறந்து கிடந்தது.

காலை மணி எட்டு. கணவரின் ஸ்ராத்த தினம்.

அதனைச் செய்து வைக்க வரும் பிராமணர்களுக்குத் தானமாகக் கொடுக்க வேண்டி அரிசி, வாழைக்காய், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், தட்சிணைப்பணம் என்று தேவையானவற்றையெல்லாம் எடுத்து வைத்துவிட்டு கணவரின் புகைப்படத்திற்கு சந்தனம், குங்குமம் வைத்து பூ வைத்து முடித்தபோது “மாமி” என்று வாசலில் அழைப்பு கேட்டது.

“தோ வந்துட்டேன்” சொல்லிய படியே போய் வாசல் கதவைத்திறந்தார் மாமி.

சாஸ்திரிகள் சாம்பு மாமாவும், அவர்பின்னால் இரண்டு பிராமணாளும் நிற்க, “வாங்கோ! வாங்கோ! உள்ள வாங்கோ!” மூவரையும் அழைத்தார் மாமி.

“மாமி எப்டி இருக்கேள்?” என்று கேட்டபடியே ஹாலுக்குள் கால் வைத்த சாம்பு சாஸ்திரிகள் “அப்பாடி! ஏதோ கோயிலுக்குள்ள நொழையற மாதிரின்னா இருக்கு” என்றவர், “இருக்காதா பின்ன ஒங்காத்துக்காரர் நடராஜ கனபாடிகள் கொஞ்சமாவா இந்தாத்துல வேத பாராயணம், ருத்ரம், சமகம் புருஷ சுக்தம்னு பண்ணீருப்பார். அதோட சாநித்யம் எங்க போகும்?” என்று தானே சொல்லி முடித்தார்.

“ஆமா, வீட்ட கோயில் மாரி ஆக்கினவர் தான் தெய்வமா போய்ச் சேந்துட்டார். நான்னா படாத பாடுபடறேன்” என்றார் மாமி வருத்தம் தோய்ந்த குரலில்.

மூர்த்தியைப்பற்றி நன்றாக அறிந்தவர் சாம்பு சாஸ்திரிகள் என்பதால் மாமியின் வருத்தம் புரிந்தவராய், “ப்ச்! என்ன பண்றது சொல்லுங்கோ? எல்லாம் வாங்கிண்டு வந்த வரம். வருத்தப்படாதிங்கோ!” என்றார் மாமியிடம் அனுசரணயாய்.

திவசம் கொடுக்கும் சம்பிரதாயங்கள் முடிந்தன.

வந்திருந்த மூவரும் கிளம்பவேண்டிய தருணம்

“சாஸ்திரிகளே!” என்றார் மாமி.

“சொல்லுங்கோ மாமி”

“வேத பாட சால ஆரம்பிக்கணும். அதுக்காக வாடகைகக்கோ, வெலைக்கோ எடம் தேடரதா போன மாசம் கோவில்ல பாத்தப்ப சொன்னேளே! எடம் கெடச்சுடுத்தா? எப்ப பாடசால ஆரம்பிக்கிறேள்? வேதம் கத்துக்க பசங்க கெடச்சுட்டாளா படிக்கிற பசங்களுக்கு சமச்சுப்போட சமையக்காரா கெடச்சாச்சா?”

“எங்க மாமி! வேதம் கத்துக்க இருவத்தோரு பசங்க பேர் குடுத்துருக்கா. வேதம் கத்துக் குடுக்க நான் ரெடியா இருக்கேன். சமைக்கவும் சொல்லி வெச்சா ஆளு கெடச்சுடுவா ஆனா பாடசால ஆரம்பிக்கத்தோதா எடம் கெடைக்கிலயே! நேத்துகூட ஸ்ரீமடத்துல எடம் கெடச்சுதான்னு என்னக் கூப்ட்டுக் கேட்டா. பதில் சொல்ல முடியல போங்கோ” கவலை தெரிந்தது சாஸ்திரிகள் குரலில்.

“சாஸ்திரிகளே!”

“சொல்லுங்கோ!”

“தோ! இந்தாத்தையே வேத பாடசாலை நடத்த குடுத்துள்லாம்னு பாக்கறேன்.”

“என்ன மாமி.. என்ன சொல்றேள்.. என்ன சொல்றேள்?” உட்கார்ந்திருந்த சாஸ்திரிகள் சட்டென எழுந்து நின்றார்.

“என்ன மாமி சொல்றேள்?” என்றார் மீண்டும் நம்ப முடியாதவராய்.

“ஆமா, சாஸ்திரிகளே! இந்தாத்த வேதபாடசால நடத்தக் குடுத்துடலாம்னு இருக்கேன்.”

“வாடகைக்கா? வெலைக்கா? மாமி!”

“வாடகைக்குமில்ல, வெலைக்குமில்ல, வேத பாடசால நடத்த தானமா எழுதிக்குடுத்துடப் போறேன் சாஸ்திரிகளே! குடிசைய விக்கலாம், வீட்ட விக்கலாம், பங்களாவ விக்கலாம், ஆனா கோவில யாராவது விப்பாளா? வாடகைக்குதா விடுவாளா?

இந்தாம் கோவிலுக்கு சமம் சாஸ்திரிகளே! நீங்களே சொன்னேளோனோ ஆத்துக் குள்ள நொழையும்போது ஏதோ கோவிலுக்குள்ள நொழையறாப்ல இருக்குன்னு.

எங்காத்துமாமா இந்தாத்த கோவிலாட்டம்தான் மாத்தி வெச்சுட்டுப் போயிருக்கார்.இந்த கோவிலப்போய் விப்பாளா சொல்லுங்கோ!”

“மாமி ஒங்க புள்ள!”

“நல்லதப் பேசும்போது அவனப்பத்தி பேசாதீங்கோ. நா மண்டையப் போட்டப்றம் ஒரே வாரத்துல இந்தாத்த வித்து, கெடைக்கிற பணத்த வாயால சொல்லக் கூசும் விஷயத்துக்கெல்லாம் செலவு பண்ணிக் கெட்டுச் சீரழுஞ்சு போவான்.

இன்னிக்கே ஸ்ரீமடத்துல சொல்லீடுங்கோ நா வேதபாடசாலைக்கு வீட்டை எழுதித் தர்றதா.அதோட சாஸ்திரிகளே இன்னொரு விஞ்ஞாபனம், என்னன்னா வேதம் படிக்கிற பசங்களுக்கு எ ஒடம்புல தெம்பு
இருக்குறவர நானே சமச்சுப் போடறேன். எனக்கு சம்பளமெல்லாம் வேண்டாம். ஆனா..”

வியப்பிலும் திகைப்பிலும் ஸ்தம்பித்துப்போய் நின்றிருந்த சாஸ்திரிகள், “சொ..சொ..சொல்லுங்கோ மாமி” என்றார்.

“பூமீல பொறக்கறவாள்ளாம் ஒருநா செத்துதானே போகணும். எனக்கும் அந்தநாள் வருமில்லியா? அப்பிடி நான் செத்துட்டேன்னா எம்புள்ளை கிட்ட நா செத்தத சொல்ல வேண்டாம்.

செத்தன்னிக்கு அனாதைப் பொணங்களுக்கு செய்யறாப்ல செய்ய வேண்டிய சம்ப்ரதாயங்களச் செஞ்சிட்டு மருத்துவத்துறைக்கு தெரியப்படுத்திடுங்கோ

ஏன்னா என் உயிர் போனப்புறம் என் ஒடம்ப அரசு மருத்துவத்துறை சார்ந்த மருத்துவக் கல்லூரிக்குத் தானமாய்த் தருவதாய் பதிவு செய்திருக்கேன்.

இந்த உதவியைமட்டும் ஸ்ரீமடத்தின் மூலம் செய்துடனும்னு ஒங்கள வேண்டி கேட்டுக்கறேன் சாஸ்திரிகளே!”

“மாமீ.. மாமீ..” மன உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் விம்மும் சாஸ்திரிகளை கவனிக்காத மாமி மெல்லத் திரும்பி கணவரின் புகைப்படத்தைப் பார்த்தார்.

கணவர் புகைப்படத்திலிருந்து தன்னைப் பார்த்து புன்னகைப்பது போல் இருந்தது மாமிக்கு.

“அடியே ஜானகி! ஒம் பேச்சும் சரி, செய்யற செயலும் சரி எப்பவுமே சிலாக்கியம் தாண்டி, ஸ்ரேஷ்ட்டம் தாண்டி” என்று மனைவி ஜானகியிடம் நடராஜ கனபாடிகள் அடிக்கடி சொல்வது வழக்கம்.

அதுபோலவே இப்போதும் வீட்டை வேத பாடசாலைக்கு எழுதி வைக்கும் தன் முடிவை கணவர் பாராட்டி ‘ஜானகி நீ எடுத்திருக்குற இந்த முடிவும் செயலும் ரொம்ப சிலாக்கியம்! ரொம்ப ஸ்ரேஷ்ட்டம்டி!’ என்ற அர்த்தத்தில் புன்னகைப்பதாகவே தோன்றியது மாமிக்கு.

காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்
காஞ்சிபுரம்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.