தர்மம் தலை காக்கும்! – சிறுகதை

சென்னை காந்தி ரோடு பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஸ்கூட்டர்களில் அடைத்துக் கொண்டு அவசரம் அவசரமாக பள்ளிக்கு விரைந்து கொண்டிருந்தனர்.

அவர்கள் குறிக்கோள் எல்லாம் குழந்தைகள் அவசரம் அவசரமாக பள்ளி, கல்லூரிப் படிப்பை முடித்து, ஐ.டி. வேலை பெற்று அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட வேண்டும் என்பதுதான்!

பாதசாரிகளை எறும்பாக மதிக்கும் நகரத்தின் வாகன சுனாமி பாதசாரிகளை எறும்பாக மிதிக்கும் வேகத்துடன் விரைந்து கொண்டிருந்தது.

புதிதாக தார் போடுவதற்காக பெயர்த்து எடுக்கப்பட்ட புழுதி புயல் கிளப்பிய சாலையில், சிவன் கோவில் அருகேயுள்ள பூங்காவில் ஐம்பதாவது அகவையை தாண்டியும் இளமையை இன்னும் சிறிது காலம் தக்க வைக்க விஜயன் வழக்கம்போல நடைப்பயிற்சி சென்றான்.

வழக்கத்திற்கு மாறாக அன்று மக்கள்திரள் அதிகமாக இருந்தது.

நடக்கத் தடுமாறும் மனைவியை நாள் தவறாமல் தன் ஆட்டோவில் கொண்டு வந்து நடக்க வைத்துவிட்டு சவாரிக்கு சென்றுவிட்டு சிலமணி கழிந்து திரும்பவும் பூங்காவிலிருந்து மனைவியை வீட்டிற்கு கூட்டிக் கொண்டுபோகும் அக்கறையான ஆட்டோ டிரைவர்.

அங்கீகாரம் பெறாத மாதர் சங்கமாக பெஞ்சுகளில் குழுமியிருந்த வயோதிகப் பெண்களின் ‘மாமியார்-மருமகள்’ புகார்கள்; மனக்கசப்புகள்; மனப்புகைச்சல்கள்.

ஆறு மாதம் காணாமல் போய் அமெரிக்கா சென்று மகனோடு இருந்து விட்டு திரும்பிய ஐம்பதைத்தொடும் தம்பதியின் வெளிநாட்டிலிருந்து மீண்ட உத்வேக உற்சாக நடைப்பயிற்சி

‘எங்க வீட்டுக்காரர் நாள் தவறாமல் நடைப் பயிற்சி செல்கிறார்’ என்று வீட்டிலிருக்கும் மனைவி பெருமை பட்டுக் கொள்ள, அவரோ நாள் தவறாமல் பெஞ்சில் அமர்ந்து செல்பேசியில் அனைத்தையும் பார்த்துவிட்டு வீடு திரும்பும் கணவன்.

காலையிலேயே ரொமான்ஸ் மூடில் நெருங்கி நெருக்கி அமர்ந்திருந்த காதல் ஜோடி என்று ஒரு சராசரி சென்னைப் பூங்காவின் காலை பரபரப்பு அங்கே வழிந்தோடிக் கொண்டிருந்தது.

காலை ஏழு மணியிலிருந்து உணவுக்காக பூங்கா மனிதர்களையே சுற்றி சுற்றி வரும் பூங்காவிலேயே வாழும் ஒரு வாலில்லா கருப்பு நாய்.

அது பூங்கா வாசலில் உள்ள ‘கையேந்தி பவன்’களின் வடக்கத்தி ஐட்டங்களை சாப்பிடாது. தமிழ்நாட்டு ஜீவன்! யாரேனும் அதற்கு “பார்லே மேரி பிஸ்கட்’ போட்டால் அன்று அதற்கு பண்டிகை நாள்.

பூங்காவின் உள்ளே இருக்கும் படிப்பகம் பூட்டி இருந்தாலும் காவலாளியிடம் சாவி வாங்கி திறந்து கொசுக்கடிகளை புறக்கணித்து கண்ணீர் அஞ்சலி செய்தியிலிருந்து ஒரு வரி விடாமல் ஹிந்து பேப்பரை கடந்த ஐம்பது வருடங்களாக படிக்கும் முழங்கால் மூட்டு வலி முதியவர்.

வாக்கிங் முடித்த ஒரு சில முதியோர் அங்கிருந்த படிப்பகத்திற்குள் நுழைந்து, மாநில உரிமைகட்காக டெல்லி சென்று போராடாது உள்ளூர் கட்சி இளைஞர்களிடையே ஆக்ரோஷ முழக்கமிடும் அரசியல்வாதிகளின் பேச்சை தினசரிகளில் படித்து கொண்டிருந்தனர்.

அருகே மேற்கூரை வேயப்பட்ட மினி ஹாலில் தலைக்கு மேலே ஒடிந்து விழும் நிலையில் இருந்த ஒன்றிரண்டு மின்விசிறிகளை பொருட்படுத்தாது புழுதி படர்ந்த தரையை துண்டால் தட்டி துடைத்துவிட்டு யோகா செய்யும் முதியோர்;

ஹாலின் சுற்றுச்சுவரில் அந்த ‘பூங்கா’ என்றோ தொடங்கப்பட்டு யார் யாரெல்லாம் தொடக்க விழாவிற்கு வந்திருந்தனரோ அவர்களில் சிலர் இப்போது இரங்கல் செய்தியாக ஆகி விட்டாலும்,அங்கு இன்றும் அவர்கள் மங்கலான போட்டோக்களில் மகிழ்ச்சி பொங்க மங்களகரமாக சிரித்து கொண்டிருந்தனர்.

சுவரில் பதிக்கப்பட்ட சலவைக்கல் பலகைகளில் ரூபாய் ஐயாயிரம், பத்தாயிரம், பதினைந்தாயிரம் அன்பளிப்பாக கொடுத்தவர்கள் பெயர்கள் கல்வெட்டுக்களாக அட்ரஸுடன் அழகாக பொறிக்கப்பட்டிருந்தன.

அதில் பதினைந்தாயிரம் கொடுத்த மனிதர் இன்றளவும் வளர்ப்பு நாயுடன் கழுத்தில் மஞ்சள் துண்டுடன் நம் தேசத்தலைவர் சாயலில் உற்சாகமாக பூங்காவின் வெளிவட்டப்பாதையில் நடந்து கொண்டிருந்தார்.

2005ல் அவர் அளித்த இந்த நன்கொடைக்கு பதிலாக “இந்திரா விகாஸ் பத்திரம்” வாங்கியிருந்தார் என்றால் இன்று இரண்டு லட்சத்திற்கு மேல்! வாழ்க அவர் கொடையுள்ளம்!

விஜயன், ஒருமுறை, அவர் வருடாவருடம் விமரிசையாக நடத்தும் சுதந்திர தின விழாவில் ,சிற்றுண்டி அருந்திக் கொண்டு அவரது மீட்டிங் ஹாலில் இருந்த ‘சாணம் சாணமாகவே இருக்கட்டும்; நாம் சந்தனமாக மணப்போம்’ என்ற பொன்மொழியை ரசித்திருக்கிறான்.

மாலை வேளைகளில் பூங்காவில் இன்னும் புது புது மனிதர்கள், புது புது மனச்சுமைகளுடன். ஹோட்டல் தொடங்கி அகில உலகமும் கிளைகளை திறக்க வேண்டும் என்ற வணிக வெறியின் காரணமாக, நகரில் பெரிய ‘பவன்’களின் விலைவாசி விண்வெளிக்கு சென்று விட்டதால் பூங்கா வாசலில் அமோகமாக பேல்பூரி , பாணி பூரி விற்பனை செய்யும் இரண்டு “கையேந்தி பவன் “கள்.

தெருப்புழுதியையும் வாகன புகையையும் பொருட்படுத்தாது பாலித்தீன் மூட்டையிலிருந்து என்றோ செய்யப்பட்ட குட்டி குட்டி பூரிகளை, இன்று செய்யப்பட்ட மசாலா பாணியை கலந்து கொடுக்கப்பட்ட பானி பூரி உண்ணும் மத்தியதர வர்க்கம் !

விலைவாசி உயர்வால் தரம், சுகாதாரம் அப்படி இப்படி இருந்தாலும் அனுசரித்து சகித்துக்கொள்ளும் உரிமைத் தொகை மனிதர்கள்!

பூங்காவை சுற்றியுள்ள ‘பார்க் வியூ’ தெருவில் உள்ள பங்களா மனிதர்கள் அந்தக்காலத்தில் பூங்கா உருவாக்க அளித்த நன்கொடைகள் அந்த ஹாலில் சலவைக்கல் கல்வெட்டுக்களில் இடம் பெற்றிருந்ததை அவ்வப்போது படித்ததில் விஜயனுக்கு அவர்கள் பெயர் விலாசம் அப்படியே மனப்பாடம் ஆகிவிட்டது.

காலை நடைப்பயிற்சியில் இருந்தவர்களிடையே ஒரே கூச்சல், குழப்பம், பரபரப்பு. யாரோ முதியவர் திடீரென்று மயக்கம் போட்டு விழுந்து விட்டார்.

மாநகர வாழ்க்கையில் பெரும்பாலானோருக்கு தன் கூட தினமும் நடக்கும் சக மனிதர்களைப்பற்றி தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. எனவே மயங்கி விழுந்த முதியவரின் பெயர் விலாசம் தெரியாது அவர்கள் பரிதவித்தனர்.

முதியவரிடம் மொபைல் போன், பர்ஸ் என்று எதுவுமில்லை. இறந்தால் அடையாளம் தெரியாத சடலம்!

கூடியிருந்த கூட்டத்தை விலக்கி பார்த்த விஜயன், அவர் யாரென்று ஓரளவுக்கு அனுமானித்தான்.

உடனடியாக அருகிலுள்ள அவர் வீட்டிற்கு சென்று வீட்டுத் தலைவரின் பெயரை உத்தேசமாக சொல்லி உறுதிப்படுத்திக் கொண்டு, அவரது மனைவி, மகனிடம் அபாயச்செய்தியை அவுன்ஸ் அவுன்சாக அளவோடு பகிர்ந்து அவர்களை பூங்காவிற்கு அழைத்து வரும் போதே ஆம்புலன்சுக்கும் சொல்லி விட்டான்.

ஆம்புலன்ஸ் வந்து அவரை அள்ளிப்போட்டுக்கொண்டு அபாய சைரன் ஒலித்துக்கொண்டே சென்று அரைமணி கழித்து அவர் அபாய கட்டத்திலிருந்து மீட்கப்பட்டார்.

நாட்கள் வாரங்களாகி வாரங்கள் மாதமாகின.

ஒருநாள் வழக்கமான நடைபயிற்சியின்போது விஜயன் பெஞ்சில் அமர்ந்திருந்த அந்த முதியவரை பார்த்து “சௌக்கியமா!” என்று விசாரித்தான்.

மயங்கி விழுந்த தினத்தன்று விஜயன் அளித்த அவசர அவசிய உதவிக்கு அவர் மனமார்ந்த நன்றியை தெரிவித்துவிட்டு விஜயனிடம், “என் வீடு உங்களுக்கு எப்படி தெரிந்தது?” என்று வினவினார்.

“சார்! நீங்கள் ஒருநாள் உங்கள் வீட்டிலிருந்து நடைப்பயிற்சிக்கு கிளம்பும்போது, தொலை தூரத்திலிருந்து குத்து மதிப்பாக பார்த்திருக்கிறேன்! ஆனால் உங்கள் பெயர் விலாசம் எல்லாம் தெரியாது! “என்றான்.

“பின் எப்படி என் மனைவி மகனை அன்று அழைத்து வந்தாய்?” என்று அவர் வினவ, விஜயன் மௌனமாக அவர் கை பிடித்து அழைத்துக்கொண்டு பார்க்கின் ஹாலுக்குள் அழைத்து சென்று அங்கிருந்த 2005 ஆம் ஆண்டு வருட நன்கொடை சலவைக்கல் கல்வெட்டுகளை காட்டினான்.

அதில் ஒரு பெயர் ” சீதாராமன் ” 151, பார்க் தெரு Rs 10,000/- என்று இருந்தது !

ஜெ. ஜெயகுமார்
சென்னை
கைபேசி: 98842 51887

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.