எனையும் தீண்டுமோ தென்றல்? – காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்

குளித்துவிட்டு ஹாலுக்கு வந்து சுவர்க்கடிகாரத்தைப் பார்த்தாள் செல்வி. மணி எட்டு என்பதைக் காட்டியது கடிகாரம்.

“அட! மணி எட்டாயிட்டே சீக்கிரம் கெளம்பணும். கொஞ்சம் லேட்டானாலும் சிடுமூஞ்சி சூப்பர்வைசர் சிங்காரம் ‘காள்காள்’னு கத்தும்” என்று வாய்விட்டுப் புலம்பியவாறே தன்னை சுடிதாருக்குள் நுழைத்துக் கொண்டாள் செல்வி.

நீலநிற பாராசூட் பிளாஸ்டிக் குப்பியிலிருந்து தேங்காய் எண்ணையை இடது கையில் கொஞ்சமாய்ச் சாய்த்து விட்டு எண்ணைக் குப்பியை எடுத்த இடத்தில் வைத்து விட்டு இருகைகளாலும் எண்ணையைப் ‘பரபர’வென்று தேய்த்து தலையில் தடவிக் கொண்டாள்.

சுவற்றில் முன்புறம் சாய்ந்தாற்போல் மாட்டியிருந்த கொஞ்சம் பெரிய சைஸ் முகம் பார்க்கும் கண்ணாடியின் பின்புறம் சொருகி வைத்திருந்த சீப்பினை எடுத்து தலையருகே கொண்டு சென்றவள் கண்ணாடியில் தெரிந்த தன் முகத்தைப் பார்த்து விட்டு,

“ச்சீ, இது ஒரு மூஞ்சின்னு வெச்சு நம்மள படச்சாம் பாரு ஆண்டவன். நா என்னா பாவத்த செஞ்சனொ இப்பிடியோரு மூஞ்சி; இப்பிடியோரு ஒடம்பு.” என்று தன் உடம்பைத் தானே ஒருமுறை குனிந்து பார்த்துக் கொண்டாள்.

சராசரி உயரம். தாரை உருக்கித் தடவினாற் போல் கருத்த மேனி. கிள்ளியெடுக்க சதையில்லாத கச்சலான தேகம். லேசாய் கூன் விழுந்த முதுகு. தினமும் தன்னத் தானே கண்ணாடியில் பார்த்துப் பார்த்து வருந்தாத நாளே கிடையாது. இப்போதும் மனம் வலித்தது. இது தினமும் நடப்பதுதான்.

சரி உடல்தான் இப்படி. முகமாவது கொஞ்சம் அழகா வசீகரமா இருக்கக் கூடாதா? ஏற்கனவே தணலைத் தண்ணீர் ஊற்றி அணைத்த நிறம். இதில் வலது கண் புருவத்துக்குமேலே புருவத்தை ஒட்டினாற்போல் நெற்றியில் சின்ன சைஸ் கிளிஞ்சலைக் கவிழ்த்து வைத்தாற்போல் கருஞ்சிகப்பு கலரில் ஒரு மச்சம் வேறு. மேட்டு நெற்றி.

கன்னங்களில் டொக்கு விழுந்திருந்ததாலோ என்னவோ மேல்வரிசை முன்பற்கள் நான்கு வாய்க்குள் அடங்காமல் வெளியே தெரிந்தன. காதுகளும் லவுட் ஸ்பீக்கர் போல் தொன்னையாய். எப்படி அழுத்தி அழுத்தி வாரினாலும் படிய மறுத்து பும்மென்று புடைத்து நிற்கும் செம்பட்டை நிற முடி.

பார்ப்பவர்கள் ‘ப்ச்! என்னமோ இப்பிடி ஒரு படைப்பு’ என்று மனதிற்குள் நினைக்க வாய்ப்பு உண்டுதான்.

வெளித் தோற்றம்தான் இப்படி. ஆனால் செல்வி ரொம்ப நல்ல மனசுக்காரி. அதீதமாய் நல்லவள். படிக்க ஆசை இருந்தாலும் பள்ளியில் சக மாணவ மாணவிகள் செல்வியின் உருவத்தைப் பார்த்து வரை முறையின்றி செய்த கேலியும் கிண்டலும் அவளை எட்டாம் வகுப்போடு பள்ளி செல்வதைத் தடுத்துவிட்டது.

பதினைந்து வயதிலிருந்தே ஏதேதோ வேலை பார்த்துக் கடைசியாய் மசாலாக்களுக்குப் பெயர் பெற்ற மசாலா தயாரிப்புக் கம்பெனியான மூன்றெழுத்துக் கம்பெனியில் வேலையில் சேர்ந்து பத்து வருஷம் ஆகிவிட்டது. ஓரளவு நல்ல வருமானம் வரும்தான். சொந்த வீடு. அம்மா மட்டும்தான். ஒரே பெண். வயது முப்பதாகியும் கல்யாணம் கைகூடவே இல்லை. இவள் தோற்றமே இவளுக்கு எதிரியாய் இருந்தது.

ஆனாலும் தாய் கனகுவுக்கு முப்பது வயதாகியும் ‘தன் மகளுக்கு திருமணம் ஆகவில்லையே‘ என்ற தவிப்பும் கவலையும் ஏகத்துக்கும் இருந்தது. தன் மனக்குறையை அடிக்கடி கோவிலுக்குச் சென்று துர்கையம்மனிடம் சொல்லி அழுது விட்டு வருவாள்.

“அம்மா! கொஞ்சம் சீக்கிரமா போவணும்.” சமயலறையைப் பார்த்து குரல் கொடுத்தாள் செல்வி.

“தோ, ரெண்டே நிமிசம். சட்னிய அரைச்சுடறேன்” என்று சொல்லிக் கொண்டே, ஏற்கனவே தேங்காய்த் துருவல், பொட்டுக் கடலை, பச்சை மிளகாய், உப்பு போட்டு வைத்திருந்த மிக்ஸி ஜாரை மிக்ஸியில் பொருத்தி மின் இணைப்பு கொடுத்து மிக்ஸியின் பட்டனை அழுத்தினாள் கனகு.

மிக்ஸி சுற்றத் தொடங்கிய அடுத்த நொடி “க்ரீச்”சென்ற சப்தமும் அதைத் தொடர்ந்து படீரென்று சப்தமும் எழ மிக்ஸி சட்டென நின்று போனது.

“இது வேற சமயம் பாத்து கால வாருது. சனியம் புடிச்சது” வாய்விட்டுச் சொல்லிக் கொண்டே ஜாரைக் கழட்டி கீழே வைத்துவிட்டு ‘பட்பட்’டென்று மிக்ஸியின் முதுகில் ரெண்டு தட்டு தட்டியும் ஒயரை லேசாய்ப் பிடித்து இழுத்தும் பார்த்து இயக்கிப் பார்த்தாள்

ம்ஹும் மிக்ஸி அடம்பிடித்தபடி அமைதியாக இருந்தது. “மொதல்ல இத்த தொலச்சு தலமுழுவனும். எத்தின தடவ ரிப்பேர் பண்ணுறது. புதுசு வாங்கலாம்னா நாலாயிரத்துக்கு மேலன்னா ஆவுது” புலம்பினாள் கனகு.

“என்னாம்மா! மிக்ஸி போயிட்டா வுடு. பையில எடுத்துப் போட்டு வையி. சேகரண்ண கடயில போகக் கொள்ள குடுத்துட்டுப் போவுறேன். வேல முடிஞ்சி திரும்பக் கொள்ள வாங்கிக்கிட்டு வர்றேன்.”

தனக்குப் பிடிக்காத இட்லிப் பொடியை தொட்டுக் கொண்டு தோசையைத் தின்றுவிட்டு வேலைக்குக் கிளம்பினாள் செல்வி.

“சரிம்மா, போய்ட்டு வாரேன்” என்றபடி மறக்காமல் மிக்ஸியிருந்த பையை எடுத்துக் கொண்டு ரேழிக்கு வந்து செருப்பில் கால்களை நுழைத்தபோது “செல்வீ” என்று அழைத்த தாய் கனகுவை திரும்பி ‘என்ன?’ என்பதுபோல் பார்த்தாள்.

“அது, அது, அதுவந்து…” தாய் கனகுவின் தடுமாற்றம் வார்த்தையில் தெரிந்தது.

அம்மா இப்படித் தடுமாறினால் அவள் என்ன சொல்ல வருகிறாள் என்று செல்விக்குத் தெரியும் என்பதால் சற்றே கடுப்பானள் செல்வி.

“என்ன தரகு ராமையா நாளைக்கு பொண்ணு பாக்க யாரையாச்சும் அழைச்சிட்டு வரதா சொன்னாரா?அதுக்கு நா நாளைக்கு கம்பெனீல லீவு சொல்லிட்டு சாயந்திரம் திரும்பி வர்ரப்ப பால் பாக்கெட்டு காபிதூளு ஸ்வீட்டுன்னு வாங்கிட்டு வரனுமா? அதானே சொல்ல வர்ற?” குரலில் கோபம் கூடியது செல்விக்கு.

“எத்தின தடவ சொல்லிட்டேன் ஒங்கிட்ட. இனிமே என்னைய பொண்ணுபாக்கன்னு யாரையும் கூப்புடாத. காட்சிப் பொருளா யார் முன்னாடியும் இனிமே வந்து நிக்க மாட்டேன். வர்றவுங்க கிண்டலா பாக்குற
பார்வையும் கிசுகிசுன்னு பேசிக்கிற பேச்சும்.

ஏதோ தான் மன்மதன் போல அழகன்னு நெனச்சுகிட்டு, அந்த பொண்ணு பாக்க வர்ற பையனுங்க என்னய பாத்ததும் ஷாக்கானாப்புல மூஞ்சீல அதிர்ச்சி காட்டி, அதேசமயம் கேலிச் சிரிப்போட மயக்கம் வந்தவன் மாதிரி கீழே சாயுறதும், அவனுக நடிப்பப் பாத்து கூடவந்தவங்கள்லாம் ரசிச்சுச் சிரிப்பதும் போதும்மா! போதும் இந்த அவமானமும் கேவலமும்!.

ஒவ்வொருமுறையும் இதானே நடக்குது?. ஒனக்குத் தெரியாது? ரொம்ப அழகான பொண்ண பெத்து வச்சுருக்கியா? அதுக்கு கல்யாணம் கட்டிவச்சு கண்ணாற பாக்க ஆசைப்பட?

நால்லாம் இனிமே இந்த கேவலத்துக்கெல்லாம் ஒத்துக்க மாட்டேன். எனக்கு இனிமே கல்யாணம் ‘அதுஇது’ன்னு ஆசப்படாத. ஆமா சொல்லிட்டேன். ரொம்ப பண்ணின ரெயிலு முன்னாடி விழுந்து செத்துடுவேன்” தாய் கனகுவை எச்சரிப்பதுபோல் பேசிவிட்டு வாசல் நோக்கி நடந்தாள் செல்வி.

கண்களில் கண்ணீருடன் சிலையாகிப்போய் நின்றாள் கனகு.

‘அம்மாவை இவ்வளவு கோபமாய் திட்டியிருக்கக் கூடாதோ? பாவம் அம்மா! எல்லா தாய்க்கும் பெற்ற மகளை மாலையும் கழுத்துமாய் கல்யாண கோலத்தில் பார்க்க ஆசை இருக்கும்தானே? தான் பெற்ற பிள்ளை ஆணோ பெண்ணோ எதுவாக இருந்தாலும் அது அழகோ அசிங்கமோ எப்படியிருந்தாலும் காலாகாலத்தில் அந்த பிள்ளைக்கு நடக்க வேண்டியவை நடந்தால்தானே பெற்றவளுக்கு சந்தோஷம். ப்ச், என்ன பாவம் செஞ்சேனோ இப்பிடியொரு பிறப்பு நமக்கு.’ மனம் வலித்தது செல்விக்கு.

ஓட்டமும் நடையுமாக தொழிற்சாலை வாசலை அடைந்தாள் செல்வி.

இரண்டு கால்களும் முழங்கால் வரை சூம்பிப் போய் நடக்க இயலாத காரணத்தால், இரு கைகளையும் தரையில் ஊன்றி கால்களை இழுத்து இழுத்துத் தேய்த்தபடி தவழ்ந்தவாறு வேலைக்கு வரப் பத்து நிமிடம் லேட்டாகிப் போன பயத்தோடு மசாலா கம்பெனிக்குள் நுழைந்த முப்பத்திரண்டு வயது அழகுராஜை, சூப்பர்வைசர் சிங்காரத்தின் அதிகாரக் குரல் ஈவு இரக்கமின்றி கடுங்கோபத்தோடு வரவேற்றது.

“வாங்க .வாங்க அழகு ராஜரே, அட! என்னமா ராஜாதி ராஜா அழகு ராஜா ராஜ கம்பீர நடைபோட்டு வாராரு! என்ன ஒரு ராஜ நடை!” உடல் ஊனமுற்ற அழகுராஜாவை நடக்கும் திறனற்று தவழ்ந்து தவழ்ந்து வரும் அழகு ராஜாவை அவனின் குறைபாட்டை வைத்தே எள்ளி நகையாடி அவனின் பத்து நிமிட தாமதத்திற்கு மனதில் பச்சாதாபமின்றி கேவலப்படுத்திப் பேசினார் சூப்பர்வைசர் சிங்காரம்.

“சார், நேத்து நைட்டுலேந்து கடுமையா காய்ச்சல் அடிக்குது. எந்திரிக்கவே முடியல. அதான்” அழகுராஜா முடிப்பதற்குள் சீறிப் பாய்ந்தார் சிங்காரம்.

“ஓ! சாருக்குக் காய்ச்சலா? லேட்டா வரதுக்கு ஏதாவது காரணம் சொல்ல வேண்டியது. ஜொரம், பல்லுவலி, லூஸ்மோஷன்னு காய்ச்சலோட இங்க வந்து என்ன வேல பாத்து கிழிக்கப் போற? சும்மா ஒக்காந்திருக்க தண்ட சம்பளம் தரனுமா? வூட்லயே படுத்து கெடக்க வேண்டியதுதானே?” என்று ஏகத்துக்கும் பேசி கடைசியாய் “ஏன் உசிர எடுக்கிறீங்க” என்று அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த மற்ற மாற்றுத் திறனாளிகளையும் சேர்த்து அவமானப்படுத்தியபோது அனைவரின் கண்களும் குளமாகின.

ஆனாலும் யாராலும் அவரை எதிர்க்க முடியவில்லை. மேலிடத்து செல்வாக்கு மிக்க அவரை யாரும் எதுவும் கேட்டுவிட முடியாது. வேலைக்கே உலையாகிவிட்டால்?

பெரும்பாலும் மாற்றுத்திறனாளிகளே பணிக்கு அமர்த்தபட்டுள்ள அந்தக் கம்பெனியில் வேலை பார்க்கும் அனைவருமே ஏதோவொரு அங்க பாதிப்போடு இருந்ததால், ஒருவருக்கொருவர் ஆதரவாகவே இருந்தனர்.

முசுடு சிங்காரம் அங்கிருந்து வெளியேறியதும் அழகு ராஜாவை சூழ்ந்து கொண்டு அவனுக்கு ஆறுதல்கூற வயதில் மூத்த பெண்ணொருத்தி அவன் நெற்றியைத் தொட்டுப் பார்த்து, “அடியாத்தி ஒடம்பு நெருப்பால்ல கொதிக்குது. அழகு ஏதாச்சும் சாப்டியா? காச்சலுக்கு மாத்ர போட்டியா? என்று கேட்டாள்.

அதற்கு ‘இல்லை’ என்று சொல்வது போல் உதட்டைப் பிதுக்கி தலையை இப்படியும் அப்படியும் அசைத்தான் அழகுராஜா. அவனின் பளீரென்ற சிவந்த முகம் ஜுரவேகத்தால் மேலும் சிவந்து போயிருந்தது.உதடுகள் வறண்டு தெரிந்தன.

அழகுராஜா பெயருக்கு ஏற்றார்போல் மிக அழகுதான்.சிவந்த உடல். வசீகரமான முகம். திண்ணிய தோள்கள். ஃபிட்னஸ் சென்ட்டருக்குப் போகாமலேயே இயற்கையாய் அமைந்த சிக்ஸ்பேக். சுருள்சுருளாய் முடி. வரிசையாய் ஆரோக்கியமான பளீரென்ற பற்கள். நேர்த்தியாய் திருத்தப்பட்ட மீசை என வயசுப் பெண்களை ஒருமுறைக்கு இருமுறை பார்க்க வைக்கும் வசீகரன்தான். ஆனாலும் எந்த ஜென்மத்துப் பாவமோ முழங்காலுக்குக் கீழே கால்களைச் சூம்ப வைத்துப் பழி தீர்த்துக் கொண்டது.

தனது இடத்துக்குத் தவழ்ந்தபடி சென்று அமர்ந்து கொண்டான் அழகுராஜா. ஜுரமும் வெறும் வயிறும் அவனைச் சோர்வடையச் செய்திருந்ததால் வேலையைத் தொடங்க உடல் மறுத்தது. ஆனாலும் மசாலாவை பாக்கெட்டுகளில் நிரப்ப ஆயத்தமானான்.

சூடாய் ‘வெந்நீர்’ குடிக்க வேண்டும் போல் இருந்தது. வேலை செய்யுமிடத்தில் சாதா வாட்டர் மட்டுமே கிடைக்கும். சுடுநீரெல்லாம் கிடைக்காது. உதட்டை நாவால் ஈரப்படுத்திக் கொண்டான்.

இரு கைவிரல்களாலும் நெற்றியின் இரு புறமும் அழுத்தி விட்டு வலிக்கும் தலையை சமாதானாப்படுத்த முயன்றான். கடும் காய்ச்சலால் சூடு தாங்காமல் கண்களில் நீர் திரையிட்டது. அதனைத் துடைக்க மசாலா பட்டிருந்த கைகளைப் பயன்படுத்தத் தயங்கி இடதுதோளால் இடது கண்ணையும் வலதுதோளால் வலது கண்ணையும் துடைத்துக் கொண்டான்.

‘இன்னைக்கு வேலைக்கு வராம இருந்திருக்கலாமோ’ என்று தோன்றியது. வராட்டி இன்னைய சம்பளம் ‘கட்’ நாளைக்கு வந்தா யாரக் கேட்டு லீவு போட்டேன்னு சூப்பர்வைசர் கத்துற கத்தல தாங்க முடியாது.

‘ப்ச், என்னயப் போல பெத்தவங்க இல்லாத, கூடப்பொறந்தவங்க இல்லாத, கால் வெளங்காத அனாதைங்க பூமிக்கு பாரம். சோத்துக்குக் கேடு’ என நினைத்தவனின் கண்களில் கண்ணீர் திரண்டு கன்னங்களில் கோடாய் இறங்கியது.

இவனையே பாத்துக் கொண்டு தனக்குரிய பணியைப் செய்து கொண்டிருந்தாள் செல்வி.

பணிக்குப் பழக்கப்பட்ட கைகள் இவளின் உத்தரவின்றித் தாமாகவே தமது கடமையைச் செய்து கொண்டிருந்தன. அழகுராஜாவின் உடல் மொழியை வைத்து அவன் நினைப்பதை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது.

தினமும்தான் அவனைப் பார்க்கிறாள். ஆனால் அவளுள் எந்த பாதிப்பும் ஏற்பட்டதில்லை. இன்று என்னவோ தெரியவில்லை அவனிடம் சென்று நாலுவார்த்தை ஆறுதலாய்ப் பேச வேண்டும் போல் இருந்தது.

மதியம் சாப்பாட்டுக்கான இடைவேளை.

வழக்கமாய்க் கொண்டு வரும் வெந்நீர் ஃப்ளாஸ்க்கையும் இட்லியிருந்த டிபன்பாக்ஸையும் எடுத்துக் கொண்டு வெளியே வந்தவளின் பார்வை சுவற்றோரம் சுருண்டு படுத்திருந்த அழகு ராஜாவைத் தொட்டதும் கால்கள் தாமாகவே அவனை நோக்கிச் சென்றன.

கண்கள் மூடிப்படுத்திருந்த அவனைப் பார்த்ததும் நெஞ்சுக்குள் ஒரு வேதனை. ‘பாவம் இவுரு’ என்ற பச்சாதாபம்.

‘என்ன செல்வி திடீரென இவர் மீது இத்தனை கரிசனம்?’ மனசு கேட்டது.

மனசு கேட்ட கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் திணறினாள் செல்வி. ஆனாலும் ‘எல்லாம் ஒரு மனிதாபமானம்தான் மனசுக்கு பதில் சொல்ல நினைத்தாள்.

‘ஹுக்கும்’ என்றது மனசு கேலியாய். ‘ஏன் இத்தினிபேரு இருக்கையில நீ மட்டும் ஓடி வர’குடைந்து குடைந்து கேள்வி கேட்டது பொல்லாத போக்கிரி மனது.’

ச்சீபோ’ பொல்லாத மனதை செல்லமாய் விரட்டினாள் செல்வி.

மெல்லத் திறந்தது மனக்கதவு.

அழகின் அருகில்போய் குனிந்து “அழகு அழகு” என்று மெல்ல அழைத்தாள்.

“ம்..ம்..” என்றபடி கண்களைத் திறந்த அழகுராஜா தன்னை அழைத்தபடி குனிந்து நிற்கும் இவளைப் பார்த்து கொஞ்சம் அதிர்ச்சியும் கூச்சமுமாய் எழுந்திருக்க முயன்றான்.

முயன்று எழுந்தமர்ந்த அவனிடம், “அழகு இந்த இட்லிய சாப்ட்டு சுடுதண்ணிய குடிங்க. தோ, கால்பல் மாத்ர இருக்கு போட்டுக்குங்க. காய்ச்சல் விட்ரும்.”

தானாக வந்து செல்வி செய்யும் உதவி அழகைத் திகப்படையச் செய்தது. செய்வதறியாது திணறிப் போனான்.

“எ..எ..எதுக்குங்க? வே..வே..வேணாங்க”

“ஏன் அழகு? நான் குடுத்தா வாங்கமாட்டீங்களா?”

“அது.. அது.. அதில்ல…”

“அப்புறம்” சொல்லிக் கொண்டே டிபன் பாக்ஸைத் திறந்து அவனிடம் நகர்த்தினாள். டம்ளரில் வெந்நீரை ஊற்றிப் பக்கத்தில் வைத்தாள்.

“ம்… சாப்டுங்க” என்றாள்.

‘மகுடிக்கு ஆடும் நாகம்’ போல் செல்வியின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டான் அழகு. முதன்முதலாய் அவன் வாழ்க்கையில் அனுபவிக்கும் பரிவு, பாசம், அன்பு மூன்றும் செல்வியின் வார்த்தை அவனுக்கு உணர்த்தியது. இதுவரை அனுபவித்திராத உணர்வு.

நடுங்கும் கையால் ஒரு இட்லியைப் பிட்டு வாயில் போட்டவனுக்கு புரையேறியது.

“வெந்நீர குடிங்க” என்று சொல்லியபடி வலது கையால் அவனிடம் டம்ளரை நீட்டி இடது கையால் அவன் உச்சந்தலையில் தட்டினாள் செல்வி.

அழகை அறியாமலேயே அவன் வாய் தாங்க முடியாத இன்ப அதிர்ச்சியை ‘ஹக்’ என்ற வார்த்தை மூலம் வெளிப்படுத்தியது.சுத்தமாய் காய்ச்சல் விட்டுப் போனது போல் தோன்றியது.

“செல்வீ” கண்களில் கண்ணீரோடு செல்வியைப் பார்த்து “நீங்க..நீங்க..” என்றான் அழகு.

அவன் கண்களில் பார்ப்பவர்களாலெல்லாம் ‘இப்படியுமொரு ஆண்டவன் படைப்பு’ என்று எண்ணி ஒதுக்கப்பட்ட, பரிகசிக்கப்பட்ட செல்வி பேரழகியாகத் தெரிந்தாள்.

கலங்கிய அழகுராஜனின் கண்களைப் பார்த்தாள் செல்வி. அதில் கண்ணீரோடு சேர்ந்து காதலும் தெரிந்தது.

பூவாய் மலரவேண்டிய மொக்கு மலராய் மலர்வதற்கு சிலநிமிடங்கள் ஆகலாம். ஆனால் காதல் மலர்வதற்கு கணநேரம்கூட தேவையில்லையோ?

‘காதல்’ அது மதம் பார்த்து, இனம் பார்த்து, மொழிபார்த்து, பணம் பார்த்து, அழகு பார்த்து வருவதில்லை. அப்படி வந்தால் அதன்பேர் காதல் இல்லை.
அன்பு கொண்ட மனம் மட்டுமே அதற்குப் போதும்.

திடீரென வானத்தில் கருமேகம் சூழ ‘ஜில்’லென்று தென்றல் காற்று வீசி செல்வியையும் அழகு ராஜையும் தீண்டித் தழுவிச் சென்றது.

தென்றலுக்கு அழகு அழகற்றவர், ஊனமுற்றவர், ஊனமில்லாதவர் என்று எந்த பேதமும் இல்லை.

காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்
காஞ்சிபுரம்
கைபேசி: 9629313255

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.