ஆழிமழைக் கண்ணா ஒன்று நீ கைகரவேல் என்ற பாடல் அரங்கனிடம் மாறாத பக்தி கொண்ட ஆண்டாள் அருளிய திருப்பாவையின் நான்காவது பாசுரம் ஆகும்.
மழையானது எப்படி பொழிகிறது என்பதை எடுத்துரைக்கும் பாடல் இது. மழை பெய்யும் நிகழ்வுகளை இறைவனோடு ஒப்பிட்டுக் கூறும் ஒப்பற்ற பாசுரம்.
1200 ஆண்டுகளுக்கு முந்திய, இந்த ஆன்மிகப் பாடலில் இருக்கும் அறிவியலையும் நாம் வியக்கலாம்.
திருப்பாவை பாடல் 4
ஆழிமழைக் கண்ணா ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்து கொடு ஆர்ந்தேறி
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்துப்
பாழியந் தோளுடைய பற்பநாபன் கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றுஅதிர்ந்து
தாழாதே சாரங்கம் தொடுத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய், நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தாலோர் எம்பாவாய்
விளக்கம்
பெரும் மழை பொழியக் காரணமான தலைவனே, நீ உன் கையில் மழையை கொஞ்சமும் ஒளித்து வைத்துக் கொள்ளாமல் முழுஅளவிற்கு பொழிய வேண்டும்.
கடலில் உள்ள நீரினை எடுத்துக் கொண்டு ஆவியாகி மேலே சென்று உலகாளும் முதல்வனான கண்ணனின் உடல் நிறத்தினை போல் கருமேகங்களாக திரள்வாயாக.
பரந்த அழகிய தோள்களை உடையவனும், கொப்பூழில் தோன்றிய தாமரை மலரில் பிரம்மனைத் தாங்குபவனும் ஆகிய திருமாலின் வலக்கையில் உள்ள சக்கரத்தைப் போல் ஒளியுடன் மின்னுவாயாக.
இடக்கையில் உள்ள பாஞ்சஜன்யம் என்னும் வலம்புரிச் சங்கு எழுப்பும் ஒலியைப் போல் இடி முழக்கம் செய்வாயாக.
திருமாலின் கரத்தில் இருக்கும், வெற்றியை மட்டும் வழங்கும் சார்ங்கம் என்னும் வில்லிருந்து புறப்படும் அம்புகள் போல் மழையை சரம் சரமாகப் பொழிவாயாக.
அம்மழையால் இவ்வுலகில் மகிழ்ந்து வாழ்வோம். மார்கழியில் நீராட ஏதுவாக நீர்நிலைகள் எல்லாவற்றையும் நிரப்பி எங்களை மகிழ்விப்பாயாக.
ஆண்டாள் மார்கழி நோன்பு நோற்கும் காலத்தை முதல் பாசுரத்தில் பாடி, நோன்பினை நோற்கும் முறையினை இரண்டாம் பாசுரத்தில் கூறியுள்ளார்.
நோன்பின் பயனாக மழை பொழியும் என்பதை மூன்றாம் பாசுரத்தில் கூறிய ஆண்டாள், அந்த மழை எப்படி மழை பொழிய வேண்டும் என்பதை இப்பாசுரத்தில் கூறியுள்ளார்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!