ஆழ்வார்கள் பற்றி அறிந்து கொள்வோம்

ஆழ்வார்கள் தம்முடைய தமிழ் பாசுரங்களால் வைணவ சமயக் கடவுளான திருமாலைப் போற்றி பாடி மகிழ்ந்தவர்கள். திருமாலின் அடியவர்களான ஆழ்வார்கள் திருமாலின் பெருமையும், தமிழின் சிறப்பினையும் உலகுக்கு உணர்த்தியவர்கள்.

வடமொழியில் உள்ள வேதங்களுக்கு இணையாக இவர்களின் பாசுரங்கள் போற்றப்படுகின்றன. ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு நாலாயிர திவ்ய பிரபந்தம் என்று அழைக்கப்படுகிறது.

ஆழ்வார்களின் காலம் ஆறாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரை என்று கருதப்படுகிறது.

ஆழ்வார்கள் மொத்தம் பன்னிரெண்டு பேர் ஆவார்.

1. பொய்கையாழ்வார்

2. பூதத்தாழ்வார்

3. பேயாழ்வார்

4. திருமழிசை ஆழ்வார்

5. நம்மாழ்வார்

6. திருமங்கை ஆழ்வார்

7. குலசேகர ஆழ்வார்

8. பெரியாழ்வார்

9. ஆண்டாள் நாச்சியார்

10. தொண்டரடிப் பொடியாழ்வார்

11. மதுரகவி ஆழ்வார்

12. திருப்பாணாழ்வார்

இவர்களில் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூவரும் முதல் ஆழ்வார்கள் என்று குறிப்பிடப்படுகின்றனர்.

இவர்கள் காலத்தால் மற்றைய ஆழ்வார்களுக்கு முந்தியோர் ஆதலால் முதல் ஆழ்வார்கள் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்கள் மூவரும் சமகாலத்தினர் ஆவர்.

முதல் ஆழ்வார்கள் மூவரும் தாயின் வயிற்றில் பிறக்காமல் தானே தோன்றி இறைவனால் ஒரே நேரத்தில் ஆட்கொள்ளப்பட்டவர்கள் என்ற சிறப்பினை உடையவர்கள.

மதுரகவி ஆழ்வார் மட்டும் இறைவனைப் பாடாமல் மற்றொரு ஆழ்வாரான‌ நம்மாழ்வாரைப் பற்றிய பாசுரங்கள் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

 

பொய்கையாழ்வார்

பொய்கையாழ்வார்
பொய்கையாழ்வார்

இவரே பன்னிரு ஆழ்வார்களில் முதல் ஆழ்வார் என்ற சிறப்பினைப் பெறுகின்றார். இவர் காஞ்சிபுரத்தில் திருவெஃகா என்னுமிடத்தில் உள்ள பொய்கையில் தோன்றியவர். பொய்கையில் தோன்றியதால் பொய்கையாழ்வார் என்று அழைக்கப்படுகிறார்.

இவரே திருமாலின் பத்து அவதாரங்களையும் முதலில் சிறப்பித்துப் பாடியவர் ஆவார். இவர் திருமாலின் கையிலுள்ள பாஞ்சஜன்யம் என்னும் சங்கின் அம்சமாகத் தோன்றியவர் என்று கருதப்படுகிறார்.

இவர் கவிஞர் தலைவன் என்று வைணவர்களால் சிறப்பிக்கப்படுகிறார். இவரால் அந்தாதியாகப் பாடப்பட்ட நூறு பாடல்களும் முதல் திருவந்தாதி எனப் போற்றப்படுகிறது.

ஒரு சமயம் பொய்கையாழ்வார் மழையின் காரணமாக திருக்கோவிலூர் மிருகண்டு முனிவரது ஆசிரமத்துக்கு சென்றார். அங்கு பூதத்தாழ்வாரும் பேயாழ்வாரும் வந்தனர். இவர்கள் மூவரும் நெருக்கியடித்து நிற்க அங்கு திருமால் மூவருக்கும் காட்சியளித்தார்.

பொய்கையாழ்வார் 108 திவ்ய தேசங்களில் மொத்தம் 6 கோயில்களைப் பற்றி பிற ஆழ்வார்களுடன் இணைந்து மங்களாசனம் செய்துள்ளார்.

(மங்களாசனம் என்பது ஒரு கோவிலில் உள்ள இறைவனைப் போற்றிப் பாடல்கள் இயற்றுவது ஆகும்.)

இவர் கிரக முனி, மகாதேவயார், தமிழ் தலைவன் ஆகிய வேறு பெயர்களால் சிறப்பிக்கப்படுகிறார்.

 

பூதத்தாழ்வார்

பூதத்தாழ்வார்
பூதத்தாழ்வார்

முதல் ஆழ்வார்களில் இவர் இரண்டாமவர். இவர் மாமல்லபுரத்தில் உள்ள தலசயனப் பெருமாள் கோவிலில் மல்லிகை புதர்களுக்கிடையே நீலோத்பவ மலரின் நடுவில் தோன்றியவர் என்று கருதப்படுகிறது. இவர் திருமாலின் கையில் உள்ள கௌமோதகி என்ற கதையின் அம்சமாவார்.

உலக வாழ்க்கையில் இன்புறாமல் திருமாலிடத்தில் நீங்கா பக்தி கொண்டவர். திருக்கோவிலூர் மிருகண்டு முனிவர் ஆசிரமத்தில் பொய்கையாழ்வார் மற்றும் பேயாழ்வாருடன் இறைவனைத் தரிசித்த போது அவரைப் பற்றி நூறு பாடல்கள் பாடினார். அவை இரண்டாம் திருவந்தாதி எனப் போற்றப்படுகின்றன.

இவர் பிற ஆழ்வார்களுடன் சேர்ந்து 14 கோயில்களை மங்களாசனம் செய்துள்ளார்.

 

பேயாழ்வார்

பேயாழ்வார்
பேயாழ்வார்

இவர் முதல் ஆழ்வார்களில் மூன்றாமவர் ஆவார். இவர் மயிலாப்பூரில் ஆதிகேசவ பெருமாள் கோவில் குளத்தில் செவ்வல்லி மலரில் தோன்றியவர் என்று கருதப்படுகிறது. இவர் திருமாலின் நந்தகம் என்னும் வாளின் அம்சமாகத் தோன்றியவர்.

இவர் திருமாலின் திருப்புகழை பாமாலையாக்கி தினமும் போற்றுவார். அப்போது அவர் கண்களில் ஆனந்த வெள்ளம் வழிந்தோடும். பாடல்கள் பாடும்போது ஆடிப் பாடி அழுது தொழுவார்.

இறைபக்தியினால் இவர் பித்தர் போலும் பேயர் போலும் திரிந்ததினால் பேயாழ்வார் என்றழைக்கப்பட்டார். திருக்கோவிலூர் மிருண்டு முனிவர் ஆசிரமத்தில் பொய்கையாழ்வார் மற்றும் பூதத்தாழ்வாருடன் இருந்த போது இவரே முதலில் இறைதரிசனம் கிடைக்கப் பெற்றார்.

இவர் தனியாக ஒரு கோவிலிலும், மற்ற ஆழ்வார்களுடன் இணைந்து 11 கோவில்களிலும் மங்களாசனம் செய்துள்ளார்.

 

திருமழிசை ஆழ்வார்

திருமழிசை ஆழ்வார்
திருமழிசை ஆழ்வார்

இவர் திருமழிசை என்னும் இடத்தில் பார்கவ முனிவர் கனகாங்கி ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். பின் திருவாளன் என்பவரால் வளர்க்கப்பட்டார். இவர் திருமாலின் ஆழியான சக்கரத்தின் அம்சமாவார்.

கனிக்கண்ணன் என்பவரை சீடராக்கக் கொண்டு பல இடங்களுக்கு சென்று இறைவனை வழிபட்டுள்ளார். வயது முதிந்த பெண்ணிற்கு இளமையை திருப்பி அளித்த பெருமை இவரைச் சாரும்.

சைவம், சமணம், புத்தம் என பல மதங்களை ஆராய்ந்து சைவராக இருந்த‌   இவரை பேயாழ்வார் வைணவ மதத்திற்கு மாற்றினார். இவர் பக்திசாரர், திருமழிசையார், திருமழிசைப்பிரான் என்றெல்லாம் அழைக்கப்படுகிறார்.

இவர் நான்முகன் திருவந்தாதி என்ற நூறு பாடல்களையும், திருசந்த விருத்தம் என்ற 120 விருத்தங்களைக் கொண்ட பாடல்களையும் பாடியுள்ளார். இவர் தனியாகச் சென்று இரண்டு கோவில்களையும், மற்ற ஆழ்வார்களுடன் இணைந்து 11 கோவில்களையும் மங்களாசனம் செய்துள்ளார்.

 

நம்மாழ்வார்

நம்மாழ்வார்
நம்மாழ்வார்

வைணத்தில் ஆழ்வார் என்றாலே அது நம்மாழ்வாரையே குறிக்கும். இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள‌ திருக்குருகூர் எனப்படும் ஆழ்வார்திருநகரியில் காரியார், உடைய நங்கை ஆகியோருக்கு மகனாகத் தோன்றினார்.

இவர் பிறந்தவுடன் அழாமல் தன் ஞானத்தால் சடம் என்னும் காற்றை வென்றதால் சடகோபன் என்றழைக்கப்பட்டார்.

பதினாறு ஆண்டுகள் திருக்குருகூர் நம்பி கோவிலின் புளியமரப்பொந்தில் யோகத்தில் இருந்து மதுரகவி ஆழ்வாரின் கேள்விக்கு பதில் தந்து அவரை சீடராகப் பெற்ற பெருமை இவரைச் சாரும்.

இவர் இயற்றிய திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, பெரியதிருவாய்மொழி ஆகிய பாடல்கள் ரிக், யசூர், சாம, அதர்வண வேதங்களுக்கு இணையானவை ஆகும் என்பது பெரியோர்களின் வாக்கு.

இவர் திருமாலின் படைத்தலைவரான விஷ்வக்னேசர் என்பவரின் அவதாரமாகக் கருதப்படுகிறார். இவர் சடாரி, பராங்குசன்,மாறன், வகுளாபரணன், குருகையர் ஆகிய பெயர்களால் சிறப்பிக்கப்படுகிறார்.

வைணவத்தில் நம்மாழ்வாரை ஆன்மாவாகவும், ஏனைய ஆழ்வார்களை உடலாகவும் கருதுவதுண்டு. இவர் 37 திருக்கோவில்களை மங்களாசனம் செய்துள்ளார்.

 

திருமங்கையாழ்வார்

திருமங்கையாழ்வார்
திருமங்கையாழ்வார்

இவர் சோழ நாட்டில் உள்ள திருக்குரையலூர் என்னும் ஊரில் ஆலி, வல்லிதிரு ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவர் திருமாலின் கையிலுள்ள சார்ங்கம் என்ற வில்லின் அம்சமாக்க கருதப்படுகிறார்.

இவருக்கு பெற்றோர் இட்டபெயர் நீலன் என்பதாகும். இளமையிலே வீரத்திலும், பக்தியிலும் சிறந்து விளங்கினார். இவருடைய வீரத்தைப் பார்த்த சோழ அரசன் படைதலைவராக இருந்த நீலனை திருமங்கை என்னும் நாட்டிற்கு சிற்றசரானக்கினான்.

தன் மனைவியின் விருப்பப்படி தினமும் அடியார்களுக்கு திருவமுது படைத்தும், இறைவழிபாட்டில் ஈடுபட்டும் செல்வங்களை இழந்தார். பின் பணக்காரர்களிடம் கொள்ளையடித்து அடியார்களுக்கு திருவமுது படைத்து வந்த நிலையில் திருமால் திருமகளோடு திருமணக் கோலத்தில் திருமங்கையாழ்வாருக்கு காட்சியருளினார்.

இவர் பெரியதிருமொழி, குருந்தாண்டகம், நெடுந்தாண்டகம், திருவெழுக்கூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல் ஆகிய படைப்புகளை படைத்துள்ளார்.

இவர் 46 கோவில்களைத் தனியாகவும், பிற ஆழ்வார்களுடன் சேர்ந்து 36 கோவில்களையும் மொத்தம் 82 கோவில்களை மங்களாசனனம் செய்துள்ளார். இவரே ஆழ்வார்களுள் அதிகக் கோவில்களை மங்களாசனம் செய்தவர் என்ற சிறப்பினைப் பெறுகிறார்.

 

குலசேகர ஆழ்வார்

குலசேகர ஆழ்வார்
குலசேகர ஆழ்வார்

இவர் திருவஞ்சிக்களம் என்னும் ஊரில் திடவிரதன் என்ற சேர நாட்டு அரசனுக்கு திருமாலின் மார்பில் இருக்கும் மணியான கௌஸ்துப அம்சத்தின் வடிவாக தோன்றினார்.

இவர் போர்க்கலைகளில் சிறந்து விளங்கிய இவர் வடமொழியிலும் தேர்ச்சி பெற்றவர். நீதிநெறி தவறாமல் ஆட்சி புரிந்த இவரை இவ்வுலக மாயை நீக்கி இறை தொண்டு செய்யுமாறு திருமால் பணித்தார்.

இவர் திருமால் மீது பாடிய பாசுரங்கள் பெருமாள் திருமொழி என்றழைக்கப்படுகிறது. இவர் கொல்லிக்காவலன், கூடல்நாயகன், வில்லவர் கோன் ஆகிய பெயர்களால் சிறப்பிக்கப்படுகிறார்.

இவர் தனியாக ஒரு கோவிலையும், பிற ஆழ்வார்களுடன் சேர்ந்து ஏழு கோவில்களையும் மங்களாசனம் செய்துள்ளார்.

 

பெரியாழ்வார்

பெரியாழ்வார்
பெரியாழ்வார்

இவர் திருவில்லிபுத்தூரில் முகுந்தர், பதுமவல்லி ஆகியோருக்கு திருமாலின் வாகனமான கருடாழ்வாரின் அம்சமாகத் தோன்றினார். இவரின் இயற்பெயர் விஷ்ணுசித்தர்.

திருவில்லிபுத்தூரில் உள்ள வடபத்ரசாயி பெருமாளின் மீதிருந்த அளவற்ற பக்தியின் காரணமாக தினமும் அவருக்கு பூமாலை தொடுத்து கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

இவர் திருமாலின் கருணையால் வல்லபதேவன் என்ற பாண்டிய அரசனின் அவையில் வாதாடி அரசனின் சந்தேகத்தை போக்கி பொற்கிழி பெற்று யானையில் ஏற்றி ஊர்வலம் செய்து சிறப்பிக்கப்பட்டார்.

அப்போது திருமால் திருமகளுடன் கருட வாகனத்தில் காட்சியருளினார். அதனைக் கண்ட விஷ்ணுசித்தர் திருமாலின் அழகில் சொக்கி, திருமாலுக்கு கண்திருஷ்டி பட்டுவிடும் எனக்கருதி பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு எனத் தொடங்கும் திருப்பல்லாண்டு பாடினார்.

இறைவனுக்கே கண்ஏற்றினை கழிக்க முயன்றதால் ஆழ்வார்களில் பெரியவர் என்னும் பொருள்படும்படி பெரியாழ்வார் என்றழைக்கப்பட்டார். இவரே ஆண்டாள் நாச்சியாரின் வளர்ப்பு தந்தை ஆவார்.ஆண்டாளை அரங்கனுக்கு மணம்முடித்துக் கொடுத்ததினால் திருமாலின் மாமனார் என்ற சிறப்பினைப் பெற்றார்.

திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி போன்றவை இவரின் படைப்புகளாகும். இவர் தனியாக 2 கோவில்களையும், பிற ஆழ்வார்களுடன் சேர்ந்து 17 கோவில்களையும் சேர்த்து மொத்தம் 19 திவ்ய தேசக் கோவில்களை மங்களாசனம் செய்துள்ளார்.

 

ஆண்டாள் நாச்சியார்

ஆண்டாள் நாச்சியார்
ஆண்டாள் நாச்சியார்

இவர் திருவில்லிபுத்தூரில் உள்ள வடபத்ர சாயி கோவிலின் வளாகத்தில் பெரியாழ்வாரால் துளசி செடி அருகில் கண்டெடுக்கப்பட்டார்.

பன்னிரண்டு ஆழ்வார்களில் பெண் ஆழ்வார் இவர் ஒருவரே ஆவார்.

இவர் திருமாலின் மனைவியான திருமகளின் அம்சமாகத் தோன்றியவர். சிறுவயது முதலே திருமாலின் மீது அதீத பக்தி கொண்டார். நாளடைவில் அந்த பக்தியே திருமாலின் மீது காதலாக மாறி திருமாலை மட்டுமே திருமணம் செய்வேன் என்ற மன உறுதியைக் கொடுத்தது.

மானிடர்கள் இறைவன்பால் மாசற்ற அன்பினைச் செலுத்தி மனஉறுதியுடன் வழிபட்டால் இறைவனை அடைய முடியும் என்ற உண்மையை தனது வாழ்க்கையின் மூலம் உலகுக்கு உணர்த்தியவர்.

சூடிக்கொடுத்த சுடர் கொடியாள், கோதை நாச்சியார், கோதை பிராட்டி என்றெல்லாம் இவ்வம்மை சிறப்பிக்கப்படுகிறார்.

இவர் இயற்றிய பாடல்கள் நாச்சியார் திருமொழி, திருப்பாவை என்று வழங்கப்படுகின்றன. இவர் பிற ஆழ்வார்களுடன் இணைந்து மொத்தம் 10 கோவில்களை மங்களாசனம் செய்துள்ளார்.

 

தொண்டரடிப் பொடியாழ்வார்

தொண்டரடிப் பொடியாழ்வார்
தொண்டரடிப் பொடியாழ்வார்

இவர் திருமாலின் தொண்டர்களின் காலடி மண்ணைத் தன் தலைமேல் வைத்துக் கொண்டதால் தொண்டரடிப் பொடியாழ்வார் என்றழைக்கப்பட்டார்.

இவர் சோழ நாட்டில் திருமண்டக்குடி என்னும் ஊரில் வேத விசாரதர் என்பவருக்கு திருமாலின் வைஜெயந்தி வனமாலையின் அம்சமாகத் தோன்றினார். இவரின் இயற்பெயர் விப்பிர நாராணயர் என்பதாகும்.

இவர் திருமாலின் மீதுள்ள அளவற்ற பக்தியால் தன்னை அடிமையாக பாவித்துக் கொண்டு பூமாலைகளுடன் பாமாலைகள் பாடி வழிபடுவதை வழக்கமாகக் கொண்டார்.

இவர் தேவதேவி என்ற பெண்ணின் மேல் காதல் கொண்டு தன் செல்வத்தை இழந்த நிலையில் இவருக்காக திருவரங்கத்தில் வீற்றிருக்கும் இறைவன் அரங்கன் கோவில் வட்டிலைத் தந்து உதவ இவர் மேல் திருட்டுப்பழி விழுந்தது. இறுதியில் உண்மை அரங்கனால் உலக்கு உணர்த்தப்பட்டபோது இவர் அரங்கனுக்காக அடிமை பூண்டார்.

இவர் திருபள்ளிஎழுச்சி மற்றும் திருமாலை ஆகியவற்றை படைத்துள்ளார். இவர் பிற ஆழ்வார்களுடன் இணைந்து 2 கோவில்களை மங்களாசனம் செய்துள்ளார்.

 

மதுரகவி ஆழ்வார்

மதுரகவி ஆழ்வார்
மதுரகவி ஆழ்வார்

இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் திருக்கோளுர் என்ற இடத்தில் பிறந்தார். இவர் சிறுவயதிலேயே செந்தமிழில் நாவிற்கினிய பாடல்களைப் பாடிய காரணத்தால் மதுரகவி ஆழ்வார் என்றழைக்கப்பட்டார்.

இவர் வடநாட்டில் உள்ள திருமால் சேத்திரங்களை தரிசித்துக் கொண்டிருக்கும்போது தென் திசையில் ஒரு ஒளி ஏற்படுவதைக் கண்டு அத்திசை நோக்கி செல்கையில் அங்கு நம்மாழ்வாரைக் கண்டார்.

அவரிடம் கேள்வி வினவ அதுவரை பேசாதிருந்த நம்மாழ்வார் மதுரகவி ஆழ்வாருக்கு பதிலுரை கூறினார். அதனைக் கேட்ட மாத்திரத்தில் நம்மாழ்வாரைக் குருவாக ஏற்றார். அவரிடமிருந்து சூட்சமங்களைக் கற்று உணர்ந்தார்.

இவர் கண்ணிநுன் சிறுதாம்பு என்ற பதிகத்தை மட்டும் தன் குருவாகிய நம்மாழ்வார் மீது பாடியுள்ளார். இவர் இளங்கவியார், ஆழ்வாருக்கு அடியான் என்ற பெயர்களால் சிறப்பிக்கப்படுகிறார்.

 

திருப்பாணாழ்வார்

திருப்பாணாழ்வார்
திருப்பாணாழ்வார்

இவர் திருச்சி உறையூரில் திருமாலின் மார்பில் உள்ள மருவான ஸ்ரீவத்ஸத்தின் அம்சமாக பாணர் குலத்தில் தோன்றியவர். தீண்டத்தகாதோர் குலத்தில் தோன்றியதால் காவிரியாற்றின் கரையில் நின்று அரங்கனைப் பாடுவார்.

ஒரு சமயம் சாரங்கர் என்பவர் அரங்கனுக்கு காவிரியில் இருந்து தண்ணீர் கொண்டு செல்லும்போது வழியில் நின்ற திருப்பாணாழ்வாரை கல்லால் தாக்கினார். இதனால் ஆழ்வாரின் நெற்றியில் இரத்தம் வழிந்தது.

இதனை அறியாது கருவறைக்கு சென்று சாரங்கர் பார்த்தபோது அரங்கனின் நெற்றியில் இரத்தம் வழிந்தது கண்டு திகைக்க திருப்பாணாழ்வார் தனது பக்தன் எனவும், அடியவருக்கு ஏற்படும் துன்பம் தனக்கு ஏற்பட்டது எனக்கூறி திருப்பாணாழ்வாரை தோளில் சுமந்து கோவிலுக்குள் அழைத்து வர கட்டளையிட்டார் திருமால்.

திருமாலின் விருப்பப்படி உள்ளே வந்த திருப்பாணாழ்வார் திருமாலின் உச்சி முதல் பாதம் வரை உள்ள அங்கங்களைப் பற்றி பாடி பூத உடலோடு இறைவனோடு இரண்டறக் கலந்தார்.

இறைவன் முன் அனைவரும் சமம் என்ற உண்மையை இவரின் வாழ்க்கை மூலம் அறியலாம். இவர் பாணர், முனிவாகனர், யோகிவாகனர் போன்ற பெயர்களால் சிறப்பிக்கப்படுகிறார்.

இவர் பிற ஆழ்வார்களுடன் இணைந்து 3 கோவில்களை மங்களாசனம் செய்துள்ளார்.

திருமாலின் சிறப்பினை உலக்குணர்த்திய ஆழ்வார்களைப் போற்றுவோம்.

வ.முனீஸ்வரன்

 

திருப்பாவை என்னும் பாவை பாட்டு

திருப்பாவை பாசுரங்களின் அமைப்பு

திருமணப்பேற்றினை அருளும் வாரணம் ஆயிரம் பதிகம்

2 Replies to “ஆழ்வார்கள் பற்றி அறிந்து கொள்வோம்”

  1. அருந்தமிழில் வேதம் அளித்து அற்புதம் செய்த ஆழ்வார்களைப் பற்றி திருவுருவப் படங்களுடன் அருமையாக விவரித்தமைக்கு மிக்க நன்றி!

    -அடியேன் ஆழ்வார்கள் தாசன்
    இமயவரம்பன்

  2. Very nice description on Azhvargal. Thank you so much. In depth descriptions on them with more details on their historical evidencescan be added for future generation. This can be brought in as a printed book in Tamil can be great asset to the readers, Thank you for your efforts.

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.