காராம் பசுவும் கமலா மாமியும்

காலை மணி பதினொன்று.

சமையலறையிலிருந்து ப்ளாஸ்டிக் பக்கெட்டை எடுத்துக்கொண்டு வெளியே வந்த கமலா மாமி வாசல் கதவைத்திறக்க தாழ்ப்பாளைத் தொட்டபோது, டிவியில் ந்யூஸ் சேனல் பார்த்துக் கொண்டிருந்த ராமசுப்பு டிவியிலிருந்து கண்களை நகர்த்தி கழுத்தைத் திருப்பி, “கமலா எங்க போற?” என்று கேட்டார்.

“க்கும்.. இதோரு கேள்வி. மாடீல மொளகா வத்தல், மல்லி ஒணத்தப் போறேன். காலம்பற எட்டு மணிக்கே ஒணத்திட்டு வந்துருக்கணும். இன்னிக்கு வெள்ளிக் கெழமயோனோ சாமிண்டயே நேரம் சரியாப் போய்டுத்து.

ஒரோரு ஸோஸ்த்ரமா சொல்லிண்டே போறதுல நேரம் ஓடியேன்னா போய்டறது. ஸோஸ்த்ரம் சொல்லி முடிச்சு நேவேத்தியம் பண்ணி முடிக்கறதுக்குள்ள மணி பதினொன்னாய்டுத்து. எத்தன மணி ஆனாலும் நாந்தானே கொண்டுபோய் ஒணத்தனும்.

வலிச்சாலும் அழுதாலும் புள்ளைய அவதானே பெறனும். போறேன் போய் ஒணத்திட்டு வரேன். அதுக்குதா வாளியும் கையுமா போறேன். வீடு வீடா போய் வாளிவாளியா வம்பு பேசவா போறேன். கேக்றத பாரு.”

“ரொம்ப வெய்யிலாருக்கு. மொட்ட மாடி சுடும். செருப்ப போட்டுண்டு போ”

“அய்யோ! அப்படியே கரிசனம் பொங்கித்தான் வழியறது. இந்த வாளிலதான் ஏந்தனும்.” கணவரை நோக்கி வாளியை நீட்டி தோளில் முகவாயை இடித்து பழிப்பு காட்டிவிட்டு வாசல் கதவின் அருகில் சென்றபோது,

“கமலா வெகண்ட பண்ணாத! சொன்ன பேச்ச கேளு. செருப்ப போட்டுண்டு போ.
அலுப்பு பட்டீன்னா அப்றம் மொட்ட மாடீல கால் வெக்க முடியாது. திரும்ப கீழ வந்து செருப்ப போட்டுண்டு மறுபடியும் ஏறி மறுபடியும் இறங்கி..”

“சரி.. சரி.. சரி..தோ போட்டுண்டேன் போதுமா?” என்று கேட்டபடி செருப்பு வைக்கும் இடத்திலிருந்த தனது செருப்புகளில் கால்களை நுழைத்தபோது, வாசல் மெயின் கேட் யாரோ பிடித்து ஆட்டுவதுபோல் சப்தமிட்டது.

செருப்பை மாட்டிக்கொண்டு மாடியேற முதல் படியில் கால் வைத்த கமலா மாமிக்கு ஆடும் கேட்டின் சப்தம் கேட்டது.

மேற்கொண்டு மாடி ஏறுவதைcநிறுத்திவிட்டு கொஞ்சமாய் நடந்து வந்து மெயின்கேட்டை எட்டிப் பார்த்தார்.

கேட்டின் வெளியே புதிதாய்க் கருப்பு பெயின்ட் அடித்தாற் போன்ற மேனியுடன் பளபளப்பும் மினுமினுப்புமாய் நின்றிருந்தது பசுமாடு ஒன்று.

முழு உடலும் மொத்தமாய்க் கருப்பாய் இருந்தது. காது மடல்களின் உட்புறமும் வாலும்கூட கருப்பாய் இருந்தன. மடியும் காம்புகளும் கருப்பே. கழுத்திலிருந்து வளைவு வளைவாய்த் தொங்கும் சதைகூட ஒரு வெள்ளைநிறப் புள்ளிகூட இல்லாமல் கருப்பாகவே இருந்தது.

குளம்பு வட்டவடிவமாக இருந்தது. மாட்டைப் பார்த்ததுமே மாமிக்கு அது ‘காராம் பசு’ என்று புரிந்து போனது.

மாமிக்கும் கேட்டுக்கு வெளியே நின்ற பசுவுக்கும் இடையே பத்தடியே இடைவெளி இருந்ததால் மாமியைப் பசு உற்றுப் பார்த்தது.

தன்னை மாடு உற்றுப் பார்ப்பது மாமிக்குப் புரிந்தது. மாமியும் பசுவின் கண்களை உற்றுப் பார்த்தார்.

சட்டென பசு தன் நாக்கை வெளியே நீட்டி உள்ளே இழுத்துக்கொண்டு தலையை
அப்படியும் இப்படியும் ஆட்டியது. கழுத்தில் தொங்கிய பித்தளை மணி ‘கலகல’வென ஓசை எழுப்பியது.

“ஆஹா! ஆஹா! பசு மாட்டோட நாக்குகூடன்னா கருப்பா இருக்கு. இந்த பசு மாடு அக்மார்க் காராம் பசுன்னா! ரொம்ப ஒசத்தி; ரொம்ப விசேஷம்.

காராம் பசு ஒஸ்தியான மாடுன்னா, சிவனுக்கு காராம் பசு மாட்டு பால அபிஷேகம் பண்றது ரொம்ப விசேஷம்னுனா சொல்லுவா. காராம் பசுமாட்டுப்பாலால அபிஷேகம் பண்ணினா மகாதேவன் மகிழ்ந்துபோய் கேட்ட வரத்த அள்ளின்னா தருவானாம்.

சாதாரண பசு மாட்டோட பாலவிட, காராம் பசுவோட பால்ல சத்து அதிகமாமே சொல்லுவால்ல. அப்பேர்பட்ட சிறப்பு வாய்ந்த காராம் பசு நம்மாத்து வாசல்ல வந்துன்னா நிக்கறது” பசுவைப் பார்த்து தன்னிலை மறந்து நின்ற மாமியை, “அம்மா!” என்று சப்தமிட்ட காராம் பசுவின் அழைப்பு சுயநிலைக்குக் கொண்டு வந்தது.

சட்டெனக் கையிலிருந்த ப்ளாஸ்டிக் வாளியைக் கீழே வைத்துவிட்டு இருகைகளாலும் பசுவைப் பார்த்துக் கன்னத்தில் போட்டுக் கொண்டார்.

“அம்பிகே! பராசக்தி! மகாலெஷ்மி தாயே! அஷ்ட லெஷ்மி1தாயே!” என்றபடி கையெடுத்துக் கும்பிட்டார்.

ஏனோ தெரியவில்லை கண்களில் கண்ணீர் திரண்டது மாமிக்கு. இனம் புரியாத பரவசத்தால் நிரம்பியது மனது.

மீண்டும் “அம்மா!” என்று அழைத்தது பசு. நாக்கை வெளியே நீட்டி தலையை ஆட்டியது.

“ஓ! ஒனக்கு சாப்ட ஒன்னுமே குடுக்காம ஒன்னையே பாத்துண்டு நிக்கறேம் பாரு!
வெள்ளிக் கெழமையும் அதுவுமா வாசல்ல வந்து நின்னு ‘அம்மா’ன்னு கூப்டற ஒன்ன வெறும நிக்க வெச்சுட்டேம் பாரு” என்றபடி ‘குடுகுடு’வென வேகமாக வீட்டுக்குள் சென்றார்.

மாமி சமையலறைக்குள் நுழைந்து சுவாமிக்கு நேவேத்தியம் பண்ணி வைத்திருந்த இரண்டு வாழப்பழங்களை எடுத்துக் கொண்டு ‘எங்கே பசுமாடு இங்க ஒன்னும் கெடைக்காதுன்னு நெனச்சிண்டு, போய்டப் போறுது’ என்று நினைப்பது போல் வேகமாக வாசலுக்கு வந்தார்.

மாமி வாழப்பழத்தை எடுத்துக் கொண்டு வேக வேகமாக வாசலுக்குச் செல்வதைப் பார்த்த ராமசுப்பு, “டீ கமலா! மெள்ளப் போமாட்டியா? எதுலயாவது முட்டிக்கப் போற. வாசல்ல யாரு வந்ருக்கா?” என்று கேட்டார்.

“கொஞ்ச நாழி சும்மா இருங்கோ! எல்லாத்தையும் இவரண்ட சொல்லனும்” என்று நின்று பதில் சொல்லாமல் சொல்லிக் கொண்டே வாசலுக்குப் போன மாமியை ராமசுப்பு பின் தொடர்ந்தார்.

ஆடாமல் அசையாமல் மாமியின் வருகைக்காகக் காத்திருப்பது போல் காதை விரைப்பாய் வைத்துக் கொண்டு நின்றிருந்தது காராம் பசு.

மாமியின் கையில் இருந்த வாழைப்பழம் அதன் கண்களில் பட்டதும் நாக்கை வெளியே நீட்டிச் சுழற்றியது. உடம்பை ஆட்டியது. ‘உஸ் உஸ்’ஸென்று மூச்சு விட்டது.

“ஓ பசுமாடா! காராம் பசு,அதான் வாழப்பழம் குடுக்க ஓடி வந்தியா? எந்தப் பசுன்னாலும் விசேஷம்தான். அதும் காராம்பசு ரொம்ப விசேஷந்தான்.

ஆனாலும் கமலா, கேட்டத் தொறந்துண்டு போய் குடுக்காத. இந்தப் பக்கத்துலேந்தே குடு. முட்ரமாடா சாதுமாடான்னு நமக்குத் தெரியாதோன்னோ! முட்டி கிட்டிடப் போறுது” என்றார் மாமியின் பின்னாலேயே வந்த ராமசுப்பு.

‘அதுவும் சரிதான்’ என்று தோன்றியது மாமிக்கு. கேட்டின் கம்பிகளுக்கிடையே இடையே இருக்கும் இடைவெளி வழியாகக் கைவிட்டு பழங்களை மாட்டிடம் நீட்டினார் மாமி.

வெகு ஆவலோடும் ஆசையோடும் அவசரத்தோடும் ‘புஸ்புஸ்’ஸென்று மூச்சுவிட்டபடி மாமியின் கையிலிருந்து கிட்டத்தட்டப் பிடுங்குவதைப் போல் பழத்தை இழுத்தது மாடு.

மாட்டின் எச்சிலும் நாக்கின் சொரசொரப்பும் மாமியின் கைகளில் பட்டது.

“கோமாதா! குலமாதா! காமதேனு அம்மா! சுரபியம்மா! நந்தினியம்மா! பட்டியம்மா!” என்று வரிசையாய் காமதேனு, காமதேனுவின் பெண், பேத்தி, கொள்ளுப்பேத்தி என்று எல்லாப் பெயர்களையும் சொல்லிவிட்டு பூச்செடிகளுக்குத் தண்ணீர் ஊற்ற ஹோஸ் செருகப்பட்டு சுவற்றில் இருந்த ப்ளாஸ்டிக் குழாயில் மாடு நக்கிய கையை அலம்பிக் கொண்டார் மாமி.

“கமலா மாட்டோட பொண்ணு பேத்தின்னு பேரல்லாம் சொன்னியே நந்தின்னு அதும் புள்ளபேரச் சொல்லாம விட்டுட்டியே!” கிண்டலடித்தார் ராமசுப்பு.

“போங்கோன்னா! ஒங்குளுக்கு எதாவது சொல்லிண்டே இருக்கனும்” பசுவைப் பார்த்துக் கன்னத்தில் போட்டுக்கொண்டு விட்டு உள்ளே போனார் மாமி.

“ம்.. இன்னிக்கு கனாடாலேந்து ஒம்புள்ளயும் பெங்ளூர்லேந்து பொண்ணும் ஃபோன் பண்ணுவா காராம் பசு வந்த கதைய ரீல்ரீலா அளந்து விடுவ”

கணவர் சொல்வதில் உண்மை இருப்பதால் எதிர் பதில் சொல்லாமல் சிரித்தார் மாமி.

இரவு எட்டே கால். அடுப்பைப் பற்ற வைத்து தோசைக் கல்லை வைத்தபோது மாமியின் செல் ஃபோன் ரீங்காரமிட்டது.

மேஜை மீதிருந்த செல்போனை எட்டிப் பார்த்தார் கனகசுப்பு. மகன், மாட்டுப்பெண், பேரன் மூவரடங்கிய ஃபோட்டோவுடன் ஒளிர்ந்தது ஃபோன்.

“கமலா ஒம் புள்ள வா வா” சும்மாவே ரெண்டுமணி நேரம் பேசுவேள். அம்மாவும் புள்ளையும். இன்னிக்குக் காராம் பசு கதவேற இருக்கு. ராத்திரி தோச பத்து மணிக்கோ பதினோரு மணிக்கோ! யாருகண்டா? சரி சரி அடுப்ப அணச்சுட்டு வா”

அவர் சொல்லி முடிப்பதற்குள் அடுப்பை அணைத்துவிட்டு கிச்சனிலிருந்து வெளியே வந்து பிள்ளையின் அழைப்பை ஏற்றார் மாமி.

வழக்கமான குசல விசாரிப்பு முடிந்து மேட்டருக்கு வந்தார் மாமி.

“ஏய் மாலிக் கண்ணா! (மகாலிங்கம்) ஒன்னு சொல்லாம மறந்துட்டேனே” குரலில் சந்தோஷம் எம்பிக் குதித்தது.

“அம்மா என்னம்மா மறந்துட்ட! சொல்லும்மா” அம்மாவின் சந்தோஷக் குரல். விஷயம் பெரிசோ சிரிசோ அம்மா சந்தோஷமாய் இருந்தால், அதுவே அவனுக்கும் சந்தோஷம், நிம்மதி.

அம்மாவிடம் அதிகமான பாசம் அவனுக்கு. சில சமயம் அம்மா எதற்காவது வருத்தப்பட்டாலோ, மூக்கை உறிஞ்சினாலோ தாங்க முடியாது.

“அம்மா ஏம்மா வருத்தப்படற! ஒம்புள்ள நா இருக்கறத்தே நீ கவலையே படக்கூடாதும்மா. மேட்டர் இவ்ள தானே நாம் பாத்துக்றேன் விடும்மா” என்று சமாதானம் செய்வான்.

அம்மா சந்தோஷமாய்ப் பேசினால் அவனுக்கு ஏற்படும் சந்தோஷத்துக்கு அளவே இல்லாமல் போகும். இப்போதும் அப்படித்தான் அம்மாவின் குரலில் சந்தோஷம் தெரிந்ததும் அவன் குரலிலும் அது ஒட்டிக் கொண்டது.

“அம்மா! என்னம்மா நடந்துது? சொல்லும்மா சொல்லும்மா” என்றான் ஆவலோடு.

“இன்னிக்கு காலம்பர பதினோரு மணியிருக்கும். நா மொட்ட மாடிக்கு மொளகா வத்தல் ஒணத்தலாம்னு நெனஞ்சிண்டு மாடிப்படீல கால வெச்சேண்டா மாலி! அப்ப..” என ஆரம்பித்து காராம் பசு வருகையை எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்ஸ்ஸோடு
சொல்ல,

“அம்மா! என்னம்மா சொல்ற? அப்டியாம்மா! பாரேம்மா, அந்த காராம் பசு நம்மாத்து வாசலுக்கு மட்டும்தான் வந்துதா? என்ன அதிசயம்மா! இதுல ஏதோ இருக்கும்மா..”

புள்ளையும் அம்மாவும் கரைபுரண்டு ஓடும் சந்தோஷத்தோடு மாற்றி மாற்றிப் பேசிக் கொண்டிருக்க மணி பத்தே காலைத் தொட்டுக் கொண்டிருந்தது.

உட்கார்ந்திருந்த நாற்காலியிலேயே தூங்கி வழிந்து சாமியாடிக் கொண்டிருந்தார் ராமசுப்பு.

மறுநாள் காலை ஏழு மணிக்கே பெங்களுரிலிருக்கும் மகளுக்கு தானே வலிய ஃபோன் செய்து காராம் பசு கதையை விலாவரியாய்ச் சொல்ல,

மகள் என்ன வேலை அரிபரியில் இருந்தாளோ, ‘அப்டியா சரி சரி மாடு முட்டித் தொலச்சுடப் போறுது, கிட்டக்க போய் அதோட பின் பக்கத்தத் தொட்டு மகாலெஷ்மி தாயேன்னு சொல்லிண்டு கண்ணுல ஒத்திக்கிறேம் பேர் வழின்னு தொட்டு வெக்காத. பின்னங் காலால எட்டி ஒதச்சி முட்டித் தள்ளிடப் போறுது பாத்துக்கோ. நா சாயந்ரம் பேசறேன்னு சொல்லி ஃபோனை வெச்சுவிட மாமிக்கு மூஞ்சி விழுந்து போனது.

மனைவியின் முகத்தைப் பார்த்தே பொண்ணு அம்மாக்காரிட்ட என்ன சொல்லிருப்பான்னு ராமசுப்புக்குத் புரிந்து போனது.

லேசாகச் சிரித்தார். அந்த சிரிப்பில் கிண்டலும் கலந்திருந்தது.

“என்ன சிரிப்பு வேண்டிக் கெடக்கு. அப்பாவும் பொண்ணும் கொணத்துல ஒன்னு. எம் புள்ள என்னாட்டம் தங்கம்”

“கெக்.. கெக்.. கெக்..”கே என்று சிரித்தார் ராமசுப்பு.

ஒருவழியாய் சமைத்து முடித்துவிட்டுப் புடவைத் தலைப்பால் முகத்தை மாமி துடைத்துக் கொண்டே ஹாலில் சுவரில் மாட்டியிருந்த கடிகாரத்தைப் பார்த்தபோது மணி பதினொன்று என்று காட்டியது கடிகாரம்.

‘பதினொன்னு ஆயாச்சா, ரைஸ்மில் தொறந்திருப்பான். போய் சாம்பார் பொடிய அரச்சுண்டு, கோலமாவுக்கு ரேஷன் அரிசில ஒருகிலோ எடுத்துண்டுபோய் அரச்சிண்டு வரணும்.

அப்டியே ஒத்தகடேல வெல்லமும் த்ரீரோஸஸ் டீத்தூளும் வாங்கிண்டு காய்கறி ரெண்டு நாளைக்கு வராப்ல வாங்கிண்டு வரணும். இப்பவே வெய்யில் அனலடிக்கிறது. எப்பிடித்தான் அவ்வளவு தூரம் போய்ட்டு வரப் போறேனோ’ என்று நினைத்தவாறு தலைவாரிக் கொள்ள சீப்பை எடுத்து தலை முடிச்சை அவிழ்த்தபோது, “அம்மா” என்று அழைக்கும் மாட்டின் குரல்.

“என்னது, மாடு கத்ராப்ல இருக்கு. அவிழ்த்த தலை முடிச்சை (முடியை )மீண்டும் சுருட்டிக் கட்டிக் கொண்டு வாசலுக்கு ஓடினார் மாமி.

காராம் பசு, உள்பக்கமாய்ப் பார்த்தபடி கேட்டுக்கு வெளியே நின்றிருந்தது. மாமியைப் பார்த்ததும் தலையை ஆட்டியது. “ஹும்!” என்று அடித் தொண்டையிலிருந்து குரல் எழுப்பியது. “அம்மா!” என்று மீண்டும் அழைத்தது.

‘இதென்னடியிது, டாண்ணு பதினோரு மணிக்கு வந்து நிக்கறது. நேத்திக்கு வந்த அதே நேரம். என்னத் குடுக்கறது தெரீலியே! வாழப்பழம்கூட இல்லியே?’ யோசனை செய்து கொண்டே உள்ளே வந்தவர் சட்டென ‘சாதம் வடிச்ச கஞ்சி இருக்கே, அதன்னா குடுக்கலா?’மென நினைத்தவராய் வாயகன்ற பாத்திரத்தில் கஞ்சியை ஊற்றினார்.

‘ரெண்டு பேருக்கு ஒருடம்ளர் அரிசி சாதம் வடிக்கிறோம். அதுக்கு எவ்வளவு கஞ்சி வரும்? இத்துனூண்டுனா இருக்கு இதெப்டி மாட்டு வெக்கறது? ப்ச்! போறாதே’ என்று நினைத்தவராய் சாதத்தில் ஒருகரண்டி சாம்பாரில் ஒருகரண்டி பொரியலில் கொஞ்சமென்று கஞ்சியில் போட்டார்.

மாடு மறுபடியும் குரல் கொடுத்தது.

“தோ வரேன்!” மாட்டுக்குப் பதில் கொடுப்பதுபோல் சத்தமாய்ச் சொல்லிக்கொண்டே வாசலுக்கு விரைந்தார் மாமி.

‘பாத்தரத்த எப்பிடி மாட்டுக்கிட்ட வெக்கறது? கேட்டைத் தொறந்துண்டு மாட்டுண்ட போக பயமான்னா இருக்கு. இவரும் பொண்ணும் மாட்டுண்ட போகாத முட்டிகிட்டி வெச்சுடப் போறுதுன்னு பயம்னா மூட்றா’ தயங்கி நின்றார் மாமி.

மாமியின் கையிலிருந்த பாத்திரத்தைப் பார்த்து விட்ட மாடு நிச்சயம் அதில் தனக்கு ஏதாவது தின்னக் கிடைக்குமென்று நினைத்ததோ என்னவோ பரவாய்ப் பரந்தது மாற்றி மாற்றி கால்களை வைத்து உடலை ஆட்டியது. நாக்கை வெளியே நீட்டிநீட்டி கழுத்தை ஆட்டிஆட்டி முகத்தை கேட்டின் கம்பிகளுக்கு
இடையே இருந்த இடைவெளியில் நுழைக்கப் பார்த்தது. ‘புஸ்புஸ்’ஸென்று மூச்சுவிட்டது. பொறுமையின்றித் தவித்தது.

காராம்பசுவின் அவசரம் மாமிக்குப் புரிந்தது.

“பாரேன்! இப்ப பாத்து இவர் புள்ளையார் கோவிலுக்குப் போய்ட்டு வரேன்னு போயிருக்கார். இப்ப என்னத்த செய்யறது? பகவானே! காமாக்ஷி!” என்றவர் கொஞ்சமாய்த் தைரியத்தை வளர்த்துக் கொண்டு லேசானத் துணிச்சலோடு ‘துளியூண்டு கேட்டத் தொறந்து கையமட்டும் வெளியே நீட்டி பாத்தரத்த வெச்சுடுவோம்’னு நினைத்தவராய் பாத்திரம் கொள்ளும் அளவுக்குக் கேட்டைத் திறந்து கைகளைமட்டும் வெளியே நீட்டிக் குனிந்து பாத்திரத்தைத் தரையில் வைக்க முயல, மாமி பாத்திரத்திலிருந்து கைகளை எடுப்பற்குள் பசுமாடு அவசர அவசரமாய் வாயைப் பாத்திரத்திற்குள் வைத்தது உறிஞ்ச ஆரம்பித்தது.

அடுத்தநாளும் அதற்கு அடுத்தநாளும் என்று மிகச்சரியாய் பதினோரு மணிக்கு காராம் பசு வருவதும் அதன் வருகைக்காக மாமி காத்திருப்பதும் தொடராகிப் போனது.

எது சமைத்தாலும் என்ன பட்சணம் செய்தாலும் காராம்பசுவுக்கு ஒருபங்கு எடுத்து வைக்கபட்டது. நாள்கிழமை விசேஷ நாட்களில் காராம் பசுவுக்கும் விருந்து வைக்கப்பட்டது.

மாமி “கோமாதா! காயத்ரி!” என்று கோமாதா ஸோஸ்த்திரம் கத்துக்கொண்டு அதுவந்து வாசலில் வாளியில் வைக்கும் சாப்பாட்டை (புதுப்ளாஸ்டிக் வாளி) சாப்பிடும்போது சொல்ல ஆரம்பித்தார்.

கிட்டத்தட்ட நாலு மாதமாக டானென்று காலை பதினோரு மணிக்கு மாடு வருவதும் மாமி சாப்பாடு தருவதும் வழக்கமாகிப் போனது.

அடிக்கடி டூர் போகும் மாமி, இப்போதெல்லாம் எங்கும் போவதில்லை.

ஆனமட்டும் பெங்களுருக்கு வரும்படி பெண் அழைத்தும் மாமி “திவ்யா! இருக்கட்டும்டி. நா அங்க வந்தேன்னு வெச்சுக்கோ நம்ம காராம் பசு லெட்சுமி இருக்காள்ல அவ வந்து பாத்துட்டு நா இல்லேன்னா ஏமாந்து போய்டுவா, பாவம்ல! அவ. அதுனால நீன்னா இங்க வந்து இரேன்” என்ற மாமியிடம்

“அம்மா, இது ரொம்ப டூமச்மா! காராம் பசு காராம் பசுன்னு பைத்தியம் புடிச்சு அலையாத! அது அஞ்சறிவு பிராணி, நீ தினம் எதாவது சாப்ட குடுக்கறதால வருது. நாலுநாள் எதுவும் குடுக்காம கம்முனு இரு. கத்திப் பாத்துட்டு போய்டும். அப்றம் வராது”

“போடீ! நீ அத மாடா பாக்கற. நா அம்பாளா பாக்கறேன். பசுவோட ஒடம்பு முழுதும் முப்பத்து முக்கோடி தேவர்களும் எல்லா தெய்வங்களும் நவக்கிரகங்களும் பஞ்ச பூதங்களும் புண்ய நதிகளும் இருக்கா தெரியுமா? நாம பசுவுக்குக் குடுக்குற புடி அன்னம் அத்தன தெய்வங்களுக்கும் நேவேத்யம் பண்ணினாப்ல. அமாவாசயன்னிக்கு பிடி அகத்திக்கீரை குடுத்தா பித்ருக்களுக்கு உணவு குடுக்கறாப்ல. ஒனக்கென்ன தெரியும்?”

“அட போம்மா! எனக்கும் தெய்வ பக்தி இருக்கு. நானும் பசுவ மதிக்கிறேன். அதுக்காக பைத்தியம் புடிச்சி அலைய முடியாது. எப்டியோ போ, அப்பா எப்டிதான் ஒன்ன பொறுத்துக்கறாளோ. பாவம் அப்பா” என்று சொல்லிவிட்டுச் சிரித்தாள்.

தினம் தினம் மாமியாத்துக்கு சரியாய்ப் பதினோரு மணிக்கு பசுமாடு வருவதும் ‘அம்மா!’ என்று கத்தி மாமியை அழைப்பதும் மாமி தருவதை சாப்பிட்டுவிட்டுப் போவதும் தெருவிலிருக்கும் மற்ற வீட்டுக்காரர்களுக்குப் பேசும் பொருளானது.

“மாமி அதென்ன அந்த காராம் பசு ஒக்காத்துக்கு மட்டும் வருது. அம்மான்னு கத்தி ஒங்களக் கூப்டறது. நீங்க தர்ரத சாப்டுட்டு தேமேன்னு போயிடறது. வேற யார் வீட்டுக்கும் வரதில்ல.

அதுவும் அது ஒங்காத்து வாசலுக்கு வந்து குரல் குடுக்கும்போது கடிகாரமே பாக்க வேண்டாம். மணி பதினொன்னுன்னு சொல்லிடலாம். எந்த ஜென்மத்து பந்தமோ! இல்லாட்டி கோமாதா ஒங்களத் தேடி தினமும் வருவாளா?

மாமி எல்லா தெய்வங்களோட ஆசிர்வாதமும் ஒங்குளுக்கு இருக்கு மாமி. இல்லாட்ட இப்பிடி தேடி வரமாட்டா அம்பாள்” என்று சிலர் மாமியிடம் நேரில் சொல்லும்போது மாமிக்கு மூக்கு விடைக்கும்.

நெஞ்சில் சந்தோஷமும் பெருமையும் நிரம்பி நெஞ்சு விரியும். மூச்சு வேகமாக வெளி வரும்.

“அம்பிகே! பராசக்தி!” என்பார் கைகளைக் கூப்பி.

வெகு சில நாட்கள் காராம்பசு வராமல் இருப்பதுண்டு. அந்த நாட்களிலெல்லாம் மாமி ஏமாற்றத்தால் புலம்பித் தள்ளி விடுவார்.

“ஏண்டி கமலா! இப்டியா பொலம்புவ. மாடுகளுக்கும் வயத்தால போகும் ஜுரம் வரும் இல்லாட்டி சினைப்பட ஊசி போடுவா. அப்பெல்லாம் மாட்டுக்காரா மாட்டக் கட்டிப் போட்ருப்பா. ஏன் அது கன்னுகுட போடுமோனோ? அது எப்டி வரும் சொல்லு. ரொம்ப அலட்டிண்டு பொலம் பாத” என்பார் ராமசுப்பு.

தீடீரென வந்து நின்று “அம்மா!” என்று ஓங்காரமாய் குரல் கொடுக்கும்.

“ஏண்டி லெஷ்மி! ரெண்னாளா ஒன்னக் காணும்? என்னாச்சு ஒனக்கு?” கேட்டுக் கொண்டே வாசலுக்கு ஓட்டமும் நடையுமாய் ஓடுவார் மாமி.

மனிதர்களை விசாரிப்பது போல் பசுவிடம் கேள்வி மேல் கேள்வியாய்க் கேட்பார். அது தேமேனென்று மாமியின் முகத்தையும் கையையும் மாறி மாறிப் பார்த்தபடி நிற்கும். இதுபோல் சிலசமயம் நடப்பது உண்டு.

ரெண்டு நாளாய் காராம் பசு வரவில்லை. மாமிக்கும் கொஞ்சம் உடம்புக்கு முடியவில்லை. திடீர் திடீரென மூச்சு தங்கித் தங்கி வந்தது. மூச்சுவிட சிரமமாய் இருந்தது.

“பதினஞ்சுகிலோ அரிசி பக்கெட்டத் தூக்கி நகர்த்தி வெச்சோமோனோ! வெயிட்டோனோ அதான் மூச்சுப் பிடிச்சுண்டு வலிக்கிறது. வயசாகலியா? சரியாயிடும்” சமாதானம் செய்து கொண்டார்.

காலை மணி எட்டு. ஹாலில் இருந்த டேபிள் அருகே இடது கையில் முகம் பார்க்கும் கண்ணாடியும் வலது கையில் ரேஸருமாய் ஷேவிங் செய்து கொண்டு நின்றிருந்தார் ராமசுப்பு.

நாற்காலியொன்றில் அமர்ந்திருந்தார் மாமி. ஷேவிங் முடித்து முகத்தைத் துண்டால் துடைத்துக் கொண்ட ராமசுப்பு, “டீ கமலா! நன்னா ஷேவிங் செஞ்ருக்கேனா பாரு. அங்க இங்கன்னு முடியிருக்கா? சுத்தமா செஞ்சுருக்கேனா! பாத்து சொல்லு” என்றபடி மாமியின் அருகில் சென்றார்.

குனிந்தபடி நாற்காலியில் அமர்ந்திருந்த மாமியை கமலா, “காலம்பறயே தூக்கமா? அப்பிடி என்ன காலம்பற எட்டு மணிக்கு தூக்கம்? நன்னாருக்கு போ! ஷேவிங் நன்னா செஞ்சிண்ருக்கேனா பாருன்னேனே காதுல விழல” என்று கேட்டபடியே மாமியின் தோளைத் தொட, அப்படியே சாய்ந்துவிட்டார் மாமி.

“கமலா!” ராமசுப்புவின் அலறல் அந்த பிரதேசத்தையே அதிர வைத்தது.

பிள்ளையும் பெண்ணும் குடும்பத்தோடு வந்தாயிற்று. உறவுகளும் அக்கம் பக்கமும் அறிந்தவர்களும் தெரிந்தவர்களுமாய் கூட்டம் குழுமி நின்றது மாமியைச் சுற்றி.

இன்னும் சற்று நேரத்தில் மாமி கிளம்பி விடுவார் தன் கடைசி யாத்திரைக்கு. மஞ்சளும் குங்குமமும் மிளிர, கழுத்து நிறைய பூமாலைகளோடு மிகுந்த பொலிவோடு கால் நீட்டிக் கண் மூடிப் படுத்திருந்தார் மாமி.

மணி பதினொன்னு.

“காரியம் ஆரம்பிச்சுடலாமா? வர வேண்டியவாள்ளாம் வந்தாச்சா?” சாஸ்திரிகள் கேட்க,

“அம்மா! அம்மா!” கதறி விட்டான் பிள்ளை மாலி.

மகள் திவ்யாவைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ராமசுப்பு மயக்க நிலையிலிருந்து மீளவில்லை.

வாசலில் வந்து நின்றது காராம் பசு. கழுத்தில் தாம்புக் கயிறு பாதியாய்த் தொங்கிக் கொண்டிருந்தது.

கட்டிப் போடப்பட்டிருந்த மாடு கயிற்றை அறுத்துக் கொண்டு ஓடி வந்ததுபோல் தோன்றியது காராம் பசுவைப் பார்த்தால்.

“அம்மா!” ஓங்காரமாய் சப்தமாய்க் கத்தியது. கொஞ்சமளவே திறந்திருந்த கேட்டின் வழியே உடலை நுழைத்து உள்ளே வர முயற்சித்தது. முடியவில்லை.
கொம்பால் கேட்டை முட்டியது.

மீண்டும் “அம்மா!” என்று பலம் கொண்ட மட்டும் சப்தமாய்க் கத்தியது. கேட்டை முட்டி முட்டி சப்தமெழுப்பி அங்கே நிற்பவர்களைக் கேட்டைத் திறந்து விடும்படி சொல்லாமல் சொல்லியது.

“டேய் கணேசா! மாமியாத்துக்கு தினமும் வரும் காராம் பசுடா! மாமி இறந்துட்டான்னு அதுக்குத் தெரிஞ்சிடுத்துப் போலருக்கு. மாமியப் பாக்கத் தாண்டா உள்ளே வர முயற்சிக்குது. பசுமாடு தெய்வமில்லியா? அதுக்கு எல்லாந் தெரியும்டா!

கேட்டத் தொறந்து விடு. என்ன செய்யுதுன்னு பாப்பம். பாத்தா கவணேல கட்டிப் போட்டிருந்தது அறுத்துகிட்டு வந்தாப்ல தெரியுது.

நிச்சயமா கடேசியா மாமிய பாக்க தாண்டா வந்ருக்கும். அதான் இப்பிடி தவிக்குது கத்துது என்று சொல்ல, கணேசன் என்று அழைக்கப்பட்டவர் கேட்டைத் திறந்துவிட, கழுத்துமணி சப்தமெழுப்ப, சட்டென உள்ளே நுழைந்த காராம் பசு ‘ஜிங் ஜிங்’கென நடந்து துளியும் தயக்கமின்றி மாமியின் வீட்டிற்குள் நுழைந்தது.

சுற்றி நின்றவர்களெல்லாம் அங்குமிங்கும் ஓடி நின்றார்கள்.

மாமி கால் நீட்டிப் படுத்திருக்கும் கண்ணாடிப் பெட்டியருகில் சென்று மாமியையே பார்த்தபடி நின்றது காராம்பசு.

கண்களிலிருந்து தாரை தாரையாய்க் கண்ணீர் வடிந்தது.அப்படியே முன்னங்கால்களை மடக்கித் தரையில் அமர்ந்தது. தலை தரையை நோக்க பத்து நிமிடம் அசையாமல் அப்படியே அமர்ந்திருந்தது.

வீடு அப்படியே நிசப்தத்தில் ஆழ்ந்திருந்தது. அனைவரின் செல்ஃபோனிலும் அங்கு நடந்த அனைத்தும் வீடியோவாய்ப் பதிவாகியது.

சட்டென எழுந்தது காராம் பசு. யுடர்ன் அடித்துத் திரும்பி வாசலை நோக்கி நடந்தது. நடையில் தொய்வு தளர்வு தெரிந்தது.

திரும்பிக்கூடப் பார்க்காமல் தளர்ந்த நடையோடு கேட்டைத் தாண்டி தெருவில் இறங்கி நடந்து செல்லும் காராம் பசுவை அதன் பின்னாலேயே வாசல்வரை வந்தவர்கள் அதிசயமாய்ப் பார்த்தனர்.

அவர்களின் கரங்கள் தாமாகவே பசுவைக் கையெடுத்துக் கும்பிட்டன.

“தெய்வப் பசு” என்றன அவர்கள் உதடுகள்.

மாமியும்கூட அனைவரின் மனதிலும் தெய்வமாக உறைந்து போனார்.

‘கமலா மாமிக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த காராம் பசு’ என்ற தலைப்போடு
டிவி சேனல்கள் அன்றும் மறுநாளும் தொடர்ந்து ஒளிபரப்பு செய்து கொண்டே
இருக்க, வாட்ஸப்பில் வீடியோ வைரலாகிக் கொண்டிருந்தது.

எனக்கு வாட்ஸாப்பில் காராம் பசு வீடியோ வந்தாச்சு. உங்களுக்கு?

காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்
காஞ்சிபுரம்